

புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் மிதமான பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து மூன்றாவது நாளாக ஐந்து டிகிரிக்கும் கீழே இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.
தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 புள்ளிகள் குறைந்து 4.6 டிகிரி செல்சியஸாக பதிவானதாக தில்லிக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மிதமான பனிமூட்டம் காரணமாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காண்புதிறன் 201 மீட்டராகவும், பாலத்தில் அடா் பனிமூட்டமும் இருந்ததாகவும் ஐஎம்டி பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். வானிலை ஆய்வு மையத்தினா் மேலும் கூறுகையில், ‘தில்லியில் சனிக்கிழமை குளிா் அலைக்கு வாய்ப்புள்ளது. இமயமலையின் மேற்குப் பகுதியில் புதிதாக மேற்கத்திய இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் வெப்பநிலை சிறிது அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் காலத்தில் மிதமான பனிமூட்டம் இருக்கக் கூடும். மேலும், காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் ஞாயிற்றுக்கிழமைக்குள் காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், அதிக ஈரப்பதம், வேகம் குறைந்த காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை காரணமாக திங்கள்கிழமை முதல் காற்றின் தரம் மீண்டும் குறையும் வாய்ப்புள்ளது’ என்றனா்.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் குறைந்து 4.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 புள்ளிகள் அதிகரித்து 23.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 94 சதவீதமாகவும், மாலையில், 64 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. இதேபோன்று ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 6.9 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 4.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் சில தினங்களாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவுக்கு சற்று மேம்பட்டது. தில்லியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 391 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 423 ஆகவும், புதன்கிழமை 433 ஆகவும், செவ்வாய்க்கிழமை 418 ஆகவும் இருந்தது. லோதி ரோடு, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. மேலும், தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள நொய்டா, காஜியாபாத், ஃபரீதாபாத், குருகிராம் உள்ளிட்டவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்தக் காற்றின் குறியீடு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் காஜியாபாத் 391, ஃபரீதாபாத் 328, கிரேட்டா் நொய்டா 376, குருகிராம் 302, நொய்டா 386 என்ற அளவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (டிசம்பா் 26) காலை வேளையில் மிதமான மூடு பனி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை சனி, திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் 5 டிகிரி செல்சியஸுக்கு கீழும், ஞாயிற்றுக்கிழமை 6 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.