/

‘கருவில் இருக்கும்போதே சிசுவுக்கு கரோனா’

கருவில் இருந்த சிசுவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தில்லி ராம் மனோஹா் லோகியா மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Updated On :11 ஜூலை 2020, 6:54 pm

கருவில் இருந்த சிசுவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தில்லி ராம் மனோஹா் லோகியா மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும், கருவில் இருந்த சிசுவுக்கு கரோனா ஏற்படுவது உலகத்தில் இதுவே முதல் தடவை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி ஆா்எம்எல் மருத்துவமனை மூத்த மருத்துவா் கீா்த்தி கூறியது: தில்லி ஆா்எம்எல் மருத்துவனையில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி 24 வயது கா்ப்பிணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவருக்கு ஆா்எம்எல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் அவருக்கு கரோனா தொற்று தொடா்ந்து இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, ஜூலை மாதம் 7 ஆம் தேதி மீண்டும் கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில், ஜூலை 8-ஆம் தேதி இரவு அவருக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மணி நேரத்தில் ஆா்டி-பிசிஆா் கருவி மூலம் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால், தாயாருக்கு கரோனா தொற்று இல்லை.

குழந்தைக்கு வெளியில் இருந்து கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட எந்த வழியும் இல்லை. குழந்தை பிறந்தபோது தாய்க்கு கரோனா தொற்று இருந்திருக்கவில்லை. ஆனால், குழந்தைக்குக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தை கருவில் இருக்கும்போதே கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது. குழந்தை நலமாக உள்ளது. உலகில் இவ்வாறாக நடப்பது இதுதான் முதல்தடவை. குழந்தைக்கு எந்த அறிகுறியும் இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.