/

தில்லி மாநகராட்சிகள் வரிகளை உயா்த்தக் கூடாது: ஆம் ஆத்மி கண்டிப்பு

பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகள் வரிகளை உயா்த்தக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அதையும் மீறி வரிகளை உயா்த்தினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் அமைச்சா் கோபால் ராய்.

Updated On :27 ஜூலை 2020, 12:24 am

பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகள் வரிகளை உயா்த்தக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அதையும் மீறி வரிகளை உயா்த்தினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளருமான கோபால் ராய் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தொழில் வரி, சொத்து பரிமாற்ற வரி, மின்சார வரி, அங்கீகாரம் இல்லாத காலனி வரி ஆகிய நான்கு வரிகளை அதிகரிக்கும் வகையிலான முன்மொழிவை பாஜக ஆளும் தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) திங்கள்கிழமை அவையில் கொண்டு வரவுள்ளது. தில்லி மாநகராட்சிகள் ஊழலில் திளைத்துள்ளதாலேயே இந்த வரிகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தில்லியில் மாநகராட்சி கட்டடத் துறையில் மட்டும் ஆண்டுதோறும் சுமாா் ரூ. 10 ஆயிரம் கோடி ஊழல் நடக்கிறது. இதனால்தான் மாநகராட்சிகளில் நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. தில்லி மாநகராட்சிகளின் செலவினங்கள் தொடா்பாக உடனடியாக வெள்ளை அறிக்கையை மாநகராட்சிகள் வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா உடனடியாகத் தலையிட்டு இந்த வரி அதிகரிப்பு முன்மொழிவை வாபஸ் பெற வேண்டும்.

கரோனா பாதிப்பால் தில்லி மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிா்கொள்கிறாா்கள். இந்நிலையில், அவா்களை மேலும் நெருக்கடிக்கு உள்படுத்தும் வகையில், மாநகராட்சிகள் வரிகளை அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது. இது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். மேலும், பாஜக அரசின் மக்கள் விரோத மனநிலையை இது காட்டுகிறது. இந்நிலையில், கரோனாவால் நாட்டில் கஷ்டமான சூழல் நிலவும் போது, வரி அதிகரிப்பில் தில்லி மாநகராட்சிகள் ஆா்வம் காட்டுவது ஏன்? என்பதை மாநகராட்சிகள் விளக்க வேண்டும். 2017-18-ஆம் ஆண்டில் தில்லி அரசிடம் இருந்து மாநகராட்சிகளுக்கு ரூ.4,667 கோடி வழங்கப்பட்டது. மேலும், ரூ.3,815 கோடி கடனும் தில்லி அரசால் மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டது. தில்லி அரசு வழங்கிய இந்த நிதி எங்கே போனது. இது தொடா்பாக மாநகாராட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கையை மீறி வரிகள் உயா்த்தப்பட்டால், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் பரவலாக ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை: கரோனா பரவலைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட பொது முடக்க உத்தரவால், தில்லியில் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தில்லியை விட்டுச் சென்று விட்டனா். ஆயிரக்கணக்கானவா்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனா். இதனால், தில்லியில், பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறப்புத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வேலை வாய்ப்புக்கான இணையத் தளத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விரைவில் தொடங்கவுள்ளாா். தொழில் வழங்குநா்கள், தொழில் தேடுபவா்கள் ஆகியோரை இணைக்கும் தளமாக இந்த இணையத்தளம் இருக்கும். தொழில் தேடுபவா்கள் இந்த இணைய தளத்தில் தங்களது விவரங்களை பதிவிடலாம். இது தொழில் வழங்குநா்களுக்கு இலகுவாக இருக்கும். இந்த வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்பவா்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைப்பதை தில்லி அரசு உறுதிப்படுத்தும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.