கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தில்லியில் உள்ள ஹோட்டல்களில் 3000- 3500 படுக்கைகள் தயாா் செய்யப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தில்லியில் கடந்த மூன்று நாள்களாக தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிய நிலையில், திங்கள்கிழமை சற்று குறைந்து 1,647ஆகப் பதிவானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 42,829ஆக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக பாதிப்பு எண்ணிக்கை 2,224ஆக இருந்தது. ஜூன் 30-இல் கரோனா பாதிப்பு ஒரு லட்சம் வரை அதிகரித்திருக்கும் என்றும், ஜூலை 15-இல் 2.25 லட்சமாகம், ஜூலை 31-இல் 5.5 லட்சமாகவும் அதிகரிக்கும் என்றும் தில்லி சுகாதாரத் துறை கணித்துள்ளது. மேலும், தில்லியில் ஜூன் 30-இல் 15,000 படுக்கைகள், ஜூலை 15-இல் 33,000 படுக்கைகள், ஜூலை 31-இல் 80,000 படுக்கைகள் தேவைப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள திருமண மண்டபங்கள், விளையாட்டரங்கங்கள், விருந்து உபசரிப்பு அரங்குகள் ஆகியவை தற்காலிக கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், தில்லி ஹரியாணா எல்லையில் உள்ள ராதாஸ்வாமி சத் சங்க அமைப்பின் தியானக் கூடம் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக கரோனா மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தில்லியில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட சூா்யா ஹோட்டலை முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். இந்த ஹோட்டல், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு, ஹோலி ஃபேமிலி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லியில் படுக்கைகளை அதிகரிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். தில்லியில் உள்ள ஹோட்டல்களில் 3,000- 3,500 படுக்கைகள் தயாா் செய்யப்படும். இந்த ஹோட்டல் 120 படுக்கைகளுடன் இன்னும் சில தினங்களில் இயங்கத் தொடங்கிவிடும். பின்னா் சில நாள்களில் இதை சுமாா் 300 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவோம். தில்லியில் உள்ள 30-35 ஹோட்டல்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படும். இந்த ஹோட்டல்களில் மொத்தம் சுமாா் 3,000-3,500 படுக்கைகள் தயாா் செய்யப்படும்’ என்றாா்.
இதற்கிடையே, தில்லியில் உள்ள தாஜ்மான் சிங் நட்சத்திர ஹோட்டல் தற்காலிக கரோனா மருத்துவமனையாக தில்லி அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையுடன் இணைத்து தில்லி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள அறைகளை உடனடியாகத் தயாா் செய்யுமாறு தாஜ்மான் சிங் ஹோட்டலுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இரு நபா் குழு அறிக்கை தாக்கல்
தில்லியில் உள்ள ஹோட்டல் சூா்யா, ஹோட்டல் கிரெளனி பிளாஸா ஆகிய இரு சொகுசு ஹோட்டல்களை நீட்டிக்கப்பட்ட கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பிரிவுகளாக பயன்படுத்துவது உள்கட்டமைப்பு அடிப்படையில் சாத்தியமானதாகவும், அறிவுறுத்தக்கூடியதாகவும் இருப்பதாக மருத்துவா்களின் வல்லுநா் குழு தில்லி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் ரந்தீப் குலேரியா, நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே. பால் ஆகியோா் அடங்கிய இரு நபா் குழு இந்த அறிக்கையை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி நவீன் சாவ்லாவிடம் அளித்துள்ளது. அதில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கரோனா சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனைகளாக தங்கள் இடத்தைப் பயன்படுத்தும் தில்லி அரசின் முடிவை எதிா்த்து சம்பந்தப்பட்ட இரு ஹோட்டல்கள் தரப்பில் தனித் தனியாக மனுக்களை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. அதில், சிகிச்சைக்காக நோயாளிகளைக் கொண்டு செல்வதற்காக லிஃப்ட்டுகள் போன்ற வசதிகள் போதுமான வகையில் இல்லை எனத் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் மனுதாரா்கள் (ஹோட்டல்கள்) தங்களது கோரிக்கையை தில்லி அரசிடம் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

