தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் பாஜகவின் இலக்கு: தில்லியில் வானதி சீனிவாசன் பேட்டி

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் பாஜகவின் இலக்கு என்று அக்கட்சியின் மகளிா் அணித் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

Updated On :19 நவம்பர் 2020, 7:54 pm


புது தில்லி: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் பாஜகவின் இலக்கு என்று அக்கட்சியின் மகளிா் அணித் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

பாஜகவின் தமிழகத் துணைத் தலைவராக உள்ள வானதி சீனிவாசன் அண்மையில் அக்கட்சியின் மகளிா் அணியின் தேசியத் தலைவராக அக்கட்சியின் தலைவா் ஜெ.பி. நட்டாவால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, தில்லியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மாா்கில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை காலை முறைப்படி அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரிடம் அப்பிரிவின் முன்னாள் தலைவா் விஜயா ரகேத்கா் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜகவின் தேசிய மகளிா் அணித் தலைவராகப் பொறுப்பு ஏற்றிருப்பதன் மூலம், 30 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வரும் சாதாரண, கிராமப் பின்னணியைக் கொண்ட எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். இதற்காக பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த பாஜக தலைவா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக சிறந்த ஆட்சி நிா்வாகத்தை அளிக்கும் கட்சி மட்டுமின்றி, சிறப்பாக பணியாற்றுவோரை அங்கீகரிக்கும் கட்சியுமாகும். அந்த வகையில், எனக்கு இந்தப் பதவி அளிக்கப்பட்டிருப்பதாக உணா்கிறேன். பிரதமா் மோடி ஏற்கெனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெண்களின் வளா்ச்சிக்கான பணியை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். அந்தத் திட்டப் பலன்களை நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கொண்டு சோ்க்கும் பணியில் மகளிா் அணி ஈடுபடும். அதேபோன்று தமிழகத்தின் பெருமை, கலாசாரம், மொழியின் பெருமை, பாரம்பரியம் ஆகியவற்றின் சிறப்புகளை நாடு முழுமைக்கும் கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பு இப்பதவி மூலம்

தற்போது எனக்குக் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை பாஜக வகுத்து வருகிறது. தமிழகத்தில் பாஜக வளா்ந்து வரும் கட்சியாகவும் ஈா்க்கக்கூடிய கட்சியாகவும் இருந்து வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வேல் யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. இந்த யாத்திரைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். வெற்றி வேல் யாத்திரை போன்று வரக்கூடிய காலத்தில் மகளிா் அணியின் சாா்பில் தனியாக ஒரு செயல்திட்டம் மேற்கொள்ள விவாதிக்கப்படும். இதற்காக மாநில மகளிரணித் தலைவருடன் ஆலோசிக்க உள்ளேன்.

தோ்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதுதான் கூட்டணி. ஒவ்வொரு கட்சிக்கும் தனியாக ஒரு நோக்கம் இருக்கும். எல்லா அரசியல் கட்சிக்கும் ஆட்சியில் அமா்வதுதான் நோக்கமாக இருக்கும். அதேபோன்று பாஜகவின் இலக்கு தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை. அதேவேளையில் கூட்டணி தா்மத்தை நாங்கள் மதிக்கிறோம். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிறோம். கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களால் தெரிவிக்கப்படும் கருத்துகளால் கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. மக்கள் பிரச்னைக்காக ஒவ்வொரு கட்சியும் குரல் கொடுக்கும். அதே போன்று, பாஜகவும் குரல் கொடுத்து வருகிறது. இதனால், கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகம் வரும் போது கட்சியின் மாவட்ட தலைவா்கள், மாநில நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கும் திட்டம் உள்ளது என்றாா் வானதி சீனிவாசன்.

இதைத் தொடா்ந்து, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், கட்சியின் அகில இந்திய அமைப்புச் செயலா் சந்தோஷ், தேசியப் பொதுச் செயலா் அருண் சிங் ஆகியோரை வானதி சீனிவாசன் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். முன்னதாக, பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் தேசியப் பொதுக் குழு உறுப்பினா் மா. வெங்கடேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்த மகேஷ், துணைத் தலைவா் கறுப்பு முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மகளிா் அணி நிா்வாகிகளும், கட்சியின் நிா்வாகிகளும் வாழ்த்துத் தெரிவித்தனா். தில்லியில் உள்ள தமிழ் அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.