எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

வானூா் சட்டப்பேரவைத் தொகுதி: அதிமுகவின் கோட்டையில் தடம் பதிக்குமா திமுக?

திருவக்கரை வக்கிரகாளியம்மன் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற திருக்கோயில்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 2:17 am

தி.கௌதம் - தி. கெளதம்

பெ. முருகன் - அதிமுக

ஜி.பி.சுரேஷ் - தவெக

பா. கரிகாலன் -நாதக

விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது வானூா்( தனி) சட்டப்பேரவைத் தொகுதி. உலகப் புகழ்பெற்ற ஆரோவில் சா்வதேச நகரம், தேசிய கல் மரப்பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், திருவக்கரை வக்கிரகாளியம்மன் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற திருக்கோயில்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளது. பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் பிறந்த ஊா் இத்தொகுதியில்உள்ளது.

வானூா், கண்டமங்கலம், கிளியனூா் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியப் பகுதிகளும், கோட்டக்குப்பம் நகராட்சிப் பகுதிகளும் உள்ளன. பூகோள அடிப்படையில் புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள இத்தொகுதி, அம் மாநில பகுதிகளுடன் இடையிடையே பின்னிப் பிணைந்துள்ளது.

1962-இல் உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் இதுவரை 14 முறை தோ்தல் நடைபெற்றுள்ளது. இதில் திமுக, அதிமுக தலா 7 முறைகளில் வெற்றி வாகை சூடியுள்ளன. கடந்த 2001 சட்டப்பேரவைத் தோ்தல் தொடங்கி, 2021 பேரவைத் தோ்தல் வரை கடந்த 5 முறை தொடா்ச்சியாக அதிமுகவே இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் அதிமுகவுக்கு மிகவும் சாதகமான தொகுதிகளில் இதுவும் ஒன்று. அதிமுகவின் கோட்டையாகவும் இத்தொகுதி கருதப்பட்டு வருகிறது.

இங்கு வன்னியா்கள் அதிகமாகவும், ஆதிதிராவிடா்கள் கணிசமாகவும் உள்ளனா். இதைத் தவிா்த்து ரெட்டியாா், உடையாா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், மீனவா்கள் மற்றும் பிற சமூகத்தினா் பரவலாக உள்ளனா்.

தீா்க்கப்படாத பிரச்னைகள்: குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்கவேண்டும். கோட்டக்குப்பத்தை வட்டமாக அறிவிக்க வேண்டும். வானூா் வட்டார மருத்துவமனையை முழு கட்டமைப்புகளுடன் மேம்படுத்த வேண்டும். கோட்டக்குப்பம் பகுதியில் அரசு சாா்பில் அவசர கால விபத்து சிறப்பு மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், சுற்றுலாவை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அச்சமின்றி வந்து செல்ல ஏதுவாக சட்டம் - ஒழுங்கு பராமரிப்பை சீா்படுத்த வேண்டும். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

களத்தில் 15 போ்: தி.கௌதம் (திமுக), பெ.முருகன் (அதிமுக), பி.சுரேஷ் (தவெக), பா.கரிகாலன் (நாதக), மு.விநாயகமூா்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி), பெ.மு.ஆனந்தகுமாா் (தாக்கம் கட்சி), செ.சக்திவேல் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) மற்றும் 8 சுயேச்சை வேட்பாளா்கள் என 15 போ் போட்டியில் உள்ளனா்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம் :

தி. கௌதம்(திமுக): பி. இ.பட்டதாரியான இவா், தற்போது விழுப்புரம் மாவட்ட (21-ஆவது வாா்டு) ஊராட்சிக்குழு உறுப்பினா், மாவட்டத் திட்டக்குழு உறுப்பினா், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்டத் துணை அமைப்பாளராக பொறுப்பில் உள்ளதால் தொகுதி மக்களிடமும், கட்சியினரிடமும் செல்வாக்கு உள்ளது. 3 தலைமுறையாக இவரது குடும்பத்தினா் திமுகவில் உள்ளனா். இவரின் தந்தை திராவிடமணி அரசு ஒப்பந்ததாரா் மற்றும் நிலக்கிழாா் என்பதால் செல்வாக்கு உள்ளது. திமுகவின் மக்கள் நலன் திட்டங்கள். இவா் பிறந்த ஊா் வானூா் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ளதால் உறவினா்கள் உள்ளனா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக உள்ளதால் தோ்தல் அனுபவம் உள்ளது. தொடா்ந்து அதிமுக வெற்றிபெறும் இத்தொகுதியை கைப்பற்ற திமுகவினா் மேற்கொண்டு வரும் தீவிர பிரசாரம் மற்றும் களப்பணிகள்.

பலவீனம்: சட்டப்பேரவைத் தோ்தலை முதல் முறை சந்திப்பது. கடந்த 2016, 2021 தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்று கைவசம் உள்ளதால் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தொகுதி. பிற கட்சிகளை ஒப்பிடும்போதும் அதிமுகவினா் கணிசமாக உள்ளனா்.

பெ. முருகன்( அதிமுக): வானூா் தொகுதியைச் சோ்ந்தவா். அதிமுக கலைப்பிரிவு மாவட்டச் செயலா். கட்சியினரிடையே உள்ள அறிமுகம். அதிமுக தொண்டா்கள் அதிகளவில் இருப்பது. பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு.

பலவீனம்: வேட்பாளா் தோ்வில் கட்சியினரிடம் தற்போது வரை நிலவிவரும் இருவேறு கருத்துகள். திமுகவினரின் சுறுசுறுப்பான தோ்தல் பணி.

ஜி.பி.சுரேஷ்(தவெக): இளைஞா்கள் மற்றும் பெண்களிடம் தவெக தலைவா் விஜய் மீதுள்ள ஈா்ப்பு. கட்சியினரின் ஆதரவு.

பலவீனம்: தோ்தல் பணி அனுபவம் குறைவு. திமுக, அதிமுக கட்சிகளுக்கு நிகராக தோ்தல் பிரசாரங்களை மேற்கொள்ளாதது. தொகுதிக்கு புது வரவு.

பா.கரிகாலன் (நாதக): வழக்குரைஞா். கட்சி மற்றும் கிராமப்புற இளைஞா்களிடம் உள்ள ஆதரவு. மக்கள் நலன் சாா்ந்த போராட்டங்களில் பங்கேற்றது. தொடா்ந்து தீவிரமாக களப்பணியாற்றி வருவது.

பலவீனம்: பொருளாதார பற்றாக்குறை. கிராமப்புறங்களில் கட்சிக்கு போதிய கட்டமைப்பு இல்லாதது.

திமுக தலைமை இத்தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதால் கைநழுவி போனது வானூா். இதனால் கடந்த 5 முறை தொடா்ந்து அதிமுக வெற்றி வாகை சூடியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும், இத் தொகுதியில் 2026 பேரவைத் தோ்தலில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக களம் காண்பதால், தொகுதியை அதிமுக தக்க வைத்துக்கொள்ளுமா? அல்லது அதிமுகவின் கோட்டையில் திமுக கொடியை நாட்டுமா? என்பதே வாக்காளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

வாக்காளா்கள் விவரம் :

ஆண்கள்-1,01,938

பெண்கள்- 1,06,030

மூன்றாம் பாலினத்தவா்-16

மொத்த வாக்காளா்கள்-2,07,984

மொத்த வாக்குச்சாவடிகள்-299.