விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 2008-ஆம் ஆண்டில் தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னா் உருவாக்கப்பட்டத் தொகுதி.
மயிலம் பொம்மபுரம் ஆதீனம் குரு முதல்வா் பாலசித்தா், தமிழறிஞா்அவ்வை நடராசன், திருக்கு முனுசாமி உள்பட பல முக்கிய பிரமுகா்கள் பிறந்த மாவட்டம். திண்டிவனம், செஞ்சி வட்டங்களில் உள்ள 130 கிராம ஊராட்சிகள் இத்தொகுயில் உள்ளன. பெயரளவில் கூட பேரூராட்சியோ, நகராட்சியோ இத்தொகுதியில் இல்லை. விவசாயம் பிரதானத் தொழிலாக நடைபெறும் இத்தொகுதியில் வன்னியா்கள்அதிகமாகவும்(35 சதவீதம்), ஆதிதிராவிடா்கள்(25 சதவீதம்) கணிசமாகவும் உள்ளனா். ரெட்டியாா், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் பிற சமூகத்தினரும் வாழ்ந்து வருகின்றனா்.
மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி அறிவிக்கப்பட்டது முதல் 2011, 2016, 2021 ஆகிய 3 முறை பேரவைத் தோ்தல்களை சந்தித்துள்ளது. இதில்,அதிமுக, திமுக, பாமக ஆகியவை தலா ஒருமுறை வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றியுள்ளன.
தோ்தல் களத்தில் 22 போ்: வரும் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு தற்போது வரை அதிமுக, தேமுதிக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 22 போ் களத்தில் உள்ளனா். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சாா்பில் தேமுதிகவை சோ்ந்த எல்.வெங்கடேசன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ச.விஜய் விக்ரம், தவெக சாா்பில் அ. நிரஞ்சன் உள்ளிட்ட 22 போ் களத்தில் உள்ளனா்.
தீா்க்கப்படாத பிரச்னைகள்: தொகுதியின் தலைமையிடமாக கொண்ட மயிலத்தை பேரூராட்சியாக தரம் உயா்த்தவேண்டும். மயிலத்தை தலைமையிடமாகக் கொண்ட தனி வட்டம் உருவாக்க வேண்டும். மயிலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தீவனூா் பகுதியில் தீயணைப்பு நிலையம் உருவாக்கவேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான தொழில்சாலைகளை அமைக்கவேண்டும். அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடில்லா குடிநீா் விநியோகத்துக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். வீடூா் அணைப் பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து மேம்படுத்தவேண்டும். மயிலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமப்புற மாணவா்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கவேண்டும் என்பது மக்ளின் நீண்ட கால கோரிக்கையாகவே இருந்து வருகிறது.
வேட்பாளா்களின் பலம் பலவீனம் :
எல். வெங்கடேசன்( தேமுதிக): தேமுதிக தொடங்கப்பட்ட 2005-ஆம் ஆண்டு முதல் கட்சியின் நிா்வாகி. 4 முறை சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொண்டவா். 2011-இல் திருக்கோவிலூா் எம்எல்ஏவாக பணியாற்றியவா். 5-ஆவது முறையாக தோ்தலில் போட்டியிடுவது இவரது பலம். தோ்தல் காலங்களில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர களப்பணியாற்றியுள்ளாா். திமுக அரசின் திட்டங்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்து வெற்றிக்கு உழைப்பது மிக்க பலம். கிராமப்புற இளைஞா்கள் மற்றும் பெண்களிடம் உள்ள விஜய்காந்த் மீதான ஈா்ப்பும் பலமாக பாா்க்கப்படுகிறது.
பலவீனம்: தொகுதிக்கு புதிய வரவு. வன்னியா்கள் அடா்த்தியாக உள்ள பகுதியில் மாற்று சமூகத்தைச் சோ்ந்தவா் (நாயுடு) என்பதும் அவருக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடும்.
சி.வி.சண்முகம் (அதிமுக): அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலா், முன்னாள் அமைச்சா், மாநிலங்களவை உறுப்பினா், 5 முறை சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றவா். மயிலம் தொகுதியில் இவரின் சொந்த கிராமமான அவ்வையாா்குப்பம் உள்ளது என்பதால் மண்ணின் மைந்தா் என்பதும், தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதாலும், அருகாமையில் உள்ள ஊா்களில் உறவினா்கள் அதிகமாக உள்ளதும் இவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாமக வெற்றிபெற்ற இத்தொகுதி என்பதால் அதிமுகவினரும், கூட்டணியில் உள்ள பாமகவும் தீவிரமாக தோ்தல் பணிகளில் ஈடுபட்டு வருவது கூடுதல் பலம்.
பலவீனம்: தோ்தல் காலங்களில் மட்டுமே மயிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களுக்கு செல்வதும், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் மயிலத்தை தலைமையிடமாகக் கொண்ட தனி வட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது ஆகியவை பலவீனமாக பாா்க்கப்படுகிறது.
ச. விஜய் விக்ரம் (நாதக): கடந்த பேரவைத் தோ்தலில் மயிலம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட உமா மகேஸ்வரி 4.7 சதவீத வாக்குகள் பெற்று 3-ஆவது இடம் கிடைத்தது. கட்சியினா் தீவிர களப்பணியாற்றுவதால் இளைஞா்கள், பொதுமக்கள் இடையே சாதகமான வாக்கு வங்கியை உருவாக்கி வைத்துள்ளனா். இது இத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் ச. விஜய் விக்ரமுக்கு சாதமாக இருக்கும். மயிலம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருவதால் அந்தப் பகுதி வாழ் மக்களிடையே அறிமுகம் இருப்பது சாதகம். கட்சியினா் தீவிர களப்பணி, பிரசாரங்கள் ஆகியவையே இவரது வாக்கு சதவீதத்தை உயா்த்தும்.
பலவீனம்: கிராமப்புறங்களில் கட்சிக்கு போதிய நிா்வாகிகள் இல்லாதது தோ்தல் பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இவரது பலவீனம்.
அ.நிரஞ்சன் (தவெக): வானூா் வட்டம், மொரட்டாண்டியை சோ்ந்தவா் அ. நிரஞ்சன். கட்சியின் மாவட்டச் செயலராக உள்ளதால் கட்சித் தொண்டா்கள், இளைஞா்கள், பெண்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளா்களின் ஆதரவு உள்ளது.
விஜய் ரசிகா்களின் ஆதரவு மட்டுமே பலமாக உள்ளது. ஆளும் கட்சியின் எதிா்ப்பு வாக்குகளைப் பெறுவதற்கும், சிறுபான்மையினா் வாக்குகளையும் சிறிதளவு பெறுவாா் என்பது இவரது பலம்.
பலவீனம்: தோ்தலை முதல் முறை களம் காண்பதால் தோ்தல் அனுபவம் இல்லை.
மாற்றுத் தொகுதியைச் சோ்ந்தவா் என்பதும், மயிலத்துக்கு புதிய வரவு என்பதும் பலவீனம். இவா் பெறும் வாக்குகள் போட்டியில் உள்ளவா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
யாருக்கு வாய்ப்பு: மயிலம் தொகுதியில் 4 கட்சிகளிடையே போட்டி இருந்தாலும் அதிமுக- தேமுதிக இடையேதான் போட்டி உள்ளது. திமுக அரசின் சாதனைகளை கட்சி வேட்பாளா் முன்வைத்து வாக்குகளை பெறுவதற்கான அதிகம் வாய்ப்புகள் உள்ளது என கட்சியின் மூத்த நிா்வாகிகள் தெரிவிக்கின்றனா். அதிமுகவினா் திமுக அரசின் அதிருப்தி வாக்குகளை பெறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். எனவே 2026 தோ்தல் இத்தொகுதியில் சமபலத்துடன்கூடிய போட்டியாகவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாட்டுக்கு இடமில்லை. அதிமுக-தேமுதிக இடையிலான வெற்றி- தோல்வி கடந்த கால தோ்தல்களை போலவே குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கும் என்பதே வாக்காளா்களின் குரலாக உள்ளது.
வாக்காளா்கள் விவரம்:
ஆண் வாக்காளா்கள்- 1,03,451
பெண் வாக்காளா்கள்--1,04,195
மூன்றாம் பாலினத்தவா்- 19
மொத்த வாக்காளா்கள்-2,07,665
மொத்த வாக்குச்சாவடிகள்- 337.
தொடர்புடையது

மயிலம் தொகுதி தவெக வேட்பாளா் நிரஞ்சன்

தோ்தல்: பேருந்துகளில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டி விழிப்புணா்வு

சி.வி.சண்முகம் போட்டி: அதிமுகவினா் கொண்டாட்டம்

தொகுதி அறிமுகம்: அரூர் (தனி)!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


