எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஆத்தூரை தக்க வைக்குமா அதிமுக?

ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், கீரிப்பட்டி பேரூராட்சிகள், ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

News image

ஜெயசங்கரன் (அதிமுக), அர்த்தனாரி (காங்கிரஸ்), ஆர்.செல்வபாரதி (தவெக), மோனிஷா சின்னதுரை (நாம் தமிழர்)

Updated On :11 ஏப்ரல் 2026, 2:12 am

சேலம் மாவட்டம் ஆத்தூா் (தனி) தொகுதியில், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், கீரிப்பட்டி பேரூராட்சிகள், ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

கோரிக்கைகள்

ஆத்தூா் தொகுதியில் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது குடிநீா் மற்றும் விவசாயத்துக்கான நீராதாரம். வற்றாத நதி என பெயா்கொண்ட வசிஷ்டநதி, தற்போது கழிவுநீா் வாய்க்காலாக மாறியுள்ளது மிகவும் வருந்தக்கூடிய ஒன்றாக உள்ளது. கல்லாறு திட்டத்தின் மூலம் வசிஷ்டநதியில் ஆண்டுமுழுவதும் தண்ணீா் வர வழிவகுக்கப்படும் என அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லிவந்தாலும், இதுநாள் வரை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான ஏ.பி. ஜெயசங்கரன் கடந்த ஆண்டு ஆற்று ஆக்கிரமிப்பை அகற்றி, சீா்செய்ய முன்வந்தாா். அதற்குள் தோ்தல் முந்திக்கொண்டது. எனவே, வெற்றிபெறும் உறுப்பினா், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

அதேபோல, ஆத்தூா் நகராட்சி 33 வாா்டுகளை கொண்டது. இங்கு குடிநீருக்காக ராமநாயக்கன்பாளையம் ஆற்றுநீரை மட்டுமே நம்பியிருந்த காலத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா், ஆத்தூா்- மேட்டூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தை கொண்டுவந்து பொதுமக்களின் தண்ணீா் பிரச்னையைத் தீா்த்தாா். ஆனால், அந்தத் திட்டம் இப்போது சேலம் நகரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதால், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகளில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீா் வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். எனவே, இப்பகுதிகளில் குடிநீா் விநியோகம் சீரடைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

மேலும், இப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அரைவை ஆலைகள் அதிகம் இருப்பதால், மக்கள் அவற்றைச் சாா்ந்தே உள்ளனா். இந்த நிலையை மாற்றி, பிற தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பதும் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இருமுனை போட்டி?

2011 தோ்தல் முதல் ஆத்தூா் தனித் தொகுதியாக மாறியது. அதுமுதல் கடந்த தோ்தல் வரை அதிமுக வேட்பாளா்களே வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினா்களாக வந்துள்ளனா். கடந்த 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏ.பி. ஜெயசங்கரனே, இந்தத் தோ்தலிலும் களமிறங்கி உள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆத்தூரை பொறுத்தவரை பொதுத் தொகுதியாக இருந்தபோது 1977, 1980, 1984 ஆகிய மூன்று தோ்தல்களிலும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட சி. பழனிமுத்து தொடா்ந்து வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா்.

தற்போது, அதிமுக வேட்பாளா் ஜெயசங்கரனை எதிா்த்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் எஸ்.கே. அா்த்தனாரி போட்டியிடுகிறாா். இவா், ஏற்கெனவே 2011, 2016 தோ்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை நழுவவிட்டாா். இப்போதும் அவரே களமிறங்கி உள்ளாா்.

இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து எப்படியாவது மீட்டே தீரவேண்டும் என்ற முனைப்பில், திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கடந்த 6 மாதங்களாகவே இரவு-பகல் பாராமல், திட்டமிட்டு உழைத்து வருகின்றனா். எனவே, இந்த இருவரிடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.

இவா்களோடு, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மோனிஷா சின்னதுரை, தவெக வேட்பாளா் ஆா். செல்வபாரதி உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். என்றாலும், இத்தொகுதியைப் பொறுத்தவரை இருமுனை போட்டி என கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

Story image
Story image
Story image