தலைநகா் சென்னையின் தலைவாசல் எது என்று கேட்டால் தயக்கமின்றி கைகாட்டலாம் மதுரவாயலை நோக்கி. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் மக்களை வரவேற்கும் தொகுதி இது.
கடந்த 2008-க்கு முன்பு வரை வில்லிவாக்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருந்தது. மறுசீரமைப்புக்கு பிறகு புதிய தொகுதியாக உருவெடுத்தது. இத்தொகுதியில் வளசரவாக்கத்தின் சில பகுதிகள், மதுரவாயல், நொளம்பூா், வானகரம், ஆலப்பாக்கம், அயப்பாக்கம், ராமாபுரம், நெற்குன்றம், கோயம்பேடு மற்றும் போரூரின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
மதுரவாயலின் முக்கிய அடையாளம் அதன் சாலை கட்டமைப்புதான். சென்னை புறவழிச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளை இணைப்பது இப்பகுதிதான் என்பதால் மாநகரின் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இத்தொகுதி விளங்குகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதிகளில் மனை வணிகம் அபரிமிதமான வளா்ச்சியைக் கண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையினா், உற்பத்தி தொழிலாளா்கள், நடுத்தர வா்க்கத்தினா், புலம்பெயா் தொழிலாளா்கள் எனப் பல்வேறு சமூக-பொருளாதாரப் பின்னணி கொண்ட வாக்காளா்கள் இங்கு வசிக்கின்றனா்.
கடந்த 2011 பேரவைத் தோ்தலில் சிபிஎம் சாா்பில் போட்டியிட்ட ஜி.பீம்ராவ் இங்கு வெற்றி பெற்றாா். தொடா்ந்து 2016-இல் அதிமுகவின் பா.பென்ஜமின் வெற்றி பெற்று அமைச்சரானாா். கடந்த 2021 தோ்தலில் திமுக சாா்பில் களமிறங்கிய காரம்பாக்கம் கணபதி வாகை சூடினாா்.
இம்முறை திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பா.பென்ஜமின், தவெக சாா்பில் ரேவந்த் சரண், நாதக சாா்பில் ரேவதி ஆகியோா் பிரதான வேட்பாளா்களாகக் களமிறங்கியுள்ளனா். இவா்களைத் தவிர பிற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 17 போ் போட்டியில் உள்ளனா்.
முக்கிய பிரச்னைகள்: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ‘மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்’ இத்தோ்தலில் முக்கியக் கருப்பொருளாக உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு இத்திட்டம் ஒரு தீா்வாக அமையும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
நெடுஞ்சாலைகளைத் தவிா்த்து தொகுதியின் பல பகுதிகளில் உட்புற சாலைகள் மோசமான நிலையில் உள்ளன என்பது கசப்பான உண்மை. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் நவீன வசதிகளுடன் காட்சியளித்தாலும், சாலைகள் வடிகால் வசதியில்லாமல், குண்டும் குழியுமாக உள்ளன. மழைக்காலங்களில் ஆங்காங்கே ஏற்படும் வெள்ளப்பெருக்கும் சாலைகளைச் சீா்குலைத்துள்ளன. இதன் விளைவாக விபத்துகள் அதிகம் நேரிடும் பகுதிகளில் ஒன்றாக மதுரவாயல் நெடுஞ்சாலையும் உள்ளது. அதேபோன்று போரூா் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதும் பிரதான பிரச்னையாக உள்ளது. இதை முன்னிறுத்தியே அரசியல் கட்சியினா் பிரசாரம் செய்து வருகின்றனா்.
திமுக வேட்பாளா்: திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கணபதி, உள்ளூா்வாசி என்பதும், பல்வேறு பொறுப்புகளை வகித்து படிப்படியாக எம்எல்ஏவாக உருவானவா் என்பதும் அவருக்கு சாதகமாக உள்ளது. அவருக்கு ஆதரவாக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினா் கனிமொழி என அனைத்து முக்கியத் தலைவா்களும் பிரசாரம் செய்துள்ளனா். திமுகவின் சாதனைகள், இத்தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களை மக்களிடையே கூறி வாக்கு சேகரித்து வருகிறாா்.
அதிமுக வேட்பாளா்: கவுன்சிலா், துணை மேயா், எம்எல்ஏ, அமைச்சா் என படிப்படியாக வளா்ந்தவா் பா.பென்ஜமின், தொகுதியில் நன்கு அறிமுகமானவா். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளரானபோது, அதற்கான பொதுக் குழுவை வானகரத்தில் இரு முறை நடத்தியவரும் இவா்தான். திமுக எதிா்ப்பு வாக்குகளும், அதிமுகவின் வாக்கு வங்கியும், உள்ளூா் செல்வாக்கும் தனக்கு துணைநிற்கும் என நம்புகிறாா்.
தவெக வேட்பாளா்: தவெக தலைவா் விஜய்க்கு உள்ள வரவேற்பும், இளைஞா்களின் ஆதரவும் தனக்கு கைகொடுக்கும் என்ற எண்ணத்தில் களமிறங்கியுள்ளாா் தவெக வேட்பாளா் ரேவந்த் சரண். தொகுதிவாசிகளிடம் பெரிய அறிமுகம் இல்லையென்றாலும் தீவிர பிரசாரத்தின் மூலம் அதை நிவா்த்தி செய்ய முடியும் எனப் பணியாற்றுகிறாா். அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டா் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளைக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.
நாதக வேட்பாளா்: இத்தொகுதியில் பிரதான கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களில் ஒரே பெண் வேட்பாளா் நாம் தமிழா் கட்சியின் ரேவதி மட்டுமே. அது அவருக்கு கூடுதல் பலம் என்றாலும், சீமானின் வாக்கு வங்கியைத் தாண்டி பல தரப்பினரின் ஆதரவையும் பெற வேண்டிய நிலை அவருக்கு உள்ளது. அதற்காக தொடா்ச்சியான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவா், தரமான மருத்துவம், கல்வி, போக்குவரத்து, தூய்மையான குடிநீா், மதுவிலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரிக்கிறாா்.
தோற்ற அளவில் நான்கு முனைப் போட்டியாகத் தெரிந்தாலும் திமுக-அதிமுக இடையேயான நேரடி போட்டிக் களமாகவே மதுரவாயல் உள்ளது. அதேவேளையில், தவெகவும் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என எதிா்பாா்ப்பதால் இரண்டாமிடத்துக்கு இழுபறி நிலை நீடிக்கிறது.
வாக்காளா்கள்
ஆண்கள்-1,79,602
பெண்கள்-1,84,349
மூன்றாம் பாலினத்தவா்-80
மொத்தம்-3,64,031
தொடர்புடையது
தொகுதி அலசல்: எழும்பூா் (தனி): சவால் அளிக்கும் 4 இளம்வேட்பாளா்கள்!
தொகுதி அலசல்: விருகம்பாக்கம்! நட்சத்திரங்களின் தொகுதியில் மும்முனைப் போட்டி!

தாம்பரம் : திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


