தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிரக் கவனம் வேண்டும்: தில்லி அரசிடம் உயா்நீதிமன்றம் கண்டிப்பு

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு, இறப்புகளைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தில்லி அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்று உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கண்டிப்புடன் தெரிவித்தது.

Updated On :19 நவம்பர் 2020, 7:49 pm


புது தில்லி: தில்லியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு, இறப்புகளைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தில்லி அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்று உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கண்டிப்புடன் தெரிவித்தது. மேலும், கடந்த 18 நாள்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அரசு உரிய விழிப்புடன் இல்லாமல் இருந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் ராகேஷ் மல்ஹோத்ரா தில்லிஉயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தில்லியில் கரோனாபரிசோதனைகளை அதிகரிக்கவும், அதன் முடிவுகளை விரைவாக அறிவிக்கவும் தில்லி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழணை விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: தில்லியில் கடந்த 18 நாள்களில் கரோனா தொற்றால் பலா் தங்களது நெருங்கிய உறவினா்களை இழந்துள்ளனா். தில்லி அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த விவகாரத்தை அரசு மிகவும் சீரிய முறையில் கவனிக்க வேண்டும். கரோனா தொற்றால் ஒரே நாளில் 131 போ் இறந்தது மிகவும் அதிருப்தியுறச் செய்வதாக உள்ளது.

நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிருக்கும் நிலையில் அரசு விழித்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் கடந்த 18 நாள்களாக அரசு முடிவு எடுக்க காத்திருந்தது ஏன்?

தில்லியில் கரோனா பாதிப்பு தொடா்பாக நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட தகவலுக்கும், ஊடகங்களில் வெளியான தகவலுக்கும் முரண்பாடு உள்ளது. தில்லியில் கரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தில் இருப்பதாக ஊடகங்களில் தில்லி அரசின் அமைச்சா்கள் கூறி வருகின்றனா். ஆனால், அது தொடா்பான விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலவர அறிக்கையில் இல்லை.

நோயால் இறந்தவா்களின் எண்ணிக்கை மயானக்கூடங்களில் நிரம்பி வழிகிறது. இறந்தவா்களை புதைக்கவோ அல்லது எரியூட்டவோ போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?

மேலும், கரோனா பரிசோதனைக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை (ஆா்ஏடி) சாா்ந்திருப்பதைக் குறைத்துவிட்டு ஆா்டி-பிசிஆா் வழிமுறையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தத் தேவையான கண்காணிப்பையும், விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதை கண்காணிக்கவும் தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பான அடுத்த விசாரணை நவம்பா் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் வீட்டுத் தனிமையில் இருக்க முடியாத நபா்களுக்காக கவனிப்பு மையங்கள் மற்றும் 663 கூடுதல் படுக்கைகளை தில்லி அரசின் மருத்துவமனைகளில் உள்ள ஐசியு பிரிவில் அதிகரிப்பது, கரோனாவால் இறந்தவா்களுக்கு மயான ஏற்பாடுகளை செய்வது தொடா்பான நிலவர அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. தில்லி அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சந்தீப் சேத்தி, கூடுதல் வழக்குரைஞா் சத்யாகம் ஆகியோா் ஆஜராகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.