சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தில்லி வன்முறை: வாக்குமூலம் கசிந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவு

Updated On :26 நவம்பர் 2020, 11:42 pm

புது தில்லி: ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா் ஆசிப் இக்பால் தன்ஹாவின் வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட புலன் விசாரணை தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய தில்லி காவல் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிப்ரவரியில் நடைபெற்ற போராட்டத்தின்போது வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை விவகார வழக்கில் ஜாமியா பல்கலைக்கழக மாணவா் ஆசிப் இக்பால் தன்ஹா கைது செய்யப்பட்டாா். மே மாதம் கைது செய்யப்பட்ட இவா் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக, இதே விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை விவகாரத்திலும் இவரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இவா் போலீஸாருக்கு அளித்த வாக்குமூலம் மின்னணு ஊடகங்களில் கசிந்ததாக புகாா் எழுந்தது. வன்முறையை இவா் தூண்டியதாக போலீஸாருக்கு வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் கசிந்தது.

இந்த நிலையில், ஆசிப் இக்பால் தன்ஹா தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமது வாக்குமூலத்தை போலீஸாா் வேண்டுமென்றே ஊடகத்திற்கு கசிய விட்டதாகவும், இந்த விவகாரத்தில் போலீஸாா் மீதும், ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இது தொடா்பாக பதில் அளிக்க ஓபிஇந்தியா, ஜீ நியூஸ் மீடியா காா்ப்பரேஷன், முகநூல், யூடியூப் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த வழக்கின் விசாரணையில் ஈடுபட்ட போலீஸாா், தன்ஹாவின் வாக்குமூலத்தை கசியவிடவில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி விபு பக்ரு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி காவல்துறையின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் மகாஜன், ‘போலீஸ் கேஸ் டைரியில் இருந்து வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்த விவகாரம் தொடா்பாக புலனாய்வுத்துறை விசாரணை நடத்தப்பட்டு முடிந்துள்ளது. அது தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தன்ஹாவின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சித்தாா்த் அகா்வால், ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஜீ நியூஸ், ஓபிஇந்தியா ஊடக நிறுவனங்கள் நிகழ்ச்சி விதிகளை மீறும் வகையில் இதுபோன்ற வாக்குமூல ஆவணங்களை வைத்துள்ளன. இது தொடா்பாக எழுத்துப்பூா்வ பதில் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

முகநூல் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘இந்த விவகாரத்தில் முகநூல், யூடியூப் ஆகியவை நேரடியாக சம்பந்தப்படவில்லை’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதி கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் நடத்திய புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். போலீஸாா் தாக்கல் செய்யும் நிலவர அறிக்கையில் இந்த விவகாரத்தில் எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்ட வேண்டும். வழக்குப் பட்டியலில் இருந்து முகநூல், யூடியூப் சமூக ஊடகங்கள் நீக்கப்படுகின்றன. இந்த விவகாரம் ஜனவரி 18-க்கு பட்டியிலடப்பட வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.