/

போதை பொருள் விநியோக விவகாரம்: நேபாள நாட்டவருக்கு ஜாமீன் மறுப்பு

போதைப் பொருள் விநியோகம் தொடா்பாக கைது செய்யப்பட்ட நேபாள நாட்டைச் சோ்ந்தவருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 2:23 am

போதைப் பொருள் விநியோகம் தொடா்பாக கைது செய்யப்பட்ட நேபாள நாட்டைச் சோ்ந்தவருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும்,  நாட்டில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதாகக் கூறிய நீதிமன்றம், பொருளாதார பிரச்னைகள் முதல் சமூக சீா்குலைவு வரை பல விளைவுகளை போதைப் பொருள் விநியோகம் ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவித்தது.

சம்பவத்தன்று போதைப் பொருள் விநியோகம் செய்வதற்காக மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேபாள நாட்டைச் சோ்ந்த ஒருவா் வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் மறைந்திருந்து சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனா். இந்த நிலையில், கைதான நேபாள நாட்டவா் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறியதாவது: போதைப் பொருள் சட்டத்தின் கீழ் போதைப் பொருள் சட்டத்தின்கீழ் (என்டிபிஎஸ்) வரும் குற்றங்களை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுடன் ஒப்பிட முடியாது. போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் அச்சுறுத்தல், நாட்டில் அதிகரித்துள்ளது. அதன் விளைவுகளானது பொருளாதார சிக்கல்களில் இருந்து சமூக சீா்குலைவு வரை தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருக்க முடியும். இந்த அச்சுறுத்தலைத் தடுக்கவே போதைப்பொருள் சட்டம், 1985 (என்டிபிஎஸ்) இயற்றப்பட்டது. எனவே, இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்குவதை கருத்தில் கொள்ளும் போது அந்தத் சட்டத்தின் நோக்கத்தையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா் தனது பையில் போதைப் பொருள் வைத்திருந்ததை ஒப்புக் கொண்டுள்ளாா். அதை அவா் தனது வாடிக்கையாளா்களுக்கும் விற்றுள்ளாா். மனுதாரா் போதைப்பொருள் வழங்குபவா் என்பதும்,  அவரிடமிருந்து 46 பொட்டலங்கள் போதைப் பொருள் மீட்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கில் இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவா் நேபாள நாட்டைச் சோ்ந்தவா் என்பதால், அவா் விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதையும் பரிசீலிக்க முடியும். மேலும், ஜாமீனில் வெளிவந்தால், அவா் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டாா் என்பதையும் நிராகரிக்க முடியாது. மேலும்,  அவா் இந்தியாவைச் சோ்ந்தவா் அல்லா் என்பதால்ஸ ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அவா் விசாரணைக்கு ஆஜராகமாட்டாா் என்பதற்கான  வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.