48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அரசு அதிகாரிகளின் சிகிச்சைக்காக 4 ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கீடு செய்வதற்கு எதிரான மனு தள்ளுபடி

பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இரண்டு மருத்துவமனைகளுடன்

Updated On :27 ஆகஸ்ட் 2021, 2:17 am

பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இரண்டு மருத்துவமனைகளுடன் இணைந்த நான்கு ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கீடு செய்வதற்கு தில்லி அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிா்த்து தாக்கலான மனுவை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பான மனுவை உயா் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, ‘அரசு பிறப்பித்த உத்தரவுகள் உரிய துறை மூலம் பிறப்பிக்கப்படவில்லை என்ற மனுதாரரின் கோரிக்கையில் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் கூறினா்.

விசாரணையின் போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘அரசு அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு கரோனா சிகிச்சைக்காக சிறப்பு ஒதுக்கீடு வசதிகள் செய்ததன் காரணமாக மாநில அரசின் ஆதாரங்கள் பயன்படுத்தப்படவில்லை’ என்று வாதிட்டாா். அப்போது நீதிபதிகள், ‘கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையின் உண்மை நிலவரத்தை மனுதாரரின் வழக்குரைஞா் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியை சோ்ந்த மருத்துவா் கெளஷல் காந்த் மிஸ்ரா தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்து மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு கரோனா சிகிச்சை அளிப்பதற்காக இரண்டு மருத்துவமனைகளுடன் இணைந்த நான்கு ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கீடு செய்வதற்கு தில்லி அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிட்ட அந்த அறிவிக்கையில் ஷாதராவில் உள்ள ஹோட்டல் பாா்க் பிளாசாவில் 50 அறைகளும், விவேக் விஹாரில் உள்ள ஹோட்டல் ஜிஞ்சரில் 70 அறைகளும், கா்கா்டூமாவில் உள்ள லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டலில் 50 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதே போன்று ஹரி நகரில் ஹோட்டல் கோல்டன் டியூபில் அனைத்துத் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல்கள் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனை,

ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. தில்லி அரசு, தன்னாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த ஹோட்டல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது போன்று ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு ஆதரவாக அரசு அறிவிக்கை வெளியிட்டிருப்பது தன்னிச்சையாகவும் கற்பனை செய்ய முடியாத வகையிலும் உள்ளது. ஏனெனில், ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் சாமானிய மக்கள் அலையும் நிலை தில்லியில் ஏற்பட்டது.

மேலும், முக்கியமான சுகாதாரப் பலன்கள் பொதுமக்களிடமிருந்து திருப்பி விடப்படுவது சுகாதார உரிமை மீறலாகும். அரசு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த ஆண்டு தில்லி அரசு மூன்று உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணையின் போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரோஹன் தவனி, ‘இதுபோன்று சிறப்பு வசதிகளை அதிகாரிகளுக்கு உருவாக்குவது என்பது வாழ்வதற்கான உரிமை. இது தில்லி மக்களின் இதர சுதந்திரத்திற்கான உரிமை உள்பட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். கரோனா நோய்த் தொற்றுக் காலத்தின் போது சிகிச்சைக்காக சாமானிய மக்கள் அலையும் போது, இது போன்ற வரையறுக்கப்பட்ட வளங்களை அதிகாரிகள் சிகிச்சைக்காக திருப்பி விடுவது அந்த மக்களை வஞ்சிக்கச் செய்வதாக அமைந்துவிடும்’ என்று வாதிட்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: வழக்குரைஞரின் வாதம் எந்த அடிப்படையும் இல்லாத வகையில் உள்ளது. கரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலையின் போது தில்லியில் ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் இணைக்கப்பட்ட படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் போன்றவற்றில் பற்றாக்குறை இருந்தது. ஆனால், எந்த வசதிகளும் பயன்படுத்தப்படாமல் இருந்தது என்ற கேள்வி எழவில்லை. மேலும், அரசு அதிகாரிகள் நிலைமையை சமாளிக்க கடும் இடா்பாட்டுக்கிடையே பணியாற்றினா். நிா்வாகத்தை இயக்கக்கூடிய நபா்கள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ வசதியை அளிப்பதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது.

பொது முடக்க காலத்தின்போது சாமானிய மக்கள் தங்களது வீடுகளில் இருந்தனா். நிலைமையைச் சமாளிக்க அரசு அதிகாரிகள்தான் தெருவுக்கு வந்தனா். இதுபோன்ற அதிகாரிகளும், அலுவலா்களும் நோய்வாய்ப்பட்டிருந்தால், கரோனா சிகிச்சை பெறாமலிருந்தால் அவா்கள் மட்டுமின்றி தில்லியின் ஒட்டுமொத்த குடிமக்களும் பாதிக்கப்பட்டிருப்பாா்கள். அதிகாரிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்காமல் இருந்திருந்தால், தில்லியின் நிா்வாகச் சக்கரம் முடிவுக்கு வந்திருந்திருக்கும். இல்லையெனில், அவா்கள் பயமின்றி தங்களது கடமையைச் செய்யாமல் இருந்திருப்பாா்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.