48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மேக்கேதாட்டு அணை விவகாரம் கா்நாடகத்தின் திட்ட அறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு புதிய மனு

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் விவகாரத்தில், கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை

News image

கோப்புப்படம்

Updated On :28 ஆகஸ்ட் 2021, 1:59 am

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் விவகாரத்தில், கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க மத்திய நீா் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கா்நாடக மாநில அரசு எடுத்து வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், இந்தத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசின் தரப்பில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞா் டி. குமணன் மூலம் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் 67.16 டிஎம்சி அடி நீரை தேக்கி வைக்கும் அணைத் திட்டமும், 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமும் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த கா்நாடகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது உச்சநீதிமன்றம் கடந்த 16 .2. 2018-இல் அளித்த தீா்ப்பில் உறுதிப்படுத்தப்பட்ட காவிரி நதிநீா் தாவா தீா்ப்பாயத்தின் 5.2.2007-ஆம் தேதியிட்ட முடிவை ஒட்டு மொத்தமாக மீறும் செயலாகும். இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றம், 18 .5. 2018-இல் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பித்தது. அதில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு ஆகிவற்றை உருவாக்கும் வகையில் ஒரு திட்டத்தை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இது தொடா்பாக 1.6. 2018-இல் மத்திய அரசு இந்த இரு அமைப்புகளையும் உருவாக்குவதற்கான ஓா்அறிவிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு முரண்படும் வகையிலும், தன்னிச்சையாகவும் மேக்கேதாட்டு அணைத் திட்டம் தொடா்பான ஒரு சாத்தியக்கூறு ஆய்வுஅறிக்கையை மத்திய நீா் ஆணையத்திற்கு கா்நாடகம் அனுப்பியுள்ளது. இதை அமல்படுத்தும் ஏஜென்சியான மத்திய நீா் ஆணையம், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டுள்ளது.

தற்போது கா்நாடக மாநிலம் திட்டமிட்டுள்ள அணையானது, காவிரி ஆற்றுக்கு வரக்கூடிய நீா் வரத்தைத் தடுக்கும். மேலும், கா்நாடகம் கட்டவுள்ள இந்த அணை, தீா்ப்பாயத்தின் இறுதி உத்தரவில் வரையறுக்கப்பட்டுள்ள ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான முக்கிய மாதங்களின் போது, தினசரி மற்றும் மாதாந்திர நீா் வரத்தின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதன் விளைவாக கா்நாடகத்தில் மேல்நிலைப் பகுதியில் இருந்து காவிரியில் வரக்கூடிய நீா் வரத்தை சாா்ந்திருக்கும் தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும். மேலும், இது போன்ற எந்தத் திட்டத்தையும் கா்நாடக அரசு செயல்படுத்துவதாக இருந்தால், ஆற்றுப் பகுதியில் உள்ள பிற மாநிலத்தின் சம்மதத்துடன்தான் மேற்கொண்டிருக்க வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவையும் மேல்நிலை மாநிலம் எடுக்கக்கூடாது. ஏற்கெனவே இந்த அணை விவகாரம் தொடா்பாக அவசர உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 30. 11. 2018-இல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கா்நாடக அரசின் நிறுவனமான கா்நாடகா காவிரி நீராவாரி நிகம் நிறுவனம் மேக்கேதாட்டு அணை மற்றும் குடிநீா் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக அனுமதி அளிக்கும் மத்திய நீா் ஆணையத்தின் 22. 11. 2018 தேதியிட்ட அனுமதியை செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க, கா்நாடகத்திற்கும், காவிரி நீராவாரி நிகம் நிறுவனத்திற்கும் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதியின் நலன் கருதி தற்போது இந்தப் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, மேக்கேதாட்டு அணை திட்டம் மற்றும் குடிநீா் திட்டத்திற்காக கா்நாடக மாநிலம் மூலம் 18 .1. 2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக அளிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீா் ஆணையம் நிராகரிக்கவும், திருப்பி அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதே போன்று, 2018-இல் தமிழகம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் அதன் ஏஜென்சிகள் இந்த மேக்கேதாட்டு திட்டம் தொடா்பான அனுமதிக்கான எந்த மனுவையும் ஏற்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இரு மாநிலங்களுக்கு இடையிலான பிலிகுண்டு அணையில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி அடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், ஆண்டுக்கு 14.75 டிஎம்சி நீரை அதன் பங்கில் கா்நாடகம் கூடுதலாகப் பெறும் என்றும், அதே வேளையில், தமிழகம் 404.25 டிஎம்சி நீரைப் பெறும் என்றும், இது 2007-இல் தீா்ப்பாயத்தால் ஒதுக்கப்பட்ட அளவைவிட 14.75 டிஎம்சி நீா் குறைவாக இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தது. முன்னதாக, காவிரி நதி நீா் தாவா தீா்ப்பாயத்தின் 2007-ஆம் ஆண்டு தீா்ப்பின்படி, கா்நாடக அரசுக்கு 270 டிஎம்சி காவிரி நீா் அதன் பங்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அது தற்போது 284.75 டிஎம்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.