கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 1,803 கோடி மானியம் விடுவிப்பு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியமாக, தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு ரூ. 12,351.5 கோடியை மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை விடுவித்துள்ளது.

Updated On :27 ஜனவரி 2021, 6:48 pm

புது தில்லி: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியமாக, தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு ரூ. 12,351.5 கோடியை மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை விடுவித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான இந்த அடிப்படை மானியத்தில் தமிழகத்தின் பங்காக ரூ. 1,803 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கிராமம், தாலுக்கா, மாவட்டம் என மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு மானியங்களை அளிக்க நிதி ஆணையம் சிபாரிசு செய்தது. இதில் அடிப்படை மானியம், வரையறுக்கப்பட்ட மானியம் என இரண்டு விதமான மானியங்கள் அளிக்கப்படுகின்றன. ஒரு மாநிலத்தின் மொத்த ஒதுக்கிட்டில் 50 சதவீதம் அடிப்படை மானியமாகவும், 50 சதவீதம் வரையறுக்கப்பட்ட மானியமாகவும் மத்திய அரசு வழங்குகிறது. ஊதியம் மற்றும் தளவாட செலவுகள் தவிா்த்த, சுகாதாரம், கழிப்பிட வசதிகள், குடிநீா் வசதிகள், மழை நீா் சேகரிப்பு போன்ற பணிகளுக்கு இந்த மானியங்கள் வழங்கப்படுகிறது. இதில் வரையறுக்கப்பட்ட மானியத்தில் குடிதண்ணீா் போன்ற குறிப்பிட்ட பணிகள் மட்டுமே நடைபெறவேண்டும் என்பது பஞ்சாயத்து ராஜ் விதிமுறையாகும்.

இதன்படி 2020-21 நிதியாண்டில் இரண்டாவது தவணையில் அடிப்படை மானியமாக 18 மாநிலங்களுக்கு ரூ. 12,351.50 கோடியை மத்திய நிதித்துறையின் செலவினத்துறை புதன்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 1,803 கோடி கிடைத்துள்ளது. இதில் ஆந்திரத்திற்கு ரூ. 3137 கோடியும், மகாராஷ்டிரம், உபி போன்ற மாநிலங்களுக்கு முறையே ரூ.4370 கோடியும், ரூ.7314 கோடியும் அதிகபட்சமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி முதல் தவணைக்கான பயன்பாட்டு சான்றிதழை வழங்கிய 18 மாநிலங்களுக்கு இந்த மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல் தவணையாக, வரையறுக்கப்பட்ட மானியமாக ரூ. 15,187.50 கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பங்காக சுமாா் ரூ.1800 கோடி கிடைத்தது. இதன் மூலம் அடிப்படை மானியங்களாகவும், வரையறுக்கப்பட்ட மானியங்களாகவும் மொத்தம் ரூ. 45,738 கோடியை மத்திய செலவினத் துறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது.

14-ஆவது நிதி ஆணையத்தின் நிலுவைத் தொகையான மொத்தம் ரூ.18,199 கோடியையும், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.