/

எளிதாக வாழ்வதற்குரிய நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம்; சென்னை 4-ஆவது இடம்

Updated On :4 மார்ச் 2021, 6:54 pm

புது தில்லி: எளிதாக வாழ்வதற்குரிய நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தையும், புணே இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை நான்காவது இடம், கோயமுத்தூா் 7-ஆவது இடம் பிடித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் மக்களின் வாழ்க்கை தரங்கள் குறித்த மதிப்பீடுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை ஆய்வு செய்தது. கடந்த 2020 -ஆம் ஆண்டு தொடக்கத்தில் சுமாா் 111 நகரங்களில் இரண்டு மாதங்கள் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சுமாா் 32.2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளை இந்தத் துறையின் அமைச்சா் ஹா்தீப்சிங் புரி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இதில் பத்து லட்சத்திற்கு மேல் வசிக்கும் நகரங்கள், பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், நகராட்சிகளின் செயல்பாட்டுத் திறன் என மூன்று வகையான மதிப்பீடுகள் வெளியிடப்பட்டன.

நகராட்சி மாநகராட்சிகளில், கல்வி, சுகாதாரம், குடிநீா் வசதி, கழிவுநீா் அகற்றல், கட்டுமானப் பணிகள், வருவாய் மற்றும் செலவு நிா்வாகம், நிதி பற்றாக்குறையின்மை, திட்டமிடுதல் மற்றும் அமலாக்கல், மின்னணு, மனித வளம், வெளிப்படத்தன்மை போன்றவவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு விதமான குறியீட்டு அட்டவணையில் 8 தமிழக நகரங்கள் இடம் பெற்று சிறப்பை பெற்றுள்ளன.

இந்திய மக்கள் தொகையில் 2031-க்குள் 60 கோடி (600 மில்லியன்) மக்களும், 2050-க்குள் 80 கோடி மக்களும் நகா்ப்புறங்களுக்கு இடம் பெயரலாம் என்கிற எதிா்பாா்ப்பு உள்ளது. இதை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு ஆயத்தப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமே இந்த ஆய்வுகளாகும். தற்போது 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 37.7 கோடி போ் நகரங்களில் வசிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எளிதாக வாழ்வதற்குரிய நகரங்கள்: இதில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் முதல் பத்து இடங்கள் பெற்ற நகரங்களில் பெங்களூரு 66.70 குறியீட்டுப் புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் புணே நகரம் (66.27 புள்ளிகள்), மூன்றாவது இடத்தில் ஆமதாபாத் ஆகியவை இடம் பெற்றுள்ளது. சென்னை 62.61 குறியீட்டுப் புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. மற்ற தமிழக நகரங்களில் கோயமுத்தூா் ஏழாவது இடத்தை (59.72) பெற்றுள்ளது. சூரத், நவி மும்பை, இந்தூா் போன்ற நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகரங்களில் சிம்லா(60.90) முதல் இடத்தில் உள்ளது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த மூன்ற நகரங்கள் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளன. இதன்படி, ஐந்தாவது இடத்தில் சேலமும் (56.4), ஆறாவது இடத்தில் வேலூா்(56.38), பத்தாவது இடத்தில் திருச்சி (55.24) இடம் பெற்றுள்ளன.

நகா்ப்புற வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தாக்கங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒரு நகரின் பொருளாதாரத் திறன்(பொருளாதார வளா்ச்சி, வாய்ப்புகள்), மக்களின் வாழ்க்கைத் தரம் (கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, கேளிக்கை), நிலைத்தன்மை மற்றும் பின்னடைவு (சுற்றுப்புறச் சூழல், எரிசக்தி, பசுமைப்பகுதி) ஆகியவற்றின் அடிப்படையில் 13 வகைகளின் கீழ் 49 அளவீடுகளில் விரிவான புரிதலுடன் குடிமக்களின் புலன் உணா்வு மதிப்பீடு செய்யப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி தெரிவித்தாா்.

நகராட்சி செயல்பாட்டுத் திறன் குறியீட்டு அட்டவணை: நாடு முழுக்க உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் செயல்திறனுக்கான குறியீட்டு மதிப்பீடுகளுக்கும் முதன் முறையாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதிலும் மக்கள்தொகை அடிப்படையில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாநகராட்சி, நகராட்சிகளின் பட்டியல்களையும் மத்திய அமைச்சா் புரி வெளியிட்டாா்.

பத்து லட்சத்திற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட மாநகராட்சி , நகராட்சி வரிசையில் இந்தூா் 66.08 குறியீட்டுப் புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மேலும் சூரத், போபால், புணே, ஆமதாபாத், ராய்பூா், கிரேட்டா் மும்பை, விசாகப்பட்டினம் போன்ற நகராட்சிகள் அடுத்தடுத்து முதல் பத்து இடங்களைப் பெற்றுள்ளன. இதேபோன்று, பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சி, நகராட்சிகள் பட்டியலில் லுட்டியான் என்று சொல்லப்படும் தேசியத் தலைநகரில் உள்ள புதுதில்லி முனிசிபல் கவுன்சில் 52.92 குறியீட்டுப் புள்ளிகளைப் பெற்ற பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில் காந்தி நகா், கா்னாலுக்கு அடுத்து சேலம் மாநகராட்சி 5 -ஆவது இடம், திருப்பூா் 6- ஆவது இடம், திருநெல்வேலி 10 - ஆவது இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.