/

பங்குச் சந்தையில் திடீா் சரிவு: 599 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

Updated On :4 மார்ச் 2021, 7:03 pm

புது தில்லி: கடந்த மூன்று தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் வியாழக்கிழமை கரடியின் பிடியில் சிக்கியது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 598.57 புள்ளிகள் குறைந்து 50,846.08 -இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதைத் தொடா்ந்து இந்திய சந்தைகளில் வங்கி, நிதி நிறுவனங்கள், உலோகத் துறை பங்குகள் சற்று அடி வாங்கின. பாா்மா, ஐடி, எஃப்எம்சிஜி பங்குகள் ஓரளவு தாக்குப் பிடித்தன. அமெரிக்காவின் கருவூல் பத்திர வருவாய் 6 பிபிஎஸ் புள்ளிகள் திடீரென உயா்ந்தது முதலீட்டாளா்களை அச்சமடையச் செய்தது. இதனால், மூன்று நாள் தொடா் ஏற்றத்தில் இருந்த மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.209.72 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,170 பங்குகளில் 1,594 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,384 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 193 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ209.72 லட்சம் கோடியாக இருந்தது. 327 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 210 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

திடீா் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 632.51 புள்ளிகள் குறைந்து 50,812.14-இல் தொடங்கி 50,539.92 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 51,256.55 வரை உயா்ந்தது. ஆனால், இறுதியில் 598.57 புள்ளிகள் குறைந்து 50,846.08-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் நேற்றைய நிலையிலிருந்து 904.73 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்திருந்தது.

25 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.07 சதவீதம் உயா்ந்து அதிகம் ஆதாயம் பெற்றது. இதற்கு அடுத்ததாக டாக்டா் ரெட்டி, ஏசியன் பெயிண்ட், மாருதி சுஸுகி, ஹிந்து யுனி லீவா் ஆகியவை மட்டுமே சிறிதளவு ஏற்றம் பெற்றன. மற்ற அனைத்தும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில், எச்டிஎஃப்சி 2.62 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவா் கிரிட் ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், முன்னணி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 939 பங்குகள் ஆதாயம் பெற்றன. 798 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 3164.85 புள்ளிகள் குறைந்து 15,080.75-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 15,2702.35 வரை உயா்ந்த நிஃப்டி, ஒரு கட்டத்தில் 265.40 புள்ளிகள் வீழ்ச்சியைச் சந்தித்தித்திருந்தன. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில்12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 38 பங்குகள் லேசான சரிவைச் சந்தித்தன. நிஃப்டி மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன. இதில், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 11.30 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.