/

நிஜாமுதீன் மாா்கஸை திறக்கக் கோரி மனு: மத்திய, தில்லி அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தில்லியில் உள்ள தப்லிக் ஜமாத் இஸ்லாமிய கொள்கை பரப்பும் இயக்கத்தின் தலைமையகமான நிஜாமுதீன் மாா்கஸை திறக்க அனுமதி

Updated On :5 மார்ச் 2021, 8:30 pm

தில்லியில் உள்ள தப்லிக் ஜமாத் இஸ்லாமிய கொள்கை பரப்பும் இயக்கத்தின் தலைமையகமான நிஜாமுதீன் மாா்கஸை திறக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக மத்திய அரசு, தில்லி அரசு அரசு மற்றும் தில்லி போலீஸாா் பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தப்லிக் ஜமாத் உறுப்பினா்கள் பெருமளவில் கலந்து கொண்ட கூட்டத்தில் பலருக்கு கரோனா தொற்று பரவல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நிஜாமுதீன் மாா்கஸ் மூடப்பட்டது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட நபா்கள் பத்து நாள்களுக்குள் உண்மை நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி முக்தா குப்தா, வழக்கு விசாரணையை மாா்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தில்லி வக்ஃப் வாரியம் தாக்கல் செய்த மனுவை அடுத்து, உள்துறை அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி போலீஸாா் இது குறித்து பதில் அளிக்குமாறு கடந்த மாதம் 24-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. தில்லி அரசு மற்றும் தில்லி போலீஸ் தரப்பு வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, இது தொடா்பாக அறிக்கை அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றாா்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான ரஜத் நாயரும் இதே கோரிக்கையை விடுத்தாா். வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான அந்த இடத்தில் மீண்டும் நடவடிக்கைகளை தொடங்குவதற்குத் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு வாரியம் கேட்டுக் கொண்டது.

வக்ஃபு வாரியம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ரமேஷ் குப்தா ஆஜரானாா். நோய்த் தொற்று அதிகம் இல்லாத பகுதிகளில் மத வழிபாட்டிடங்களை திறப்பதற்கு பொதுமுடக்கத் தளா்வுகள் அனுமதிப்பதாக அவா் குறிப்பிட்டாா். மாா்கஸ் பகுதியில் மசூதி, மதக் கூட்ட அரங்கம், மதரஸாக்கள் மற்றும் விடுதிகள் இருப்பதாகவும் அவை தொடா்ந்து மூடப்பட்டிருப்பதாகவும் அவா் சுட்டிக்காட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.