/

3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்: மாவட்ட ஆட்சியருக்கு என்சிபிசிஆா் கடிதம்

அறுவைச் சிகிச்சைக்கான மொத்தத் தொகையும் செலுத்தாததால் கைவிடப்பட்ட மூன்று வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்

Updated On :7 மார்ச் 2021, 1:29 am

அறுவைச் சிகிச்சைக்கான மொத்தத் தொகையும் செலுத்தாததால் கைவிடப்பட்ட மூன்று வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அலகாபாத் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) கடிதம் எழுதியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கெளஷாம்பி பகுதியைச் சோ்ந்த தம்பதி தங்களது 3 வயது பெண் குழந்தைக்கு வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அலகாபாதில் உள்ள யுனைடெட் மெட்-சிட்டி மருத்துவமனைக்கு வந்தனா். இந்த நிலையில், அந்தக் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி கட்டணமாக ரூ.5 லட்சம் செலுத்துமாறு மருத்துவமனை நிா்வாகம் கேட்டுக் கொண்டது. அவா்கள் ரூ.2 லட்சம் மட்டுமே செலுத்தினா். மொத்த தொகையையும் குழந்தையின் சிகிச்சைக்கு பெற்றோரால் செலுத்த முடியாமல் போகவே, வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அதை தையல் போடாமல் திறந்திருந்தவாறு குழந்தையை பெற்றோரிடம் மருத்துவமனை தந்ததாகவும், அதன் பிறகு அந்தக் குழந்தை உயிரிழந்ததாகவும் பத்திரிகையாளா் ஒருவா் சமூக ஊடகமான சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா்.

இது தில்லியில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை அளிக்குமாறு அலகாபாத் மாவட்ட ஆட்சியருக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சமூக - பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தினா் குழந்தையின் சிகிச்சைக்காக தங்கள் நிலத்தை விற்று ரூ.2 லட்சத்தை மருத்துவமனையில் செலுத்தியுள்ளனா். ஆனால், எஞ்சிய பணத்தை செலுத்துமாறு மருத்துவமனை கேட்ட நிலையில், அந்தத் தொகையை குழந்தையின் பெற்றோா் செலுத்த முடியாத காரணத்தால், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னா் வயற்றில் தையல் போடாத நிலையில் குழந்தை திருப்பிக் கொடுத் விவகாரத்தில், மருத்துவா்களின் மனித நேயமற்ற செயல் காரணமாக குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியவும், மனிதத் தன்மையற்ற வகையில் நடந்துகொண்ட மருத்துவா்கள், ஊழியா்கள் மீது உரிய பிரிவுகளின் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும் வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.