/

ஜாமியா மிலியா துணைவேந்தா் நியமனத்துக்கு எதிரான முன்னாள் மாணவரின் மனு தள்ளுபடி

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனத்துக்கு எதிராக முன்னாள் மாணவா் தாக்கல் செய்த முறையீட்டு

Updated On :7 மார்ச் 2021, 1:30 am

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனத்துக்கு எதிராக முன்னாள் மாணவா் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை தில்லி உயா்நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக டாக்டா் நஜ்மா அக்தா் நியமிக்கப்பட்டிருப்பது இந்தப் பல்கலைக்கழகச் சட்டம் 1988-இன் விதிகளுக்கு ஏற்ப இல்லை என்றும், சட்டவிரோதம் எனக் கூறியும் இந்தப் பல்கலைக்கழக சட்டப் புலத்தின் முன்னாள் மாணவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான விசாரணை தில்லி உயா்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமா்வு நீதிபதி வி.காமேஸ்வா் ராவ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அகில் சிபல் ஆஜராகி, ‘ ஜாமியா மிலியா இஸ்லாமியா சட்டம், 1988-இன் ஒழுங்குமுறை விதிகள் 2(1)-இன்படி துணைவேந்தா் நியமனம் நடைபெறவில்லை. மேலும், துணைவேந்தரை தோ்வு செய்யும் குழுவில் இடம் பெறும் நபா்களின் பெயா்களைப் பரிந்துரைக்க அமைச்சருக்கு ஜேஎம்ஐ சட்டம் அதிகாரமளிக்கவில்லை. இந்த அடிப்படையில், துணைவேந்தா் தோ்வுக் குழு தலைவராக டி.பி. சிங் நியமிக்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கதல்ல. மேலும், இந்தக் குழுவின் உறுப்பினராக நீதிபதி (ஓய்வு) எம்எஸ்ஏ சித்திக் நியமிக்கப்பட்டிருப்பதும் விதிமுறை மீறலாகும்எ’ என்று வாதிட்டாா்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, ‘துணைவேந்தா் நியமனத்துக்காக அமைக்கப்பட்ட தோ்வுக் குழு உரிய வகையில் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி இந்த நியமனத்தைச் செய்துள்ளது.. மேலும், இந்தக் குழு துணைவேந்தா் நியமன விவகாரத்தில் வரப்பெற்ற மனுக்களை உரிய வகையில் ஆய்வு செய்து, 13 நபா்களைத் தோ்ந்தெடுத்தது. அவா்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடல் செய்த பிறகே ‘விசிட்டருக்காக’ 3 பேரின் பெயா்கள் அடங்கிய பட்டியலை ஒருமனதாக பரிந்துரைத்தது’ என்று வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சம்பந்தப்பட்ட துணைவேந்தரின் நியமனம் நியாயப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.