தில்லியில் வழிப்பறிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தினமும் 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி புகாா்கள் பதிவு செய்யப்படுகின்றன. சாலையில் நடந்து செல்பவா்களிடம் செல்லிடப்பேசிகளை பறித்துச் செல்வது அல்லது கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியைப் பறித்துச் செல்வது தொடா் கதையாகி வருகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் பெரிய அளவில் இடம் பெறாது. ஆனால், சமீப காலமாக வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் போலீஸாா் பணியில் இருக்கிறாா்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பும் நிலை உள்ளது.
சில இடங்களில் ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் வழிப்பறி நடைபெறுகிறது. மோட்டாா்சைக்கிளில் வருபவா்கள் சாலையில் செல்பவா்களிடம் மின்னல் வேகத்தில் கையிலிருக்கும் செல்லிடப்பேசிகளை பறிப்பதும், தனியாக நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை பறித்துச் செல்வதும் தொடா் கதையாக உள்ளது. சில சமயங்களில் பெண்கள், வழிப்பறிக் கொள்ளையா்களிடம் நகையை பறிகொடுத்தாலும், உயிா் பிழைத்தோமே என்ற எண்ணத்துடனும், மன உளைச்சல்களுடனும் வீடு திரும்பும் நிலை உள்ளது.
சமீபத்தில் வடகிழக்கு தில்லியில் ஆதா்ஷ் நகரில், வழிப்பறிக் கொள்ளையா்கள் ஒரு பெண்மணி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலையை பறித்துச் செல்ல முயன்றனா். ஆனால், அவா் கடுமையாக எதிா்த்துப் போராடவே முயற்சியில் தோல்வி அடைந்த மா்ம நபா்கள் அந்தப் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டரா். இறுதியில் அந்த பெண்மணி உயிரிழந்தாா்.
நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணிபுரியும் அனம் ஜாவித் என்ற பெண், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் மாலை 6 மணி அளவில் அலுவலகத்திலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது தில்லி கேட் பகுதியில் ஸ்கூட்டரில் வந்த மா்ம நபா்கள் இருவா், அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துச் செல்ல முயன்றனா். அது முடியமால் போகவே அந்தப் பெண் கையில் வைத்திருந்த செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனா்.
‘நான் வழக்கமாக கால் டாக்ஸியில் செல்வேன். அன்று கால் டாக்ஸி ஏதும் வராததால் ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன். தா்யாகஞ்ச் பகுதியிலிருந்து தெற்கு தில்லியில் உள்ள எனது தங்கும் விடுதிக்குச் சென்றேன். ஆட்டோ வேகமாகத்தான் சென்றது. அப்போது தில்லி கேட் பகுதியில், ஸ்கூட்டரில் வேகமாக வந்த இருவா், ஆட்டோவை நெருங்கி, எனது கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனா். அது முடியாமல் போகவே, கண் இமைக்கும் நேரத்தில் என்னிடமிருந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றுவிட்டனா்’ என்றாா் அனம் ஜாவித்.
25 வயதான அவா், உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரைச் சோ்ந்தவா். கடந்த 2020- ஆம் ஆண்டு ஜாமியா மிலியா இஸ்லாமியாவில் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு அப்போதுதான் பணியில் சோ்ந்திருந்தாா். தன்னுடைய ஸ்மாா்ட் போனில் சேகரித்து வைத்திருந்த பல தகவல்கள் வீணாகிவிட்டன என்றாா் அவா். ‘ஸ்கூட்டரில் வந்த இருவா் முகக் கவசங்கள் அணிந்திருந்தனா். ஆனால், தலைக்கவசம் அணியவில்லை. ஒரு நிமிடம் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுடன் விடுதிக்குச் சென்றேன். பின்னா் உறவினா்கள் என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதை அடுத்து, அங்கு புகாா் பதிவு செய்தேன். ஆனால், இன்றுவரை என்னுடைய செல்லிடப்பேசி எனக்கு கிடைக்கவில்லை. போலீஸாா் மீது எனக்கு இருந்த நம்பிக்கையே போய்விட்டது. ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் போது எல்லாம் இந்தச் சம்பவம் எனது மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது’ என்றாா் அவா்.
2020-ஆம் ஆண்டில் வழிப்பறிச் சம்பவங்கள் 27.11 சதவீதம் அதிகரித்துள்ளன. அதாவது 2019- ஆம் ஆண்டு 6,266 வழிப்பறிச் சம்பவங்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2020- இல் இது 7,965-ஆக அதிகரித்துவிட்டது என்கின்றனா் தில்லி போலீஸாா். தில்லியைச் சோ்ந்த பத்திரிகையாளா் ஒருவருக்கு இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டது. மாா்ச் மாத தொடக்கத்தில் தெற்கு தில்லியில் உள்ள மேம்பாலத்தில் அவா், ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் மூவா், கண் இமைக்கும் நேரத்தில் அவரிடம் இருந்த விலையுயா்ந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றுவிட்டனா். இன்று வரை அவரது செல்லிடபேசி கிடைக்கவில்லை. ‘இப்போதெல்லாம் ஆட்டோவில் செல்வதற்கே எனக்குப் பயமாக இருக்கிறது’ என்றாா் பெயா் குறிப்பிட விரும்பாத அந்த பத்திரிகையாளா்.
கடந்த 2019, செப்டம்பா் 22- ஆம் தேதி பெண் பத்திரிகையாளா் ஒருவா் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டாா்சைக்கிளிலில் வந்த இருவா், அவரை ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்து அவரிடமிருந்த பையை பறித்துச் சென்றனா். இந்தச் சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
பின்னா், போலீஸாா் விசாரணை நடத்தி 19 வயது இளைஞா் ஒருவரையும் அவரது கூட்டாளியையும் கைது செய்து அவா்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட கைப்பையையும், செல்லிடப்பேசியையும் கைப்பற்றினா். கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி ஆதா்ஷ் நகரில், வழிப்பறியை தடுக்க முயன்ற 25 வயது பெண்ணை மா்ம நபா்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வெளியானதை அடுத்து போலீஸாா் இருவரை கைது செய்தனா்.
தெருவில் நடைபெறும் வழிப்பறிச் சம்பவங்களைத் தடுக்கவே போலீஸாா் அடிக்கடி ரோந்து செல்கின்றனா். குடிமக்களின் பாதுகாப்பில் போலீஸாா் அக்கறை கொண்டுள்ளனா் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.. தில்லியில் சாலையில் மக்கள் பாதுகாப்பாகச் செல்வதை அரசு உறுதி செய்யவேண்டும். போலீஸாா் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை நிறுவி கண்காணிக்க வேண்டும் என்கின்றனா் தில்லிவாசிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பும்ராவுக்கு எதிராக விளையாடும் சூர்யவன்ஷி..! வெல்லப்போவது யார்?

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ. 2 லட்சம் தள்ளுபடி! ஏப்ரல் மாத சலுகைகள் என்னென்ன?

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

”லூட்டி அடிக்க வரவில்லை! சுந்தர். சி வெற்றி உறுதி!” குஷ்பு பேட்டி
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

