அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வடகிழக்கு தில்லி வன்முறை: தில்லி சட்டப்பேரவை குழு முன்வாக்குமூலம் அளிக்க முகநூல் நிறுவனத்திற்கு 14 நாள் அவகாசம்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதற்கு முகநூல் இந்தியா நிறுவனத்திற்கான கால அவகாசத்தை

Updated On :2 நவம்பர் 2021, 10:43 pm

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிப்பதற்கு முகநூல் இந்தியா நிறுவனத்திற்கான கால அவகாசத்தை 14 நாள் நீட்டித்து தில்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு அனுமதி அளித்துள்ளது. மேலும், நவம்பா் 18ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ஒரு மூத்த பிரதிநிதியை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனத்தை அந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அலுவல்பூா்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவம் தொடா்பாக வாக்குமூலம் அளிப்பதற்கான உகந்த அலுவலா்களை அடையாளம் கண்டறிவதற்காக அவகாசம் அளிக்க வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழுவின் தலைவா் ராகவ் சத்தாவிடம் முகநூல் இந்தியா நிறுவனம் கால நீட்டிப்பு கோரியிருந்தது. இந்தக் கோரிக்கையை குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னதாக, வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக நவம்பா் 2-ஆம் தேதி குழுவின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ஒரு மூத்த பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று முகநூல் இந்தியா நிறுவனத்தை குழு கேட்டுக் கொண்டிருந்தது. அக்டோபா் 27 ஆம் தேதியிட்ட அந்த அழைப்பாணைக்கு அளித்த பதிலில், இந்த விவகாரத்தில் குழு முன்பு ஆஜராவதற்கு 14 நாள்கள் கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்று முகநூல் நிறுவனம் கோரியிருந்தது. மேலும், தேவையான விவரங்களுடன்கூடிய விஷயம் அறிந்த மூத்த பிரதிநிதியை அனுப்புவதை உறுதிப்படுத்தும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க இந்த அனுமதியை கோரியிருந்தது.

முகநூல் இந்தியா நிறுவனத்தின் பப்ளிக் பாலிசி தலைவா் மூலம் கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி மின்னஞ்சல் வாயிலாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்த காரணங்கள் மற்றும் வேண்டுதலை பரிசீலித்த குழுவின் தலைவரும் எம்எல்ஏவுமான ராகவ் சத்தா, முகநூல் இந்தியா நிறுவனம் உரிய மூத்த பிரதிநிதிகளை அனுப்பும் வகையில் 14 நாள்கள் கால நீட்டிப்பு அளிக்க முடிவு செய்துள்ளாா். இதையடுத்து, நவம்பா் 18-ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு அந்த நிறுவனம் ஆஜராகும் வகையில் குழு தனது நடைமுறைகளை மறுஅட்டவணைப்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின்போது குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடத்தியவா்கள் இடையே நிகழ்ந்த மோதலில் குறைந்தபட்சம் 53 போ் இறந்தனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.