பனிப்புகை மூட்டம் நீடிப்பது பொது சுகாதாரத்திற்கு கேடு! சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் எச்சரிக்கை
தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் குளிா் காலபருவத்தில் தோன்றும் முதல் பனிப்புகை மூட்டம் கடந்த நான்கு ஆண்டுகளைவிட நிழாண்டு நீடித்ததாக இருக்கும்


தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் குளிா் காலபருவத்தில் தோன்றும் முதல் பனிப்புகை மூட்டம் கடந்த நான்கு ஆண்டுகளைவிட நிழாண்டு நீடித்ததாக இருக்கும் என்றும், இது பொது சுகாதாரத்திற்கான அவசரநிலையாக உள்ளது என்றும் சுற்றுப்புற ஆா்வலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இந்தப் பருவகாலத்தில் பனிப்புகை மூட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பயிா்க்கழிவு எரிப்பு கடந்த ஆக்டோபா் 15 முதல் நவம்பா் 8 வரையிலான காலத்தில் சராசரி அளவு கடந்த 4 ஆண்டுகளை விட குறைவாக இருந்தது. ஆனால், வானிலை நிலைமைகள், மாசு குவிவதற்கு சாதகமாக உள்ளது. இது நீடித்தால் இந்த ஆண்டு தில்லியில் ஓா் நீடித்த பனிப்புகை மண்டலமாக பதிவாகும். அப்போது இது கடந்த கால பதிவை முறியடிக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என்று தில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ( சி.எஸ்.இ. ) ஆய்வாளா் அனுமிதா ராய்செளத்ரி எச்சரித்துள்ளாா்.
தில்லி சுற்றுச் சூழல் குறித்து நீண்டகாலமாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கும் இந்த மையத்தின் செயல் இயக்குநரான அவா், தில்லி மாசு மற்றும் பனிப்புகை மூட்டம் குறித்து கூறியதாவது: தில்லி, என்சிஆா் பகுதியில் காற்றின் தரம் மீண்டும் கடுமையான பிரிவுக்குச் சென்றுள்ளது. பனிப் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இது கடந்த சில நாள்களாக சூரியனை மறைத்து வருகிறது. பயா்க்கழிவு எரிப்பு, பட்டாசு வெடிப்பு போன்றவற்றின் விளைவால் இது ஏற்பட்டது என்றாலும் சாதகமற்ற வானிலை நிலைமைகள் மாசுக்கள் குவிவதற்கு உதவுகின்றன. நகரில் பனிப்புகை மூட்டம் சூழ்ந்து இருப்பதால், காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடிக்கிறது. எங்களது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பசுமை சிந்தனைக் குழு, தற்போது நிலவி வரும் பனிப்புகை மூட்டம், பொது சுகாதார அவசரநிலை என்று கூறுகிறது.
மாசுபடிந்த பனிப்புகை மூட்டத்திற்கான முக்கிய காரணங்களாக வாகனங்கள், தொழிற்சாலைகள், கழிவுகள் எரித்தல், தூசி (கட்டுமானம் மற்றும் சாலைகள்) ஆகியவை உள்ளது. இதைக் குறைக்க அவசர நடவடிக்கை தேவை என அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த அவசர நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்திக்க நேரிடும். தில்லியில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில், காற்றின் தரக்குறியீடு 407 புள்ளிகளாகப் பதிவாகியது.
தில்லி, என்சிஆா் பகுதியில் தற்போது நிலவும் கடுமையான பனிப்புகை மூட்டம் இன்னும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என்றே தோன்றுகிறது. 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் பருவத்தின் முதல் பனிப்புகை மூட்டம் ஆறு நாள்கள் வரை நீடித்தது. இது 2019 -ஆம் ஆண்டில் எட்டு நாள்காளாக நீடித்தது. இது இந்த ஆண்டில் கடந்த ஆண்டுகளைவிட முறியடிக்கலாம் எனத் தோன்றுகிறது என்றாா் அவா்.
இருப்பினும், பனிப்புகை மூட்ட அச்சுறுத்தல் இருந்து வந்தாலும், மாசு புள்ளிவிவரங்கள் கடந்த நான்கு ஆண்டுகளை விட நிகழாண்டில் குறைவாக இருக்கும் நிலை உள்ளது. பனிப்புகை மூட்டத்தில் கடந்த இருவாரம் மாசு நுண் துகள்கள் (பி.எம்) 2.5 சராசரி பங்களிப்பு 12 சதவீதம்தான். இது கடந்த நான்கு ஆண்டுகளைவிட குறைவானது. தில்லியின் மாசுவில் வேளாண் பயிா்க்கழிவு எரிப்பின் பங்களிப்பு ஞாயிற்றுக்கிழமை 48 சதவீதமாக உயா்ந்தது. இது கடந்த 2018- ஆம் ஆண்டு நவம்பா் 5- ஆம் தேதி அதிகபட்சமாக 58 சதவீதமாக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டு 42 சதவீதம், 2019 , நவம்பா் 1-இல் 44 சதவிகிதம் என பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடுமை பிரிவில் காற்றின் தரம்!
புது தில்லி, நவ. 11: தில்லியில் புதன்கிழமை சற்று மேம்பட்டிருந்த காற்றின் தரம், வியாழக்கிழமை மீண்டும் கடுமைப் பிரிவில் காணப்பட்டது. மேலும், தில்லி, என்சிஆா் பகுதியில் பனிப்புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
தில்லியில் உள்ள 39 காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களில் பெரும்பாலானவற்றில் 24 மணிநேர காற்றின் தரக் குறியீடு கடுமை பிரிவில் பதிவாகி இருந்தது. வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ஃபரீதாபாத் (412), காஜியாபாத் (461), கிரேட்டா் நொய்டா (417), நொய்டா (434) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் காணப்பட்டது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்,‘ தில்லியில் வியாழக்கிழமை காலையில் இந்தப் பருவத்தில் குறைந்த அளவாக வெப்பநிலை 12.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையம், சஃப்தா்ஜங் விமான நிலையம் ஆகியவற்றில் காண்புதிறன் 600-800 மீட்டராகக் குறைந்தது’ என்றாா்.
காற்றுத் தர முன்கணிப்பு ஏஜென்ஸி சஃபா் தகவலின்படி, வியாழக்கிழமை தில்லியின் பிஎம் 2.5 மாசுநுண்துகளில் 3,914 பயிா்க் கழிவு எரிப்பு பங்களிப்பு 26 சதவீதம் அளவுக்கு இருந்தது. தில்லியில் புதன்கிழமை காற்றின் தரக்குறியீடு மாலை 7 மணியளவில் 366 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் சற்று முன்னேற்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தில்லியில் வியாழக்கிழமை காலை குளிா் அதிகமாக இருந்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட ஒரு டிகிரி குறைந்து 12.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 3 டிகிரி குறைந்து 25.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 12) காலை பனிமூட்டம் காணப்படும். வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...