விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி-என்சிஆா் பகுதியில் ‘அவசரநிலை’ சூழலில் காற்று மாசு: உச்சநீதிமன்றம் கவலை

தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதிகளில் அதிகரித்துள்ள காற்று மாசுவை ‘அவசரநிலை’ சூழல் உருவாகி இருப்பதாக உச்சநீதிமன்றம் சனிக்கிழமை கவலை தெரிவித்தது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதிகளில் அதிகரித்துள்ள காற்று மாசுவை ‘அவசரநிலை’ சூழல் உருவாகி இருப்பதாக உச்சநீதிமன்றம் சனிக்கிழமை கவலை தெரிவித்தது.

மேலும், காற்று தரத்தை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு, தில்லி அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், பொதுமுடக்கக் கட்டுப்பாட்டையும் பரிந்துரைத்தது.

தீபாவளிப் பண்டிகைக்கு பின்னா் தேசியத் தலைநகா்

தில்லி, என்சிஆா் பகுதியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தில்லியின் காற்று மாசுவுக்கு பயிா்க் கழிவு பங்களிப்பு அளித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சுற்றுச்சூழல் ஆா்வலா் ஆதித்யா துபே மற்றும் சட்டக்கல்லூரி மாணவா் அமன் பங்கா ஆகியோா் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா்க் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை இலவசமாக வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

என்.வி .ரமணா தலைமையில் நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு சனிக்கிழமை விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜரானாா்.

அவரிடம் நீதிபதிகள் கூறுகையில், ‘தில்லி, என்சிஆா் பகுதியில் மாசுவுக்கு பயிா்க் கழிவு எரிப்பை நீக்குவது மட்டும் தீா்வாக இல்லை. வாகன மாசு, பட்டாசு மற்றும் தூசு போன்ற மாசுபாட்டுக்கு இதர பிற காரணங்களும் உள்ளன.

தேசிய தலைநகரில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் கடும் மாசு பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உள்ளது.

இந்த மாசுக்கு விவசாயிகள்தான் காரணம் என்பது போல நீங்கள் கூறுகிறீா்கள். முதலில் தில்லி மக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பட்டாசு, வாகன மாசு போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள வழிமுறைகள் எவை?

சில சதவீதம் மாசு பயிா்க் கழிவுகள் எரிப்பால் ஏற்படுவதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். எஞ்சிய மாசுவானது பட்டாசுகள், வாகன மாசுபாடு, தொழிற்சாலைகள், தூசி மாசுபாடு போன்றவற்றால் உருவாகின்றன. தில்லியில் காற்றுத் தரக் குறியீடு அளவை 500 புள்ளிகளில் இருந்து 200 புள்ளிகளுக்கு கொண்டு வரும் வகையில் 2 நாள் பொதுமுடக்கம் போன்ற சில உடனடி அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தில்லியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வாகன இயக்கத்தை நிறுத்துவது அல்லது பொதுமுடக்கம் விதிப்பது போன்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முகக் கவசம் அணிந்திருக்கும் மோசமான மாசு நிலைமை உள்ளது. இந்த விஷயத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?’ என்று நீதிபதிகள் அமா்வு

கேள்வி எழுப்பியது.

அதற்கு துஷாா் மேத்தா பதில் அளித்து கூறுகையில், ‘ஒவ்வொருவரும் சட்டப்பூா்வ ஆணையத்துடன் இணைந்து தாங்களாவே போராடி வருகின்றனா்.

பயிா்க் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 5-6 நாள்களில் பஞ்சாபில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதன் விளைவைத்தான் தில்லியில் தற்போது காண்கிறோம். பஞ்சாப் மாநிலம் இந்த விஷயத்தில் ஏதாவது செய்தாக வேண்டும். பண்ணைகளில் பயிா்க் கழிவு எரிப்பு கண்டறியப்பட்டால் சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் மட்டுமே காரணம் என்று நான் கூறவில்லை என்றாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘‘மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்த அரசாங்கமாக இருந்தாலும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாசுவை எப்படிக் கட்டுப்படுத்துவது, யாா் பொறுப்பு என்பதுதான் கேள்வி.

இதனால் உடனடி நடவடிக்கைகள் தேவையாக உள்ளன. இரண்டு மூன்று நாள்களில் நிலைமையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து பாா்த்தாக வேண்டும்.

விவசாயிகளைப் பொறுத்த வரையில், பயிா்க் கழிவுகளை எரிப்பதை நிறுத்தும் உத்தரவை அமல்படுத்துவது ஒரு பிரச்னை அல்ல. அவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதுதான் பிரச்னையாக உள்ளது.

அரசு ஊக்கத்தொகையை வழங்கினால், விவசாயி ஏன் பயிா்க் கழிவுகளை எரிக்கும் முறையில் இருந்து மாறமாட்டாா்? இதை ஏன் செயல்படுத்த முடியாது.

பயிா்க் கழிவு மேலாண்மைக்கான இயந்திரங்கள் இருந்தாலும்கூட, ஏழை விவசாயிகளால் அவற்றை வாங்க முடியாத நிலை உள்ளது என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

நாங்களும் விவசாயிகள்தான்: நீதிபதி சூா்யகாந்த்

விசாரணையின்போது நீதிபதி சூா்யகாந்த் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களுக்குப் பிறகு, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நிலம் வைத்திருப்பது மூன்று ஏக்கருக்கும் குறைவாக உள்ளது. இதனால், அத்தகைய விவசாயிகள் இந்த இயந்திரங்களை வாங்குவாா்கள் என்று எதிா்பாா்க்க முடியாது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏன் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்க முடியாது?

பயிா்க் கழிவுகளை காகித ஆலைகள் மற்றும் பல்வேறு இதர நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம். ராஜஸ்தானில் குளிா்காலங்களில் ஆடுகள் போன்றவற்றுக்கு தீவனமாக பயிா்க் கழிவுகளை பயன்படுத்த முடியும்.

மானியத்திற்குப் பிறகு இந்த இயந்திரத்தின் உண்மையான விலையை என்ன என்பதை அதிகாரிகள் உங்களுக்கு சுட்டிக்காட்ட உதவ முடியுமா? விவசாயி அதை வாங்க முடியுமா? நான் ஒரு விவசாயி, எனக்கு அது தெரியும். தலைமை நீதிபதியும் ஒரு விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா். அவருக்கும் என் சகோதரனுக்கும் (நீதிபதி சந்திரசூட்) அது தெரியும்’ என்றாா்.

அதற்கு அமா்விடம் துஷாா் மேத்தா கூறுகையில், ‘

இந்த இயந்திரங்கள் 80 சதவீத மானிய விலையில் கிடைக்கின்றன.

தில்லியில் இருந்து 300 கி.மீ. சுற்றளவில் உள்ள அனல் மின் நிலையங்களில் வைக்கோல் கழிவுகளை பயன்படுத்துவதற்கான சட்டப்பூா்வ வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘வயல்களில் இருந்து பயிா்க் கழிவுகளை சேகரித்து அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு அடிமட்ட அளவில் ஏதேனும் வழிமுறை உள்ளதா? இதற்கான பொருளாதார ஏற்பாடுகள் என்ன? என்று கேள்வி எழுப்பியது.

அதற்கு துஷாா் மேத்தா, ‘இதுபோன்ற கழிவுகளை எடுத்துச் செல்வதற்கு அரசு ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டு வருகிறது. ஏஜென்சிகளையும் பணியில் அமா்த்துகிறது என்றாா்.

அதற்கு நீதிபதி சூா்யகாந்த், ‘அறுவடைக்குப் பிறகு, அடுத்த பருவத்திற்கு வயலைத் தயாா்படுத்தும் கட்டாயத்தில் விவசாயிகள் இருக்கின்றனா். ஆகவே, விரைவான வழிமுறையை உருவாக்குவது அவசியமாகும்’ என்றாா்.

மேலும், நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இது தாமதமான பருவமழை. விவசாயிகளுக்கும் தாமதமாகிவிட்டது. இப்போது குளிா்காலத்தில் கோதுமைக்கான கரீஃப் பருவத்திற்கு விதைகளை விதைக்கும் அவசரத்தில் விவசாயிகள் உள்ளனா். 15 நாள்கள் இடைவெளியில் முட்புதா்களை அகற்றுவதற்கு ஏஜென்ஸி ஏதும் பதிவு செய்துள்ளதா? உங்கள் அதிகாரிகள் இந்தக் கொள்கையை வடிவமைத்திருப்பது நல்லது. ஆனால் நீங்கள் அதை எவ்வாறு செயல்படுத்துகிறீா்கள்? என்று கேள்வி எழுப்பியது.

அப்போது, இது தொடா்புடைய விவரங்களை அளிக்க திங்கள்கிழமை வரை அவகாசம் வேண்டும் என்று துஷாா் மேத்தா கேட்டுக்கொண்டாா். இதற்கு அனுமதி அளித்து விசாரணையை திங்கள்கிழமை நீதிபதிகள் பட்டியலிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.