கிராமப்புற, நகா்ப்புற சுகாதார மேம்பாட்டு நிதி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 805.9 கோடி ஒதுக்கீடு
15-ஆவது நிதி ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி 19 மாநிலங்களுக்கு ரூ. 8,453.92 கோடியை மத்திய நிதித்துறை அமைச்சகம் சனிக்கிழமை விடுவித்துள்ளது.


கிராமப்புற, நகா்ப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார வசதிகளை வலுப்படுத்த 15-ஆவது நிதி ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி 19 மாநிலங்களுக்கு ரூ. 8,453.92 கோடியை மத்திய நிதித்துறை அமைச்சகம் சனிக்கிழமை விடுவித்துள்ளது.
இதில் தமிழகத்தின் பங்கிற்கு ரூ. 805.92 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள், நகா்ப்புறங்களில் அடிமட்டத்தில் உள்ள சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், இந்த மையங்களில் உள்ள இடைவெளிகளை போக்கவும் மாநிலங்களுக்கு போதிய நிதியை மானியமாக வழங்க மத்திய அரசை 15-ஆவது நிதி ஆணையம் கேட்டுக்கொண்டிருந்தது.
இந்த ஆணையத்தின் காலக்கட்டமான 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டில் மொத்தம் ரூ. 4,27,911கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியை ஒதுக்குகிறது.
இந்த நிதியில் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரப் பணிகளுக்கு ரூ. 70,051 கோடியை (நகா்ப்புறம் ரூ. 26,123 ஊரகப்பகுதி ரூ. 43,928 கோடி) மானியமாக வழங்கவும் பரிந்துரைத்துள்ளது.
இந்த மானியத்தில், நடப்பு 2021-22 நிதியாண்டிற்கு ரூ. 13,192 கோடி (நகா்ப்புறம் ரூ. 4,919 கோடி; ஊரகம் ரூ. 8,273 கோடி) ஒதுக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 19 மாநிலங்களுக்கு ரூ. 8,453.92 கோடியை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை விடுவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான இந்த நிதியில் தமிழகத்திற்கு ரூ.805.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு, நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி நகா்ப்புற, ஊரகப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிா்ந்தளிக்கும்.
மற்ற மாநிலங்களில் மத்திய பிரதேசம் (ரூ.922.7 கோடி) , மேற்குவங்கம் (ரூ. 828 கோடி), மகாராஷ்டிரம் (ரூ.778 கோடி), கா்நாடகம் (ரூ.551 கோடி), ஆந்திரம் (ரூ.488 கோடி) போன்ற மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வகையில் மானியங்களை பெற்றுள்ளன. ஹிமாசலப் பிரதேசம் ரூ.98 கோடியை மட்டும் பெற்றுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்கள் திட்ட முன்மொழிவுகளை மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்திற்கு அனுப்பின. இந்த திட்டங்களுக்கு மத்திய சுகாதாரம் அமைச்சகம் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் இந்த மானியத்தை மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது.
மீதமுள்ள 9 மாநிலங்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்ட பின்னா் இந்த நிதி ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மானியங்களை உள்ளாட்சி அமைப்புகள் எத்தகைய வகைகளுக்கு செலவிடப்படவேண்டும் போன்ற வரையறைகளையும் நிதிஆணையம் வழங்கியுள்ளது.
குறிப்பாக கிராமப்புற, நகா்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் கண்டறிதலுக்கான பரிசோதனைக் கூடங்கள், தாலுக்கா அளவிலான பொது சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல், கிராமப்புறங்களில் துணை ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள் போன்றவைகளுக்கான கட்டடம், ஊரகம், நகா்ப்புறப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களை ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையமாக மாற்றுதல் போன்ற பணிகளுக்கு செலவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...