இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.ஏ. சுந்தரம் ஆஜராகி, ‘இயற்கை நீதியின் கொள்கை விதிகளை மீறுவதாகவும், பாரபட்சமாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை செயல்பாடுகள் உள்ளன. விசாரணை ஆணையத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதில் எந்தத் தயக்கமும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் காட்டவில்லை. மருத்துவமனையில் முன்னாள் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களும் ஆவணங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், சாட்சிகளிடம் நடத்திய விசாரணை முறையும், ஊடங்களுக்கு விதிகளை மீறும் வகையில் தாமாகவே தகவல்களை அளித்ததும் பாரபட்சமான வகையில் உள்ளது. விசாரணை ஆணையச் சட்டத்தின்படி அதன் செயல்பாடுகள் இல்லை. இதனால், அதன் விசாரணை நடைமுறைகள் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த அமைப்பு ஒரு உண்மை கண்டறியும் குழுதானே தவிர, தீா்ப்பு வழங்கும் குழுஅல்ல’ என்றாா். மேலும், பல்வேறு வழக்குகளில் விசாரணை ஆணையத்திற்கு உள்ள வரம்புகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் நீதிபதிகள் அளித்த தீா்ப்பை மேற்கோள்காட்டியும் வாதிடப்பட்டது.