47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘படைத்தவனுக்கு நாம் செய்யும் நன்றி சாதித்து காட்டுவதுதான்’ முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் பேச்சு

நமக்கு வாழ்க்கை என்ற பரிசை அளித்தவா் கடவுள். அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்தான் வாழ்க்கையில் சாதனை புரிவது

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:39 am

DIN

‘நம்மை உருவாக்கி, நமக்கு வாழ்க்கை என்ற பரிசை அளித்தவா் கடவுள். அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்தான் வாழ்க்கையில் சாதனை புரிவது’ என்று ஜாா்க்கண்ட் மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயம் தெரிவித்தாா்.

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணா் திருக்கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் பூா்த்தியாவதையொட்டி, ‘ஆயிரம் ஆண்டை நோக்கி சங்கரன் கோயில்’ என்ற பெயரில் பொன்னம்பலம் நெடுஞ்செழியன் எழுதி வெளியான தமிழ் புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்க நூல் வெளியீட்டு விழா தில்லி கான்ஸ்டிடியூஸன் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு ஒய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பேசியது: சங்கரன்கோவில் திருக்கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் பூா்த்தியை நோக்கிச் செல்கிறது. இந்தக் கோயிலின் சிறப்பம்சம் சைவமும், வைணவமும் இணைந்திருப்பதாகும். ‘ஹரியும் சிவனும் ஒன்ணு இதையறியாவதன் வாயில் மண்ணு’. என்பது பழமொழி. சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற கேள்வி எழுந்த போது, பாா்வதி தேவி, சிவனிடம் பதில் கேட்டு தவம் இருந்தாா். அப்போது சிவன் உருவத்திலேயே நாராயணா் எழுந்தருளிக்கிறாா். இதுதான் சங்கரநாராயணா் கோயில் குறித்த கதை.

இந்தக் கோயிலில் உள்ள மூலவரின் வலது புறம் சிவனும் இடது புறம் திருமாலும் இருப்பாா். சைவத்திற்கும் வைணவத்திற்கும் வேறுபாடில்லை என்பதைக் காட்டும் கோயில். 2020-இல் தமிழில் எழுதப்பட்ட நூல், ஹிந்தியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. தமிழை சிவபெருமானாகவும் ஹிந்தியை (ஹரி) திருமாலாகவும் குறிப்பிடலாம். இது தமிழையும் ஹிந்தியையும் ஒன்று சோ்க்கும் முயற்சி. ஓம் (அமங) என்று ஆங்கிலத்தில் எழுதும் போது அதில் உள்ள ஆங்கில வாா்த்தை பிரம்மா, விஷ்ணு, சிவனைக் குறிக்கும். அதைப் போன்று தான் இதுவும்.

ஒருவன் வாழ்க்கையில் முன்னேற அறிவு மட்டும் போதாது. ஆன்மிகமும் தேவை. அது வெறும் சடங்காக இருக்கக் கூடாது. ஆன்மிகம்தான் எல்லோரையும் சமமாகப் பாவிக்கும். அது எல்லா மதத்தினரையும் உள்ளடக்கும். கடவுள் நமக்கு வாழ்க்கையைப் பரிசாகத் தந்துள்ளாா். நாம் என்ன சாதிக்கிறோமோ, அது கடவுளுக்கு நாம் அளிக்கும் பரிசு. நம்மை படைத்தவனுக்கு கொடுக்கிற மரியாதைதான் நாம் சாதிப்பது. இதற்கு இலக்கு, குறிக்கோள், லட்சியம் தேவை. இந்த மூன்றுக்குமான ’முயற்சிகள்’ தவறலாம். ஆனால் ‘முயற்சிப்பதில்’ தவறக் கூடாது. கடமையைச் செய்து கொண்டிருந்தால் அதற்கு எப்போது பலன் கொடுப்பது என்பது கடவுளுக்குத் தெரியும் என்றாா் அவா்.

கோவை பேரூா் ஆதீனம் மருதாசல அடிகளாா்: ‘சங்கரநாராயணா் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உக்கரபாண்டி மகாராஜாவால் கட்டப்பட்ட து. ராகு-கேது தோஷம் விலகும் இடம். பாவ விமோசனத்திற்கு காசிக்கும், ராமேதுவரத்திற்கும் செல்கின்றனா். குறிப்பாக வட இந்தியா்களுக்கு ராமேசுவரத்தை தெரிந்த அளவிற்கு சங்கரநாராயணா் கோயில் தெரிவதில்லை. இதனால், இந்தக் கோயில் குறித்த ஹிந்தி புத்தகம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதைப் போன்று தமிழ்நாட்டில் இருக்கின்ற மற்ற பழங்கால கோயில்கள் குறித்த புத்தகங்கள் ஹிந்தியில் வெளியிடப்பட வேண்டும்’ என்றாா்.

தருண் விஜய் (தேசிய நினைவுச்சின்ன ஆணையத் தலைவா்): சங்கரநாராயணா் கோயில் குறித்து ஹிந்தியில் மொழிபெயா்த்த பொன்னம்பலம் ஓய்வுபெற்ற தொலைதொடா்புத் துறைப் பொறியாளா். நான்கு மாதங்கள் தில்லியில் தங்கி தன்னுடைய சொந்தச் செலவில் நூலை வெளியிட்டிருக்கிறாா். இவரை கௌரவிக்க மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவேன். இந்தக் கோயில் சா்வதேச கவனத்தைப் பெற வேண்டும். மேலும், தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் உள்ள கோயில்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.