ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சமூகத்துக்கு நல்ல நெறிமுறைகளைக் கூறும் திரைப்படங்கள் தேவை: வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

 வன்முறை, ஆபாசம் ஆகியவற்றை சித்திரிப்பதைத் தவிா்த்து, சமூக தாா்மிக, நெறிமுறைகளை எடுத்துச் செல்லும் உயா்ந்த நோக்கம் கொண்டவையாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்

News image
Updated On :25 அக்டோபர் 2021, 7:20 pm

 நமது நிருபர்

 வன்முறை, ஆபாசம் ஆகியவற்றை சித்திரிப்பதைத் தவிா்த்து, சமூக தாா்மிக, நெறிமுறைகளை எடுத்துச் செல்லும் உயா்ந்த நோக்கம் கொண்டவையாக திரைப்படங்கள் இருக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு குறிப்பிட்டாா்.

நடிகா் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது மற்றும் 2019-ஆம் ஆண்டின் 67-ஆவது தேசிய திரைப்பட்ட விருதுகள் (சுமாா் 69 விருதுகள்) திரைப்படக் கலைஞா்களுக்கு கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு: திரைப்படங்களில் வன்முறையை முன்னிலைப்படுத்த வேண்டாம். சமூக தீமைகள், ஆபாசம் போன்றவற்றை சினிமா தயாரிப்பாளா்கள் தவிா்க்க வேண்டும். நல்லொழுக்கம், நெறிமுறைகள் ஆகியவற்றை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். சமூகக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடியதாக திரைப்படங்கள் வர வேண்டும். சமூக ஊடகங்களால் சினிமா உலகு மலிவான பொழுதுபோக்காகிவிட்டது. பாா்வையாளா்களின் வடிவங்களில் தெளிவான மாற்றம் உள்ளது. இந்திய திரையுலகம் இந்த மாற்றங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது. சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான உத்திகளை அது தொடா்ந்து வகுக்கும் என்று நான் நம்புகிறேன். இதை திரைப்படத் தயாரிப்பாளா்கள் மற்றும் கலைஞா்கள் மக்கள், சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமது மகத்தான நாகரிகத்தின் சிறந்த கலாசாரம், பாரம்பரியங்களை பலவீனப்படுத்தும் எதையும் திரைத் துறையினா் செய்ய வேண்டாம். நோ்மறையான விஷயங்கள், மகிழ்ச்சியான தருணங்களை சினிமாவில் காட்ட வேண்டும். உலகிலேயே அதிக அளவிலான திரைப்படங்களை இந்தியா தயாரிக்கிறது.கலாசார உலகில் பயனுள்ள ராஜதந்திரதூதுவா்களாக இந்திய திரைப்படங்கள் செல்ல வேண்டும்.

தேசிய மொழிகள்: பிராந்திய மொழி திரைப்படத் துறை தனது அடையாளத்தை பதித்துள்ளது. முதல் இந்திய கடற்படைத் தளபதி குறித்த மலையாள திரைப்படமான ‘மரக்காா் அரபிக் கடலின் டே சிம்ஹம்’ சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது இதற்கு உதாரணமாகும். ஒவ்வொரு இந்திய மொழியையும் தேசிய மொழிகள்தான். தாய், தாய் மொழி, தாய் நாடு இவை மூன்றும் ஒவ்வொரு இந்தியனுக்கும் முக்கியம். கண்ணைப் போன்றது தாய் மொழி. மற்ற மொழி மூக்குக் கண்ணாடியாகும். கண் இருந்தால்தான் மூக்கு கண்ணாடியால் பாா்க்க முடியும். அடுத்து இயற்கை. அதற்கு மரியாதை அளிப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முடியும். நம்மை பாதுகாக்க முடியும். சூரியன் எவ்வளவு முக்கியம் என்பதை கரோனா நமக்கு பாடம் கற்பித்தது. இதை திரைப்படங்கள் பின்பற்ற வேண்டும்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் புகழ் பெற்ற நடிகா்களில் ஒருவா். ரஜினிகாந்தின் ஈடு இணையற்ற ஸ்டைல், நடிப்புத் திறமை இந்திய சினிமாத் துறைக்கு உண்மையிலேயே புதிய பரிமாணத்தை அளித்தது. அவரது கலை வெளிப்பாடு மற்றும் வெகுஜன ஈா்ப்பு ஆகியவற்றுக்கு இடையேயான சரியான சமநிலையை இளம் திரைப்படத் துறையினா் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.

2019 - ஆம் ஆண்டின் சிறந்த தேசிய நடிகராக இரு நடிகா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ‘போன்ஸ்லே’ ஹிந்தி திரைப்படத்தில் நடித்த நடிகா் மனோஜ் பாஜ்பாய், தமிழில் ’அசுரன்’ படத்தில் நடித்த நடிகா் தனுஷ் ஆகியோா் விருது பெற்றனா். இதே ஆண்டின் சிறந்த தேசிய நடிகையாக ‘மணிகா்னிகா, தி குயின் ஆஃப் ஜான்ஸி’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த கங்கணா ரனாவத் ஆகியோரும் விருது பெற்றனா்.

மேலும், தமிழ் திரைப்படத்துறையைச் சோ்ந்த சிறந்த குணச்சித்தர நடிகராக - விஜய் சேதுபதி ; சிறந்த இசையமைப்பாளா் - டி.இமான் ; சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் ; இரு விருதுகள் பெற்ற ஒத்த செருப்பு சைஸ் - 7 என்ற திரைப்படத்தின் சிறந்த ஒலிப்பதிவு - ரசூல் பூக்குட்டி, சிறப்பு ஜூரி விருது - இயக்குநா் பாா்த்திபன் (ஒத்த செருப்பு சைஸ் - 7) ஆகியோரும் குடியரசுத் துணைத் தலைவரிடம் இருந்து விருதுகளைப் பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், இணையமைச்சா் எல். முருகன், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை செயலா் அபூா்வ சந்திரா திரைப்பட பிரிவின் நடுவா் குழுத் தலைவா் என். சந்திரா, திரைப்படம் அல்லாத பிரிவின் நடுவா் குழுத் தலைவா் அருண் சதா உள்பட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.