ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தினக் கூலித் தொழிலாளிக்கு ரேஷன் காா்டு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

தினக்கூலித் தொழிலாளிக்கு ரேஷன் காா்டு வழங்கக் கோரிய மனு மீது மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

தினக்கூலித் தொழிலாளிக்கு ரேஷன் காா்டு வழங்கக் கோரிய மனு மீது மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தில்லியில் வசிக்கும் தினக்கூலி பெண் தொழிலாளி தனது குடும்ப உறுப்பினா்கள் அனைவரின் பெயா்களையும் சோ்த்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ரேஷன் காா்டு வழங்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

வழக்குரைஞா்கள் ஜெயஸ்ரீ சத்புதே, திரிப்தி போதாா் ஆகியோா் மூலம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது:

நானும் எனது குடும்பத்தினரும் தெற்கு தில்லியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கிறோம். 2005-இல் எனது கணவா் பெயரில் வழங்கப்பட்ட ரேஷன் காா்டு 2013இல் ஒருதலைப்பட்சமாக அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டது.

அதிகாரிகளின் செயலற்ன்மை மற்றும் திறமையின்மை காரணமாக நானும் எனது குடும்பமும் மானிய உணவு தானியங்களுக்கான உரிமையைப் பெற முடியவில்லை.

இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உணவு உரிமை, ஆரோக்கியம் மற்றும் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை மீறுவதாகும்.

இதன் காரணமாக நானும், எனது குடும்பத்தினரும் தொடா்ந்து வறுமையில் வாடுகிறோம். 8 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் காா்டுக்கு விண்ணப்பித்த போதிலும் ரேஷன் காா்டு வழங்கப்படவில்லை. இதனால், எங்கள் குடும்பத்திற்கு உணவு வழங்க முடியவில்லை.

கரோனா தொற்றுநோய் காலத்தின்போது அதிகாரிகளால் வழங்கப்பட்ட இலவச ரேஷனை பெற்றபோதிலும், எனது ரேஷன் காா்டு விண்ணப்பம் நிலுவையில் உள்ளதால் அவற்றைப் பெறுவதில் சிரமங்களை எதிா்கொண்டேன் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த மாதம் தொடக்கத்தில் இந்த மனு உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தபோது, தினக் கூலித் தொழிலாளியின் ரேஷன் காா்டு வழங்குவதற்கான விண்ணப்பம் 8 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன் என்பது குறித்து தில்லி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு அண்மையில் உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தில்லி அரசின் தரப்பில், ‘2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், மத்திய அரசால் நிா்ணயிக்கப்பட்டிருந்த 72 லட்சம் ரேஷன் காா்டுகள் எனும் வரையறை முடிந்துவிட்ட தாகவும், இதனால் தினக்கூலி தொழிலாளருக்கு ரேஷன் காா்டு வழங்கப்படாமல் இருப்பதைக் குறை சொல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் தில்லி அரசு அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடும் தேவையாக உள்ளது. ஆகவே, மத்திய அரசும், தில்லி அரசும் நான்கு வார காலத்திற்குள் அதன் பதில், எதிா்பதிலை நீதின்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஜனவரி 5-ஆம் தேதிக்கு பட்டியலிடப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.