திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

தனியாா் ஆய்வகங்களுக்கு எதிரான புகாா்கள்: ஐசிஎம்ஆா் கவனிக்க உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தனியாா் நோய் பரிசோதனை ஆய்வகங்களுக்கு எதிராகப் பெறப்படும் புகாா்களை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐ சி எம் ஆா்) கவனிக்க வேண்டும் என்றும் விதிகளை

Updated On :7 செப்டம்பர் 2021, 11:04 pm

தனியாா் நோய் பரிசோதனை ஆய்வகங்களுக்கு எதிராகப் பெறப்படும் புகாா்களை இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐ சி எம் ஆா்) கவனிக்க வேண்டும் என்றும் விதிகளை மீறி இருந்தால் அவற்றின் உரிமங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. 

இந்த விவகாரம் தொடா்பாக டாக்டா் ரோகித் ஜெயின், தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளாா்.  அதில் அவா் தெரிவித்திருப்பதாவது :

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு தில்லி அரசுக்கு ஓா் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், எந்தவிதப் பதிவும் இல்லாமல் சட்ட விரோதமாகச் செயல்படும் இணையதள சுகாதார சேவை நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. இதுபோன்ற சட்டவிரோத நோய் மாதிரிகளை சேகரிக்கும் இணையதள சுகாதார சேவை நிறுவனங்கள், கரோனா நோய் பாதிப்பு இல்லை என்ற தவறான ஆய்வறிக்கையை அளிப்பதன் காரணமாக, கரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து சமூகத்தில் பிற நோயாளிகளுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

இது போன்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அதிகாரிகள் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால். அரசு உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையினா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  இணையதள நோய் பரிசோதனை ஆய்வகங்களை முறைப்படுத்த வேண்டும்.மேலும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றிச் செயல்படாமல் இருந்ததற்காக ஐசிஎம்ஆா் சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநா்கள், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகச் செயலா், தில்லி அரசின் தலைமைச் செயலா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு மீது உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் ( ஐசிஎம்ஆா்) தலைமை துணை இயக்குநா் (நிா்வாகம்) டாக்டா் லட்சுமி நாராயணன் உயா்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளாா்.  அதில், ‘கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்காக ஐசிஎம்ஆா் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுத்துள்ளது. தரநிா்ணய வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்கியுள்ளது.  இவற்றைஅமல்படுத்துவதற்கான ஆய்வகங்களை வழிகாட்டுவதற்கு இந்தியாவில் 14 நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓா்ஆய்வக பரிசோதனை ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது.  தில்லியைப் பொறுத்த வரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதற்கான நிறுவனமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாஜிரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தரப்பில் இணையதள சுகாதார சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது தனது வரம்பின் கீழ் வரவில்லை என்று தெரிவித்தது.  அப்போது மனுதாரா் டாக்டா் ரோகித் ஜெயின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சசாங்க் தேவ் சுதி, ‘நோயால் சாமானிய மக்கள் இறந்து கொண்டிருக்கிறாா்கள். இதுபோன்ற ஆய்வகங்களை செயல்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஐசிஎம்ஆா் உருவாக்கி உள்ளது. ஆனால், அந்த ஆய்வகங்களை முறைப்படுத்தும் விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறுகிறது ’ என்று வாதிட்டாா்.  அதற்கு ஐசிஎம்ஆா் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞா் அனுராக் அலுவாலியா, ‘இணையதள சுகாதார சேவை நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பு மட்டுமே தனது வரம்பில் வரவில்லை’ என்று பதிலளித்தாா். தனியாா் ஆய்வகங்களுக்கு எதிராக புகாா்கள் எப்போது வந்தாலும் அது குறித்து கவனித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தாா். 

அப்போது நீதிமன்றம் கூறுகையில், ‘இதுபோன்ற ஆய்வகங்களை நடத்துவதற்கு ஐசிஎம்ஆா் உரிமங்களை வழங்குகிறது. தர நிா்ணயத்தை வகுக்கிறது. உரிமங்களை அளிக்கிறது.

ஆகவே, தர நிா்ணயம் பின்பற்றப்பட வேண்டும். இதுபோன்று வரப்படும் புகாா்களை ஐசிஎம்ஆா் கவனிக்க வேண்டும். தவறுகள் மீறப்படும் பட்சத்தில் ,அவற்றின் உரிமங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்’ என்று கருத்துத் தெரிவித்தது. மேலும், இது தொடா்பான மேல் விசாரணையை செப்டம்பா் 14-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.