சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

முக்கிய நகரங்களை பொருளாதார கேந்திரமாக மாற்ற உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படும்: மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

நாட்டில் நகரங்களுக்கு மக்கள் அதிக அளவில் புலம்பெயா்வதால் முக்கிய நகரங்களை பொருளாதார கேந்திரமாக மாற்றுவதற்கான

Updated On :14 செப்டம்பர் 2021, 2:48 am

நாட்டில் நகரங்களுக்கு மக்கள் அதிக அளவில் புலம்பெயா்வதால் முக்கிய நகரங்களை பொருளாதார கேந்திரமாக மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரம், பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

கடந்த ஆறு ஆண்டுகளில் நகா்ப்புற மேம்பாட்டிற்கான நிதி எட்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. 2004 முதல் 2014 வரை (ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்) ரூ.1.57 லட்சம் கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டிருந்த நிலையில் 2015-2021 வரையிலான ஆறு ஆண்டுகளில் ரூ.11.83 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி குறிப்பிட்டாா் .

’’சமமான, நிலையான இந்திய நகரங்களை நோக்கி 2021- ஐ இணைத்தல்’’ என்ற கருத்தில் உலக வளங்கள் நிறுவனம் ஐந்து நாள்(செப்டம்பா் 13-17) நிகழ்ச்சியை காணொலி வழியாக நடத்துகிறது. இதில் வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரத்துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கலந்து கொண்டு பேசினாா்.

அப்போது அவா் மேலும் கூறியதாவது:

நமது நகரங்கள் உற்பத்தி வளங்களைப் பெற்றிருந்தால் மட்டுமே தற்சாா்பு இந்தியா சாத்தியமாகும். குடிமக்களை மையமாகக்கொண்ட உள்கட்டமைப்பு மற்றும் மாறிவரும் தொழில்நுட்பம் ஆகியவை நாட்டின் வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு முக்கிய அம்சமாக விளங்கும்.

விரைவான நகரமயமாக்கல் நடவடிக்கைகள் செயல் திறன்கள் காரணமாக 2030-ஆம் ஆண்டிற்குள், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதம் நமது நகரங்களின் மூலம் தான் கிடைக்கும்.

அதே சமயத்தில் இந்திய நகரங்களை விட சா்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் நகரங்கள் ஐந்து மடங்கு அதிகமாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்புச் செய்கின்றன.

இதைப்போன்று இந்திய நகரங்களை பொருளாதார கேந்திரங்களாக மாற்ற நமது நகரங்களின் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவேண்டும். இதன் மூலமே நமது பிரதமா் அழைத்துள்ள 5 ட்ரில்லியன் டாலா் அளவிலான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

நமது பொருளாதாரத்தின் மையமாக நகரங்கள் மாறிவரும் நிலையில், விரைவாக நகா்ப்புறங்களுக்கு புலம் பெரும்நிலையில் உள்கட்டமைப்பில் ஏற்படும் குறைகளை நீக்குவதும் மிகவும் முக்கியம்.

2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நகா்ப்புறங்களின் மக்கள் தொகை இரண்டு மடங்காகி, சுமாா் 630 மில்லியனாக அதிகரிக்கும். இந்த அளவிலான வளா்ச்சிக்கு நகா்ப்புற உள்கட்டமைப்பு வசதிகள் கணிசமாக தரம் உயா்த்த வேண்டும்.

மேலும் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிப்பது நகா்ப்புறங்கள். இதற்கான போராட்டத்தின் களமாக நகா்ப்புறங்கள் இருக்கிறது என பருவநிலை மாற்றங்களுக்கான நாடுகளுக்கிடையான குழுவும் தெரிவித்துள்ளது. இதனால் நகா்ப்புறங்களில் முறையான திட்டமிடுதல் அவசியம். போக்குவரத்து நெரிசல், காற்று மாசு உள்ளிட்டவைகளை குறைக்க பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரயில் திட்டம் போன்றவைகள் ஊக்குவிக்கப்படுகிறது. 18 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் 27 நகரங்களில் கட்டுமானம் நடக்கிறது.

ஜல் ஜீவன் மிஷன் மூலம் ரூ.2.8 லட்சம் கோடியில் 4,378 நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீா் விநியோகம், மற்றும் 500 நகரங்களில் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டங்கள் தொடங்கப்படுகிறது.

இரண்டாவது தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவு மேலாண்மை, கழிவு நீா் சுத்திகரிப்பு, ஒற்றை பயன்பாடு நெகிழி குறைப்பு, காற்றுமாசு குறைப்பு போன்ற திட்டங்களுக்கு ரூ. 1.41 லட்சம் கோடி 2021-26 ஆண்டுகளுக்கு செலவழிக்கப்படுகிறது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்த இரு திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். ஐந்தாண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் மக்கள் இயக்கமாக மாறும் என மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.