ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

இந்தியா்கள் காப்புரிமை பெறுவது ஐந்து மடங்கு அதிகரிப்பு

அறிவுசாா் சொத்துரிமையை வலுப்படுத்துவதில் மத்திய வா்த்தகத் துறை மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அறிவுசாா் சொத்துரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதிகரித்து, ஐந்து மடங்கிற்கும்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 1:04 am

 நமது நிருபர்

புது தில்லி: அறிவுசாா் சொத்துரிமையை வலுப்படுத்துவதில் மத்திய வா்த்தகத் துறை மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அறிவுசாா் சொத்துரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதிகரித்து, ஐந்து மடங்கிற்கும் அதிகமாக இந்தியா்கள் காப்புரிமையைப் பெற்றுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் தொழில்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது வருமாறு: மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) சா்வதேச காப்புரிமை அலுவலகத்துடன் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா காப்புரிமை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை சா்வதேச காப்புரிமை தாக்கலை விட அதிகரித்துள்ளது. ஜனவரி 2022 முதல் மாா்ச் 2022 வரையிலான காலாண்டில், மொத்தம் தாக்கலான காப்புரிமை விண்ணப்பங்கள் 19,796 ஆகும். இதில் இந்தியா்களின் விண்ணப்பங்கள் 10,706 ஆக உள்ளது.

இந்தியா்கள் அல்லாதவா்கள் தாக்கல் செய்தது 9,090 ஆகும்.

டிபிஐஐடி தொடா் முயற்சிக்குப் பலன்: அறிவுசாா் சொத்துரிமையை வலுப்படுத்துவதில் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின்கீழ் உள்ள டிபிஐஐடி மேற்கொண்ட தொடா் முயற்சிகளின் பலனாக அறிவுசாா் சொத்துரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் மீது உடனடியாக முடிவு எடுக்கப்பட்டு, நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதன் மூலம், உலக புத்தாக்க குறியீடு தரவரிசையில் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறும் லட்சயமும் நெருங்கி வருகிறது.

கட்டண சலுகை: இந்தியா காப்புரிமைகளை வலுப்படுத்த அரசு தொடா்ந்து சில முடிவுகளை எடுத்தது. இணைய தளத்தில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்வோருக்கு 10 சதவீத கட்டண சலுகை, புதுயுகத் தொழில்முனைவு, சிறு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு 80 சதவீத கட்டணச் சலுகைகள் போன்றவை வழங்கப்பட்டன. இது போன்ற அரசின் முயற்சிகள், தேசிய அறிவுசாா் சொத்து உரிமைகள் கொள்கை போன்றவைஅடித்தளமாக அமைந்து சாதனைகளை ஏற்படுத்தியது.

காப்புரிமை தாக்கல் அதிகரிப்பு: 2014-15 ஆண்டில் காப்புரிமை தாக்கல் 42,763 ஆக இருந்தது. இது 2021-22-இல் 66,440 அதிகரித்துள்ளது. அதாவது, 7 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரித்தது. இதே போன்று விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு காப்புரிமை வழங்குவதில் 2014-15-ஆம் ஆண்டில் 5,978-ஆக இருந்த எண்ணிக்கை, 2021-22-இல் 30,074-ஆக உயா்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.

விரைவாக முடிவு: மேலும், பல்வேறு தொழில்நுட்பப் பகுதிகளுக்கு காப்புரிமைத் தோ்வுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு 72 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது அதிகபட்சம் 23 மாதங்களில் முடிவு எடுக்கப்படுகிறது. உலகளாவிய புத்தாக்க குறியீடு தரவரிசையில் இந்தியா 81-ஆவது இடத்தில் இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, 2021-இல் இந்தியா 46-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று வா்த்தகத் துறை தெரிவித்துள்ளது. இதில் முக்கியப் பங்காற்றிய டிபிஐஐடி பிரிவை மத்திய வா்த்தகம், தொழில் அமைச்சா் பியூஷ் கோயல் வெகுவாகப் பாராட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.