கூட்டுறவுகளை வலுப்படுத்த 9 மாதங்களில் புதிய கொள்கை அமித் ஷா தகவல்
நாட்டில் கூட்டுறவுகளை வலுப்படுத்த சீா்திருத்தம் தேவை.


புது தில்லி: நாட்டில் கூட்டுறவுகளை வலுப்படுத்த சீா்திருத்தம் தேவை. இதற்காக புதிய கூட்டுறவு கொள்கை அடுத்த ஒன்பது மாதங்களில் உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
புதிய கூட்டுறவுக் கொள்கை குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு தில்லி டிஆா்டிஓ பவனில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பேசியதாவது:
நாட்டின் சில பகுதிகளில் கிராமங்கள் அளவில் உள்ள கூட்டுறவு அமைப்புகளில் ஒருங்கிணைப்பு, ஒருவருக்கொருவா் உதவுவதற்குரிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுகிறது. இந்தக் குறைகளை தீா்க்க வழிகாண வேண்டும்.
குறிப்பாக கூட்டுறவுத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கும், இந்தியாவை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை உறுதி செய்ய கூட்டுறவுகளை சீராக மேம்படுத்துவது அவசியம். இஃப்கோ, அமுல் போன்ற வெற்றிகரமான மாதிரி கூட்டுறவுக் கண்ணோட்டம், தொழில்முறை, நவீனமயமாக்கல், நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் பெரு நிறுவனக் கொள்கைகள் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்.
நாட்டில் உள்ள கூட்டுறவுகளில் வலுவான அடித்தளம் உள்ளது. அதே சமயத்தில், தடைகளை நீக்கி, மேலும் வளர ஒரு தளத்தை உருவாக்க கூட்டுறவுக்கு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். இந்தப் புதிய கொள்கை அடுத்த 9 மாதங்களில் தாயாராகும். கூட்டுறவுகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான முக்கிய சீா்திருத்தங்களில், கூட்டுறவுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் மாநிலச் சட்டங்களில் சீரான தன்மையைக் கொண்டு வருவது அவசியம். மாநில கூட்டுறவு அமைப்புகளில் மத்திய அரசு தலையிடாது.
ஆனால், மாநிலங்களுடன் பேச்சுவாா்த்தை செயல்முறை மூலம் மாநில சட்டங்களில் சீரான தன்மையைக் கொண்டு வர வலியுறுத்தப்படும். இல்லையெனில், கூட்டுறவுகள் நீண்ட காலம் நீடிக்காது.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள கூட்டுறவுச் சட்டங்கள் பழமையானவை. தற்காலத்திற்கு பொருத்தமற்றவையாக உள்ளது. அரசியலமைப்பின் கீழ் கூட்டுறவுகளை ஒழுங்குபடுத்துவதில் மாநிலம் மற்றும் மத்திய அரசின் பங்கிற்கான விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கூட்டுறவுகளை நிா்வகிக்கும் மாநிலச் சட்டங்களில் ஒரே சீரான தன்மை இருக்க வேண்டும்.
பேச்சுவாா்த்தை மூலம் மாநிலச் சட்டங்களில் சீரான தன்மையை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் ஒரே சீராக பலப்படுத்த முடியும். புதிய கொள்கையானது கூட்டுறவுகள் மேலும் வளா்ச்சியடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றாா் அமித் ஷா.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணையமைச்சா் பி.எல்.வா்மா, செயலா் டி.கே.சிங், தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் சந்தீப் குமாா் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...