விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

எடப்பாடியின் மூளைக் குழந்தைகள்!

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல முனைப் போட்டி நடக்கிறது.

News image

அதிமுக பொதுச் செயலளர் எடப்பாடி பழனிசாமி.

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:01 am

பழ . கருப்பையா

நீட்டை ஒழிக்க போராட்டம் நடத்தினார் இசுடாலின்!

எடப்பாடி ஏற்கனவே நடந்துவிட்ட ஒன்றிற்குப் பரிகாரம் தேட முற்பட்டார்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு எடப்பாடி வழங்கியதன் விளைவாக, இன்று எத்தனை ஆயிரம் ஏழைப் பிள்ளைகளின் கழுத்தில் இசுடெதசுக்கோப்புகள் தொங்குகின்றன!

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல முனைப் போட்டி நடக்கிறது. நேரடியான போட்டி திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையில்தான் என்றாலும், இவர்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வண்ணம் பல கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன!

எதிரெதிரான இரண்டு பக்கமும் துண்டு போட்டு வைத்திருந்த தேமுதிக, வெற்றிகரமாகத் தன் பேரத்தை முடித்துக் கொண்டுவிட்டது. எந்தப் பக்கத்தில் போடப்பட்ட துண்டு நிரப்பப்படுகிறதோ, அதற்கு எதிரான அணி மக்கள் விரோத அணி என்பது அந்தக் கட்சியின் "அழகிய' நிலைப்பாடு!

இராமதாசுக்கு அன்புமணியைத் தோற்கடித்துப் புத்தி புகட்ட வேண்டும்! சசிகலாவுக்கு எடப்பாடிதான் குறி! நேரடியாக முட்டி மோதி வெற்றி பெற முடியாதெனினும் தாங்கள் பெறுகின்ற ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் அன்புமணியையும், எடப்பாடியையும் சில தொகுதிகளில் தோற்கடிக்கப் போதுமானவை என்பது இவர்களின் "அழகிய' சிந்தனை!

யார் நீக்கப்பட வேண்டும் என்று முடிவுக்கு வருவது கட்டாயமாகும்போது, மக்களின் பார்வை யாரால் ஆளுங் கட்சியை அகற்ற முடியும் என்பதை நோக்கித் திரும்பும்! அப்போது, அதற்கு மாற்றாக வலிய நிலையில் உள்ள மாற்று அணி மடமடவென்று வெற்றி பெறும் நிலை ஏற்படும்! அப்போது சொந்த நோக்கங்களோடு களம் கண்ட கட்சிகள் தேய்ந்து சிறுத்துவிடும்!

ஆட்சிக் கட்டில் என்பது "டூயட்' பாடும் களம் அன்று; அது மக்களுக்கான பொறுப்பு என்பதும் உணர்த்தப்படும்! கனவுலகத்திலிருந்து வந்தவர்கள் கனவுலகுக்கே திரும்புவார்கள்!

இன்னுமொரு வகையினர் உண்டு! நாடாண்ட மாற்றுக் கட்சியில் தனக்கு முதலிடத்தை அளித்த அந்த நிலை தவறும்போது, வாழ்நாளெல்லாம் எதிர்த்து நின்ற பகைமைக் கட்சிக்குள் நுழைந்து, தன்னுடைய சுய அடையாளத்தை இழந்து, அந்தக் கட்சியின் மூன்றாம் தலைமுறை இளவரசருக்கும் சலாம் சொல்லி, சாமரம் வீசி, அவர்களின் வம்சாவளிப் படங்களைச் சுவரொட்டியில் வரிசையாகப் போட்டுத் தனக்கு வாக்குக் கேட்கும் பரிதாப நிலைக்குச் சிலர் ஆளாவதும் உண்டு!

அந்தத் தொகுதிகளில் அவர்கள் வெற்றி எம்.எல்.ஏ.-க்களே ஆனாலும், இனி அவர்கள் ஏவல் கேட்கிற பாளையக்காரர்கள்தாமே!

மானம் என்னும் தலைப்பை உடைய வான் புகழ் வள்ளுவனின் அதிகாரத்திற்கு, வான்புகழ் உரையாளன் பரிமேலழகன் நிலை தாழாமை என்று பொருள் எழுதுவான்! அடைகின்ற சுகம் பெரிதல்ல; வீழ்ச்சியிலும் யானைபோல் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே பெருமை என்பான்!

தனி மனிதர்களின் பெருமை-சிறுமை என இவை பதவிகளினால் வருவதில்லை; வாழும் முறையினாலேயே வருகிறது!

சனநாயகத்தின் ஒரே ஒரு சிறந்த கூறு, இரத்தச் சிந்தல்கள் இல்லாமல் ஆட்சி மாற்றம் நிகழ்த்த முடியும் என்பதுதான்!

வாளும் வேலும் இல்லாமல் வாயாலும், பேனாவாலும் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும்!

நான்காண்டு எடப்பாடி ஆட்சிக்கும், ஐந்தாண்டு இசுடாலினின் ஆட்சிக்கும் இடையே நடக்கும் போரே இந்தத் தேர்தல்!

எடப்பாடியின் ஆட்சி தொடங்கி அவர் காலூன்ற எடுத்துக் கொண்ட ஓராண்டுக்குள், கொரோனா என்னும் கொடிய நோய் உலகைத் தழுவியது! இன்பத் தமிழ்நாடு விதி விலக்காக முடியாதே!

வண்டிகள் ஒடவில்லை; பெட்ரோல் வரி வராது! மக்கள் வெளிநடமாட்டமே கிடையாது! நுகர்பொருள்களுக்கான வரி வராது! பத்திரங்கள் பதியப்படுவதில்லை; பதிவுக் கட்டணங்கள் வராது!

மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடந்தனர்! அதனால் மக்கள்தொகை பெருகியதா என்பதற்கான தரவுகள் இல்லை!

கடைசி ஆண்டும் அந்த கொரோனாவின் சாயல் இருந்தது!

இதற்கிடையே எடப்பாடி என்ன செய்தார்? கொங்குப் பகுதியில் ஆழியாறு நீர் நனைக்காத மண்ணுக்கு, அதை இழுத்து வந்தார்! அது நிகரற்ற பயனை அந்தப் பகுதிக்கு உண்டாக்கியது என்கின்றனர் மக்கள்!

குண்டாறு, வைகை, காவிரி ஆகியவற்றை உள்நாட்டில் இணைத்துவிட்டால், அதற்குப் பிறகு கோதாவரியின் இணைப்புக்கு வழி தேடலாம் என எண்ணினார்! அதற்கான நிதியையும் அன்றையத் தேவைக்கு ஒதுக்கினார்! அது அடுத்த ஆட்சியில் தொடரப்படவில்லை என்பது எதிர்பார்க்கக் கூடியதுதானே!

குடிமராமத்து என்று சோழர்கள் காலத்திய முறை என்று நாம் கேள்விப்பட்ட ஒன்றைத் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்த முயன்றார்!

ஒவ்வொரு கிராமமும் தன்னுடைய வாய்க்கால், கண்மாய், ஏரித் தேவைகளையும், சாலை போன்றவற்றையும் தன்னுடைய மக்களைக் கொண்டு தானே நிறைவு செய்து கொள்ள வேண்டும்! அதற்கான உதவியை அரசு செய்யும்! அதனால் கிராமங்கள் தன்னிறைவு அடையும்; ஏழைத் தொழிலாளர்கள் ஊதியம் பெறுவர் என எண்ணினார்!

அதை அறிவித்தார்; செயல்முறைப்படுத்தத் தொடங்கினார். கடைசி ஓர் ஆண்டு அதற்குப் போதுமானதாக இருக்க முடியாதுதானே! நிகரற்ற திட்டம் இது! மீண்டும் சோழர் காலத்து வளம் கைகூடும்!

இன்னொன்று: காந்தியின் பேரால் மன்மோகன் காலத்தில் தொடங்கப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்! கிராமத் தொழிலாளர்க்கு வேலை கொடுப்பதற்காக ஏற்பட்டது!

அந்தத் திட்டம் நிகரற்ற திட்டம். வேலைவாய்ப்புப் பெருகும். நகரங்களை நோக்கி அவர்கள் வரத் தேவையில்லை. கிராம வேலைகள் நடைபெறுவதால் கிராமங்கள் வளர்ச்சியுறும்!

ஆனால் எந்த மாநிலமும் அதை ஒழுங்காகச் செய்யவில்லை! பல லட்சம் கோடிகள் வீணாயின! ஆளுங்கட்சிக்காரர்கள் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் அது முடிந்தது. இதனால் கிராம மக்களைப் பங்காளிகளாக்கிக் கொண்டு, அவர்கள் வாயிலும் சிறிது தேனைத் தடவினர்! ஆனால் தேன் கூடு ஆளுங்கட்சிக்கு!

இதை மோடி கண்டு வெறுத்துப் போனார்! கூலி வேலைக்கு மக்களுக்குப் பணம் போய்ச் சேரவில்லை! கிராமம் மாற்றமுறவில்லை!

இனி மைய அரசு மட்டுமே இந்தப் பணத்தைத் தருவது; அதை மாநில ஆளுங்கட்சியினர் சுரண்டுவது என்னும் நிலை போக்கப்பட வேண்டும்!

இனி மைய அரசு அறுபது விழுக்காடு மட்டுமே தரும்! நாற்பது விழுக்காட்டை மாநில அரசு போட வேண்டும்!

நூறு நாள் என்பது போதாது; அது நூற்றி இருபத்தைந்து நாட்களின் வேலைத் திட்டமாக்கப்படும்! இனிச் சுரண்ட முடியாதபடி மைய அரசு அதைக் கண்காணிக்கும்!

மேலும் விவசாயக் காலமான இரண்டு மாதங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் என்றார் மோடி!

இது மோடியின் மிகச் சிறந்த அறிவிப்பு! விவசாயத்திற்கு ஆள் கிடைக்கவில்லை; நூறு நாள் திட்டத்தில் வேலை செய்யாமல் ஆளுங்கட்சியினர் சுரண்டியது போக மீதியை வேலை செய்யாமல் பெறலாம் என்பதற்காக அங்கே போகவே விரும்புகின்றனர்! இனி விவசாயத்தை மூட வேண்டியதுதான் என்னும் விவசாயிகளின் குரல் மோடிக்குக் கேட்டதன் எதிரொலியே, விவசாய காலத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில்லை என்னும் கட்டளை!

இதற்கு ப. சிதம்பரம் சொன்னார்: "எங்களுடைய திட்டம் ஆண்டு முழுவதற்குமானது!' இத்தகைய பேதைமையான வாதங்களைக் கற்கக் கேம்பிரிட்சு வரை போக வேண்டியிருக்கிறது ப. சிதம்பரத்திற்கு!

ஆண்டு முழுவதுக்குமா வேலை கொடுத்தார்கள்? நூறு நாள்தானே கொடுத்தார்கள்!

இப்போது விவசாயம் இரண்டு மாதத்திற்கு வேலை கொடுக்கும்! அங்கு இரண்டு மாதம் கூலி கிடைக்கும்!

மோடி திட்டத்தில் நூற்றி இருபத்தைந்து நாள் வேலை கிடைக்கும்!

இது நம்முடைய திராவிட மாடல் அரசால் கடுமையாக எதிர்க்கப்பட்டது! உள்ளதற்கே பணம் இல்லை; நாற்பது விழுக்காடு நாங்கள் போட வேண்டுமா? போகாத வழியைக் காட்டுகிறார் மோடி எனக் கடும் கண்டனம் தெரிவித்தார் இசுடாலின்!

மறுநாள் எடப்பாடி சொன்னார்: இந்த மோடியின் நூற்றி இருபத்தைந்து நாள் வேலைத் திட்டத்தின் நாற்பது விழுக்காடுச் செலவுகளைத் தமிழ்நாடே ஏற்கும்! அது மட்டுமல்ல; அந்தத் திட்டம் நூற்றி ஐம்பது நாட்களுக்கு விரிவுபடுத்தப்படும்!

நூற்றி இருபத்தைந்து நாட்களுக்குத்தான் எல்லா மாநிலங்களுக்கும் போல், மோடி அரசு அறுபது விழுக்காடு கொடுக்கும்!

மீதமுள்ள இருபத்தைந்து நாட்களுக்கு நூறு விழுக்காடு செலவும் தமிழ்நாடு அரசைச் சேர்ந்ததாகிவிடுமே! ஆயினும் அதைத் திடமாக எடப்பாடி அறிவித்ததன் காரணம், இந்தக் கூடுதல் செலவின் பயன் மைசூர் மாண்டியாவிலுள்ள கன்னடியனுக்கா போகப் போகிறது? இன்பத் தமிழ் விவசாயத் தொழிலாளிக்குத்தானே போகப் போகிறது! அதனால் கிராமங்கள் அடைகின்ற வளர்ச்சி போற்றுதலுக்குரியது அல்லவா?

விவசாயக் காலத்தில் இரண்டு மாதக் கூலியும், இந்தத் திட்டத்தில் மோடியும் எடப்பாடியும் அறிவித்த வேலைத் திட்டத்தில், ஐந்து மாதக் கூலியும் கிடைக்கும் என்றால், ஏழு மாதம் அவனுடைய பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடாதா?

அதுபோல் "நீட்' என்னும் தேர்வு முறையை மைய அரசில் அங்கம் வகித்த திமுகவின் அமைச்சர் காந்திச்செல்வன்தான் அதற்கான மசோதா கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார்!

அந்த "நீட்' தேர்வில் அனிதா என்கிற தாழ்த்தப்பட்ட பெண் தேர்ச்சியடையாமையால், தற்கொலை செய்து கொண்டபோது, பிரதமர் மோடிதான் இந்த "நீட்' தேர்வைக் கொண்டு வந்ததுபோல், அதை எதிர்த்து மோடியின் மீது புழுதியை வாரித் தூற்றி, அந்த நீட்டை ஒழிக்கக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு போராட்டம் நடத்தினார் இசுடாலின்!

எடப்பாடி ஏற்கனவே நடந்துவிட்ட ஒன்றிற்குப் பரிகாரம் தேட முற்பட்டார்!

பணக்காரன் நீட்டுக்குத் தனிப் பயிற்சி பெறுவான்; அவன் எப்படியோ தொலையட்டும்!

அரசுப் பள்ளிக்கு எந்தப் பணக்காரனின் பிள்ளையும் வருவதில்லை. அது கௌரவ குறைச்சல்! அவர்கள் தனிப் பயிற்சி பெறுவது இயலக் கூடியதில்லை!

ஆகவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு எடப்பாடி வழங்கியதன் விளைவாக, இன்று எத்தனை ஆயிரம் ஏழைப் பிள்ளைகளின் கழுத்தில் இசுடெதசுக்கோப்புகள் தொங்குகின்றன!

இவையெல்லாம் ஒரு விவசாயியின் சிந்தனைகள்!

எடப்பாடியின் மூளைக் குழந்தைகள்!

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.