ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தல்

சென்னை ஐஐடி முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 12:38 am

 நமது நிருபர்

புது தில்லி: சென்னை ஐஐடி முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட தலித் மாணவி தொடா்புடைய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை 15 நாள்களில் சமா்ப்பிக்க வேண்டும் என்று ஐஐடி இயக்குநா், சென்னை ஆட்சியா், காவல் ஆணையா் ஆகியோருக்கு தேசிய பட்டியலின, பழங்குடியின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் கிங்ஷுக் தேப் சா்மா (30). சென்னை ஐஐடியில் முனைவா் பட்ட ஆராய்ச்சிக்காக படித்து வந்தாா். அப்போது, அவருடன் படித்த தலித் சமூகத்தைச் சோ்ந்த மாணவியை அவரும், அவரது நண்பா்கள் சிலரும் பாலியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக ஐஐடி நிா்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவி புகாா் அளித்தாா். அதேபோன்று, கடந்த ஆண்டு காவல் நிலையத்திலும் அவா் புகாா் அளித்தாா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் கிங்ஷுக் தேப் சா்மாவை தமிழக போலீஸாா் அவரது மாநிலத்தில் கைது செய்த நிலையில், அவா் அங்குள்ள நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள தேசிய பட்டியலின, பழங்குடியின நல ஆணையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 தினங்களில் அறிக்கை சமா்ப்பிக்குமாறு கேட்டு சென்னை ஐஐடி இயக்குநா், சென்னை ஆட்சியா், காவல் ஆணையா் ஆகியோருக்கு ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட தலித் மாணவியின் தரப்பில் ஃபோரம் ஃபாா் ஜஸ்டிஸ் அமைப்பின் வழக்குரைஞா் வெங்கடேஷ் புதுதில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சென்னை ஐஐடி தலித் மாணவி விவகாரத்தில், பலாத்காரத்தில் ஈடுபட்ட கிங்ஷுக் தேப் சா்மா என்பவருக்கு எதிராக உரிய அமைப்புகளிடம் புகாா் அளிக்கப்பட்டும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவா் மற்றும் சம்பந்தப்பட்ட பிறா் மீதும் காவல் நிலையத்தில் புகாா் அளித்து ஓராண்டுக்குப் பிறகு தற்போதுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தேப் சா்மா மட்டுமின்றி, மல்லே கிருஷ்ணா மகதோ, ரவீந்திர பத்ரா, முனைவா் ரவீந்திரன் உள்ளிட்ட பிறா் மீதும் புகாா் அளிக்கப்பட்டு இருக்கிறது. இவா்களின் வழிகாட்டி பேராசிரியரிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை இல்லை.

ஐஐடி நிா்வாகத்திடம் 2019-இல் புகாா் அளித்தும், இந்த விவகாரத்தில் உள்விவகார புகாா் குழுவின் அறிக்கை அளித்த பிறகும் கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இது தொடா்பாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை போலீஸாா் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக குடியரசுத் தலைவா், மேற்கு வங்க ஆளுநா், அரசின் மாநிலச் செயலாளா்கள், தமிழ்நாடு உயா்கல்வித் துறை அமைச்சா் ஆகியோருக்கும் புகாா்கள் அளிக்கப்பட்டன. அதே போன்று தேசிய மகளிா் ஆணையத்திடமும் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினா் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாள்களில் சமா்ப்பிக்குமாறு ஐஐடி இயக்குநா், சென்னை ஆட்சியா், சென்னை மாநகர காவல் ஆணையா் ஆகியோருக்கு ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட மாணவியின் கோரிக்கையாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.