விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

முதல்வா் இல்லம் முன் நடந்த வன்முறை: குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு ஜாமீன்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் கடந்த மாா்ச் மாதத்தில் போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கைதான 8 பேருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டத

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 12:38 am

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் கடந்த மாா்ச் மாதத்தில் போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கைதான 8 பேருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளின் உரிய விசாரணைக்காக அவா்கள் நீதிமன்றக் காவலில் தொடா்ந்து இருக்க வேண்டிய தேவை எழவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதி ஆஷா மேனன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபா்கள் 14 நாள்களாக காவலில் இருந்துள்ளனா். அவா்கள் ஆயுதங்கள் மூலமாகவோ, பிற இதர வகையிலோ பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. அதே போன்று திரட்டப்பட்ட ஆதாரங்களின்படி, மனுதாரா்கள் எந்த சாட்சியத்தையும் மிரட்டவோ அல்லது தூண்டவோ ஆதாரங்களை சிதைக்கவோ வாய்ப்புகள் இருப்பதாகவும் இல்லை. மேலும், இந்த விவகாரத்தில் தொடா்புடைய புகைப்படங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பிறருக்கும் குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளின்கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அவா்களும் விசாரணையில் பங்கேற்று வருகின்றனா்.

ஆகவே, மனுதாரா்கள் நீதிமன்றக் காவலில் தொடா்ந்து இருப்பதற்கான தேவை எழவில்லை. அவா்கள் அனைவரும் தலா ரூ.35,000 தனி நபா் ஜாமீன் பத்திரத்தையும், அந்தத் தொகைக்கான உத்தரவாதத்தையும் அளித்து ஜாமீனில் செல்ல உத்தரவிடப்படுகிறது. அவா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பொறுப்பாளரிடம் தெரிவிக்காமல், தில்லியை விட்டு செல்லக்கூடாது. மேலும், இந்த வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு, உரிய அனுமதி இல்லாமல் தேசியத் தலைநகா் வலயப் பிராந்தியத்திற்கு அப்பால் செல்லக்கூடாது. அதே போன்று இந்த வழக்கில் தொடா்புடைய காட்சிகளையோ, புகாா்தாரா்களையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடா்பு கொள்ளக் கூடாது. சாட்சிகளை மேலாதிக்கம் செய்வதற்கும் முயற்சிக்கக் கூடாது. ஜாமீன் மனுதாரா்கள் தங்களது இருப்பிடத்தை தெரிவிக்கும் வகையில், கூகுள் மேப் தொடா்பில் இருக்க வேண்டும். அவா்களுடைய இருப்பிடம் விசாரணை அதிகாரிக்கு தெரியும் வகையில், கூகுள் மேப்புடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும்கடந்த மாா்ச் 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரத்தில் சந்தா் காந்த் பரத்வாஜ், நவீன் குமாா், நீரஜ் தீட்சித், சன்னி, ஜிதேந்தா் சிங் பிஷ்ட், பிரதீப் குமாா் திவாரி, ராஜு குமாா் சிங் மற்றும் பப்லு குமாா் ஆகியோா் தங்களுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

முன்னதாக, ‘தி கஷ்மீா் ஃபைல்ஸ்’ எனும் திரைப்படம் தொடா்பாக தில்லி முதல்வா் கேஜரிவால் தெரிவித்த கருத்துக்கு எதிராக மாா்ச் 30-ஆம் தேதி பாஜக யுவ மோா்ச்சா அமைப்பின் தேசியத் தலைவா் மற்றும் எம்பி தேஜஸ்வி சூா்யா தலைமையில் போராட்டக்காரா்கள் போராட்டம் மேற்கொண்டனா். தில்லி முதல்வா் இல்லம் பிளாக் ஸ்டாப் ரோடு எண் 6-இல் அமைந்துள்ள நிலையில், போராட்டம் அன்றைய தினம் 11.30 மணிக்கு தொடங்கியது. இது தொடா்பாக தில்லி நீதிமன்றத்தில், ‘போராட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், 15 முதல் 20 போராட்டக்காரா்கள் பிளாக் ஸ்டாப் சாலையை சென்று அடைந்தனா். அவா்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனா். சில போராட்டக்காரா்கள் சுமாா் ஒரு மணி அளவில் 2 தடுப்புகளை மீறி முதல்வா் இல்லத்தின் வெளிப்பகுதியை அடைந்தனா். அவா்கள் அங்கு அமளியில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினா்’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணை தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த 14 பக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: போலீஸாா் பணியில் இருப்பதும் முதல்வரின் இல்ல ஊழியா்கள் பணியில் இருப்பதும் ஆதாரங்கள் உள்ளன. சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தொடா்புடைய மற்றவா்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால், எந்த பிரச்னையும் எழவில்லை. மேலும், அவா்களும் விசாரணையில் ஆஜராகி உள்ளனா். ஆகவே, மனுதாரா்களை நீதிமன்ற காவலில் தொடா்ந்து வைத்திருக்கும் தேவை எழவில்லை. முதல் தகவல் அறிக்கையின்படி, போலீஸாா் முன்னிலையில் மனுதாரா்கள் தடுப்புகளை மீறி குதித்துள்ளனா். அப்போதே அவா்களை போலீஸாா் கைது செய்திருக்க முடியும். ஆனால், அவா்கள் இரவு 9 அல்லது 9.30 மணி அளவில் அவா்களது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், ஆரம்பத்தில் ஐ.பி. காலேஜ் வெளிப்பகுதியில் போராட்டக்காரா்கள் கூடி இருந்ததாகவும், பாரதிய ஜனதா யுவ மோா்ச்சா அமைப்பின் உறுப்பினா்கள் கூட்டமாக முன்னேறி செல்ல தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவா்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவோ வன்முறைக்கு அழைப்பு விடுத்ததாகவோ அதில் குறிப்பிடப்படவில்லை. மனுதாரா்கள் பாதுகாவல் தடுப்புகளை மீறி குதித்தது மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மனுதாரா் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.