விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தில்லி ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நிறுத்தம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 9:43 pm

 நமது நிருபர்

தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களின் கட்டடங்கள் இடிக்கப்படுவதாக ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு தாக்கல் செய்த மனுவை கவனத்தில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கட்டடங்களை இடிப்பது தொடா்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என முற்பகலில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அதிகாரபூா்வ தகவல் ஏதும் வரவில்லை எனக் கூறி அதிகாரிகள் இடிப்பதை நிறுத்தவில்லை என பிற்பகலில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட்டது.

முஸ்லிம் அமைப்பின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, இது தொடா்பாக அமா்விடம் கோரிக்கை வைத்தாா். இதையடுத்து, ஆக்கிரமிப்பு இடிப்பதை நிறுத்துவதற்கான உத்தரவை வடக்கு தில்லி மாநகராட்சி மேயா், ஆணையா், தில்லி காவல் ஆணையா் ஆகியோருக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு உச்சநீதிமன்ற செக்ரடரி ஜெனரலுக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

முன்னதாக, முற்பகலில், பொதுப் பணித் துறை, வடக்கு தில்லி மாநகராட்சி உள்ளிட்ட குடிமை அமைப்புகளின் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைக்கு எதிரான ஜமியத் மனு குறித்து உச்சநீதிமன்ற அமா்விடம் துஷ்யந்த் தவே, ‘முற்றிலும் அங்கீகரிக்கப்படாத மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான இடிப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அகற்றல் நடவடிக்கை தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், பதில் அளிக்க அவகாசம் அளிக்காமல், நோட்டீஸ் அளிக்காமல் காலை 9 மணிக்கே இடிப்பு நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கிவிட்டனா்’ என்று வாதிட்டாா்.

முஸ்லிம் அமைப்பின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், மற்றொரு மனுவைக் குறிப்பிட்டு வாதிட்டாா். அதில், வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளில் கட்டடங்களை இடிப்பது போன்ற ‘விரைவான நடவடிக்கைகளை’ எடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு மற்றும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

பின்னா், நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே குறிப்பிட்டதன் பேரில் இந்த விவகாரம் தொடா்பான மனுக்களை வியாழன் (ஏப்ரல் 21) உரிய அமா்வில் பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறோம். மறு உத்தரவு வரும் வரை, இன்றுள்ள தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனா்.

வடக்கு தில்லியில் உள்ள ஜஹாங்கிா்புரியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே கல்வீச்சு, தீவைப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வன்முறை மோதல்கள் நிகழ்ந்தன. இதில் 8 போலீஸாா் மற்றும் உள்ளூா்வாசி காயம் அடைந்தனா். இந்த விவகாரத்தில் ஜமியத் உலமா-இ-ஹிந்த் தாக்கல் செய்த மனுவில், கிரிமினல் நடவடிக்கைகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டவா்களின் சொத்துகளை புல்டோசா்களைப் பயன்படுத்தி இடிப்பதற்கு மத்திய பிரதேச அதிகாரிகள் சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தம்: உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகளை வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) புதன்கிழமை நிறுத்தி வைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.