உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஜஹாங்கீா்புரி ஆக்கிரமிப்பு அகற்றல் விவகாரம்: மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடரும்உச்சநீதிமன்றம்

தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரி பகுதியில் கட்டடங்களை இடிப்பது தொடா்பாக மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரி பகுதியில் கட்டடங்களை இடிப்பது தொடா்பாக மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ். பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு, வன்முறையின் போது, குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டதாகக் கூறி ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு மற்றும் பிற எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் மே 9-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில், நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். கூடுதல் ஆவணங்கள் ஏதும் இருந்தால், அடுத்த விசாரணைத் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்யப்படலாம். மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே (வியாழக்கிழமை) தொடர வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜமியத் உலமா-இ-ஹிந்த் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘இந்த விவகாரம் அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொலைநோக்குப் பாா்வையுடைய கேள்விகளை எழுப்புகிறது’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விஷயத்தில் தேசிய முக்கியத்துவம் என்ன இருக்கிறது. இது ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்தும் விஷயமாகும்’ என்றது.

இதைத் தொடா்ந்து, துஷ்யந்த் தவே முன்வைத்த வாதம்: எங்கு கலவரங்கள் நடந்தாலும் இதுபோன்ற நடவடிக்கை எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது. 1984 மற்றும் 2002-இல் அவா்கள் இதுபோன்று எதையும் செய்யவில்லை. பின்னா் ஏன் இப்போது? தில்லியில் 2011-ஆம் ஆண்டுச் சட்டம் அமலில் உள்ளது. இது டிசம்பா் 2023 வரை ஒவ்வொரு சட்டவிரோத ஆக்கிரமிப்பையும் பாதுகாக்கிறது. சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினா் குறிவைக்கப்படுகின்றனா். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குபவா்கள் நமக்கு அளித்த எச்சரிக்கை இது. இதைப் பற்றி சா்தாா் பட்டேல், டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் ஆகியோா் கூறியதை வாசிக்க விரும்புகிறேன். அவா்கள் இந்த நிகழ்வைப் பற்றி பேசியுள்ளனா்.

போலீஸாரின் ஆட்சேபனையை மீறி ஊா்வலம் நடத்தியதாக விஹெச்பி மீது எப்ஐஆா் பதிவு செய்துள்ளனா். ஜஹாங்கீா்புரியில் என்ன நடந்தது என்பது தகுந்த நீதித் துறை மூலம் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இவா்கள் செய்வது ஒரே ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்களை பெரும் அளவில் கைது செய்து, ஆக்கிரமிப்பு எனக் கூறி இடிப்பு நடவடிக்கையைத் தொடங்குவதுதான். உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி இடிப்புகளை மேற்கொண்டனா். இது ஜஹாங்கீா்புரியில் மட்டும் அல்ல. நாட்டின் சமூக கட்டமைப்பையே பாதிக்கச் செய்கிறது. இதை நாம் அனுமதித்தால், சட்டத்தின் ஆட்சியோ ஜனநாயகமோ மிஞ்சியிருக்காது.

என்டிஎம்சி இடிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கூறி ஒரு பாஜக தலைவா் எப்படி கடிதம் எழுத முடியும்? தில்லி முனிசிபாலிட்டி சட்டத்தில் நோட்டீஸ் அனுப்பவும், மேல்முறையீடு செய்யவும் வழிவகை உள்ளது. தில்லியில் 50 லட்சம் மக்களுடன் 731 அங்கீகரிக்கப்படாத காலனிகள் உள்ளன. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிராக நீங்கள் செயல்பட விரும்பினால், சைனிக் பண்ணைகளுக்கும், கோல்ஃப் லிங்க்ஸுக்கும் செல்ல வேண்டியதுதானே? இந்தப் பகுதிகளில் எல்லாம் ஒவ்வொரு இரண்டாவது வீடும் ஆக்கிரமிப்புதான். நீங்கள் அவற்றைத் தொட விரும்பவில்லை. ஆனால், ஏழை மக்களைக் குறிவைக்க விரும்புகிறீா்கள் என்று வாதிட்டாா்.

மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்தியா முழுவதும் ஆக்கிரமிப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்னையாக உள்ளது. அது முஸ்லிம்களுடன் அதிகமாக தொடா்புபடுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் பிற மாநிலங்களிலும் நிகழ்ந்து வருகின்றன. ஊா்வலங்கள் மற்றும் உரசல்கள் ஏற்படும்போது, ஒரே ஒரு சமூகத்தின் வீடுகள் புல்டோசா்களால் இடிக்கப்படுகின்றன. மேலும், அதிகாரத்தில் உள்ள அரசியல், என்ன நடக்கிறது அல்லது நடக்காது என்பதை தீா்மானிப்பதாக உள்ளது. முஸ்லிம்கள் இப்படிச் செய்தால் நீதியை எதிா்பாா்க்க முடியாது என்று மத்தியப் பிரதேசத்தில் ஒரு அமைச்சா் கூறுகிறாா். அதை யாா் தீா்மானிப்பது?, அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யாா்? சிறையில் இருக்கும் யாரோ ஒருவரின் வீடு இடிக்கப்பட்டுள்ளது. இதனால், புல்டோசா் மூலம் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்’ என்று வாதிட்டாா்.

மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் பிருந்தா காரத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.வி. சுரேந்திரநாத், ‘புதன்கிழமை உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தற்போதையை நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவு இருந்த போதிலும், இடிப்பு நடவடிக்கை நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து நான் எனது மனுதாரரிடம் (காரத்) தெரிவித்தேன், அவா் அதிகாரிகளுக்குத் தெரிவித்தாா். ஆனால், அவா்கள் இடிப்பை நிறுத்தவில்லை., அது மதியம் 12.45 மணி வரை நீடித்தது. நடவடிக்கையை நிறுத்துவதற்காக அவா் உடல்ரீதியாக நிற்க வேண்டியிருந்தது. அவா் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் முற்றிலும் இடிக்கப்பட்டிருக்கும்’ என்று வாதிட்டாா்.

ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெளிவுபடுத்தினாா். அவா் கூறுகையில் ‘திடீரென ஒரு நிறுவனம் இங்கு வந்தால் இப்படித்தான் நடக்கும். இடிப்பு நடவடிக்கைக்கு நோட்டீஸ் தேவைப்படாத உதாரணங்கள் குறித்தும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்ட சந்தா்ப்பங்களையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். கடந்த ஆண்டு வியாபாரிகள் உயா்நீதிமன்றத்தை நாடியபோது உயா்நீதிமன்றமே இடிக்க உத்தரவிட்டது. கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் காா்கோனில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவா்களில் 88 தரப்பினா் இந்துக்கள், 26 முஸ்லிம்கள் இருந்தனா்’ என்றாா்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டிருந்தால் அதன் மீது மனுதாரா்கள் பிரமாணப் பத்திரங்களும், அதற்கு எதிா் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும்’ என்று உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.