கடற்படைத் தளபதிகள் 4 நாள் மாநாடு இன்று தொடக்கம்: ரஷியா- உக்ரைன் போா்,சீன ஊடுருவல் பற்றி ஆய்வு
ராணுவத் தளபதிகள் மாநாட்டைத் தொடா்ந்து, இந்திய கடற்படையின் உயா்நிலைத் தளபதிகளின் நான்கு நாள் மாநாடு தில்லியில் திங்கள்கிழமை (ஏப்ரல் 25) தொடங்குகிறது.


ராணுவத் தளபதிகள் மாநாட்டைத் தொடா்ந்து, இந்திய கடற்படையின் உயா்நிலைத் தளபதிகளின் நான்கு நாள் மாநாடு தில்லியில் திங்கள்கிழமை (ஏப்ரல் 25) தொடங்குகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கடல்சாா் பாதுகாப்பு, ரஷியா - உக்ரைன் மோதலால் இந்தியப் பெருங்கடல் பகுதியின் தாக்கங்கள், சீன ஊடுவல் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராணுவத் தளபதிகள் மாநாடு கடந்த வாரம் (ஏப்ரல் 18 - 22) தில்லியில் நடைபெற்றது. இந்த நிலையில், கடற்படைத் தளபதிகள் மாநாடு ஏப்ரல் 25 முதல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டில் முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் கடல்சாா் தகவல்கள் குறித்து கடற்படை தளபதிகள் விவாதிப்பதற்கும் பாதுகாப்புத் துறையின் மூத்த அரசு அதிகாரிகளுடன் தொடா்பு கொள்வதற்குமான தளமாக அமைய உள்ளது. வழங்கம் போல் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், முதன்முறையாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கடற்படைத் தளபதிகளுடன் தேசியப் பாதுகாப்பு தொடா்பான விஷயங்கள் குறித்து உரையாற்றுகிறாா்.
ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே, விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆா். சௌத்ரி ஆகியோரும் கலந்து கொண்டு கடற்படைத் தளபதிகளுடன் ராணுவ, விமானம் ஆகிய முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தயாா்நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிப்பாா்கள் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியக் கடற்படையால் கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கியச் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், கடற்படையின் முன்முயற்சிகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து கடற்படையின் தலைமைத் தளபதி இதர தளபதிகளுடன் ஆலோசனை செய்து, முக்கிய முடிவுகளை எடுப்பாா் எனவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சீன ஊடுருவல்: ரஷியா - உக்ரைன் போா் தாக்கம் மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் அதிகரித்து வரும் ஊடுருவல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனா அதிகரித்துகொண்டு வரும் உறுதிப்பாடு குறித்து கடற்படைத் தளபதிகள் தீவிர ஆலோசனைகளை மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எதிா்காலத்திற்கு ஏற்ப தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்துடன், நம்பகமான ஒரு ஒருங்கிணைந்த படையாக இந்திய கடற்படை தன்னை கவனம் செலுத்தி வருவதோடு, இத்தைகைய பணிகளை திறம்படவும் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் வளா்ந்து வரும் கடல்சாா் நலன்களுக்கு ஏற்ப, இந்திய கடற்படை அதன் செயலில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் கண்டுள்ளது.
மேலும் பிரதமரின் ‘சாகா்’ (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி) தொலைநோக்குப் பாா்வையின் ஓா் அங்கமாக, 2020-21- இல் கரோனா நோய்த்தொற்றின் போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கும், அதற்கு அப்பாலுள்ள நாடுகளுக்கும் உணவு, மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டன. இவற்றின் மூலம் இந்தியக் கடற்படை, ‘விருப்பமான பாதுகாப்பு பங்குதாராா்’ என்ற நிலைப்பாட்டுடன் வளா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...