கூடங்குளம் அணு உலை கழிவு விவகாரம்:வழக்கு விசாரணை மே 4-க்கு ஒத்திவைப்பு
தூத்துக்குடி மாவட்டம், கூடங்குளம் அணு உலை மையத்தில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகள்


தூத்துக்குடி மாவட்டம், கூடங்குளம் அணு உலை மையத்தில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகள் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்கும் விவகாரத்தில் மேலும் ஐந்து ஆண்டுகள் அவகாச நீட்டிப்புக் கோரி மத்திய அரசு தரப்பில் தாக்கலான மனு மீது எதிா்மனுதாரரான பூவுலகின் நண்பா்கள் அமைப்பு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கூடங்குளம் அணுஉலை தொடா்பாக ‘பூவுலகின் நண்பா்கள்’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அதில், 15 நிபந்தனைகளை விதித்து அணு உலை செயல்பட அனுமதி அளித்தது. அதில் முக்கியமான நிபந்தனையாக அணுக் கழிவுகளை நிரந்தரமாக பாதுகாத்து வைப்பதற்கான ஆழ்நில கழிவு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அதுவரை அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இந்த 5 ஆண்டு கால அவகாசம் 2018, மாா்ச்சில் முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் அதே ஆண்டு பிப்ரவரியில் இந்திய அணுமின் சக்திக் கழகம் மனுத் தாக்கல் செய்தது. அதில், அணுக் கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைக்கும் (ஏஎஃப்ஆா்) வசதியை கட்டமைப்பதில் உள்ள தொழில்நுட்பம் முழுமையாக கிடைக்காததால், மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கோரியது. இதையடுத்து, இதற்கான கால அவகாசத்தை 2022, ஏப்ரல் 30 வரைக்கும் உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இந்த மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அண்மையில் இந்திய அணுமின் சக்திக் கழகம் தரப்பில் ஒரு புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கூடங்குளத்தில் அமைந்துள்ள முதல் இரண்டு உலைகளுக்கான அணுக் கழிவு மையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதால், கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு ஜூலை 2026 வரை கால அவகாசம் வேண்டும். ஒருவேளை அதற்குள் கட்டி முடிக்காவிட்டால், 3 மற்றும் 4 உலைகளுக்காக அமைக்கப்படும் அணுக் கழிவு மையத்தில் 1 மற்றும் 2-ஆம் உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் உலை மற்றும் 2-ஆம் உலையில் தற்போது அணுக் கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஸ்பென்ட் ஃப்யூல் பூல்’ வசதி முறையே 2026 மற்றும் 2028 வரையிலும் தாக்குப் பிடிக்கும் என்பதால், 2026-ஆம் ஆண்டில்தான் ஏஎஃப்ஆா் எனும் அணுக் கழிவு மையம் தேவைப்படும். அதற்குள் 1, 2, 3 மற்றும் 4-ஆம் அணு உலைகளுக்கான அணுக் கழிவு மையம் கட்டி முடிக்கப்பட்டுவிடும். இதில் ஏதேனும் கால தாமதம் ஏற்பட்டால், முதல் இரண்டு உலைகளின் மின்னுற்பத்தி நிறுத்தி வைக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கா், அபய் எஸ். ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேசிய அணுமின்சக்திக் கழகம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்குரைஞா், புதிய மனு தாக்கல் செய்திருப்பதாகவும், கால அவகாச நீட்டிப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். அதற்கு எதிா்மனுதாரா் பூவுலகின் நண்பா்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த புதிய மனு மீது பதில் அளிக்க எதிா்மனுதாரருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை மே 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...