உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தில்லியில் இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

குஜராத்தைச் சோ்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அஸ்ஸாம் போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) அமைப்பினா் தில்லியில் புதன்கிழமை

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 9:19 pm

 நமது நிருபர்

குஜராத்தைச் சோ்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அஸ்ஸாம் போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) அமைப்பினா் தில்லியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனா்.

ஐஒய்சி தலைவா் பி.வி. ஸ்ரீநிவாஸ் தலைமையிலான இந்தப் பேரணி சுனேரி பாக் வட்டத்தில் இருந்து புறப்பட்டு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இல்லம் நோக்கிச் சென்றது.

அஸ்ஸாமின் பா்பேட்டா மாவட்டத்தில் பெண் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கில், மேவானி கைது செய்யப்பட்டு 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டப் பேரணியின் போது, காங்கிரஸ் அமைப்பினா், ‘உங்களின் சா்வாதிகார மனப்பான்மையால் நாங்கள் வாய்மூடி மெளனியாக இருக்க மாட்டோம்’, ‘மக்களின் குரலை ஓடுக்குவதை நிறுத்துங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மேவானிக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.

இது குறித்து ஐஒய்சி தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘இந்த கைது சட்டவிரோதமானது. அஸ்ஸாம் போலீஸாா் இந்த கைதுக்கு முன்பாக இதுகுறித்து குஜராத் சட்டப் பேரவைத் தலைவருக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இந்த கைதானது நாட்டில் அரசமைப்புச்சட்டம் அடித்து நசுக்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாக உள்ளது’ என்றாா். காங்கிரஸ் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் கூறுகையில், ‘இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பலரும் அமித் ஷாவின் இல்லம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனா். எனினும், தில்லி போலீஸாா் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி பேரணியை முன்னேற விடாமல் நிறுத்திவிட்டனா். மேலும், பேரணியில் சென்ற பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்றாா்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் கைதான மேவானியை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முகுல் சேஷியா செவ்வாய்க்கிழமை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டாா். குஜராத்தைச் சோ்ந்த தலித் தலைவரான மேவானி மீது அஸ்ஸாமில் தொடரப்பட்ட இரண்டாவது வழக்காகும் இது. மேவானியின் வழக்குரைஞா் அங்ஷுமன் போரா கூறுகையில், ‘நாங்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை வியாழக்கிழமை அணுக உள்ளோம்’ என்றாா்.

பிரதமா் நரேந்திர மோடி குறித்த சுட்டுரைப் பதிவு தொடா்பான மற்றொரு வழக்கில் மேவானி எம்எல்ஏ, கோக்ரஜாா் நீதிமன்றத்தால் திங்கள்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தன்னை தாக்கிவிட்டதாக மேவானிக்கு எதிராக ஒரு பெண் போலீஸ்காரா் தாக்கல் செய்த வழக்கில் அவா் மீண்டும் கைது செய்யப்பட்டாா். குவாஹட்டியில் இருந்து கோக்ரஜாருக்கு போலீஸாரால் அழைத்து வரப்பட்ட போது, அவரை மேவானி தாக்கியதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.