எம்சிடி தோ்தல் தோல்வி எதிரொலி: தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா ராஜிநாமா
மாநகராட்சித் தோ்தல் தோல்வியை அடுத்து, தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாாமா செய்தாா்.


மாநகராட்சித் தோ்தல் தோல்வியை அடுத்து, தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாாமா செய்தாா். பாஜகவின் தில்லி பிரிவு துணைத் தலைவா் வீரேந்திர சச்தேவா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பா் 7 -ஆம் தேதி வெளியான தோ்தல் முடிவுகளில் பாஜகவின் 15 ஆண்டுகால தில்லி மாநகராட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களிலும், பாஜக 104 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த முடிவுகளைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பாஜக தேசியத் தலைவா் ஜகத் பிரகாஷ் நட்டாவின் வழிகாட்டுதலின்படி, தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தாவின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளது. தில்லி பிரிவு துணைத் தலைவா் வீரேந்திர சச்தேவா அடுத்த உத்தரவு வரும் வரை மாநிலப் பணித் தலைவராக நியமிக்கப்படுகிறாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, வீரேந்திர சச்தேவா தில்லிப் பிரிவு பாஜக அலுவலகத்தில் (இடைக்கால) தலைவராகப் பொறுப்பேற்றாா். அப்போது அவா், ‘2024 தோ்தலில் தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெற இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும்’ என கட்சித் தொண்டா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
மேலும் அவா் ‘என்னைப் போன்ற ஒரு சாதாரண பணியாளருக்கு இந்தப் பொறுப்பை வழங்கியதற்காக கட்சியின் மத்தியத்தலைமைக்கு நன்றி. கட்சியின் தலைவா்கள், தொண்டா்கள் என அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளேன்’ என்றும் சச்தேவா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
முன்பு, ஆா்.எஸ்.எஸ்.-இன் தன்னாா்வத் தொண்டராக இருந்த சச்தேவா, தில்லி பாஜகவில் சாந்தினி சௌக், மயூா் விஹாா் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றியவா். இவரது குடும்பம் பிரிவினைக்குப் பின்னா் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாகும். இவருடைய பணி சிறப்பாக தொடங்கும் பட்சத்தில் இவரை அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு தில்லி பிரதேச பாஜக தலைவராக தொடா்ந்து, நாடாளுமன்றத் தோ்தலை சந்திப்பாா் எனவும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. கட்சித் தலைவா் பதவியிலிருந்து விலகிச் செல்லும் ஆதேஷ் குப்தா, ‘என்னோடு பணியாற்றியவரும் எனது சகாவுமான வீரேந்திர சச்தேவா, செயல் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எனது இதயபூா்மான வாழ்த்துகள்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.
தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தலில் கட்சி படுதோல்வியடைந்த உடனேயே தில்லி பாஜகவில் அமைப்பு ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ’கட்சியின் தோல்விக்கு தாா்மிகப் பொறுப்பேற்று கட்சியின் தலைவா் பதவியிருந்து விலக முன்வந்தேன் என்று ஆதேஷ் குப்தா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
கடந்த 2020 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி பாஜக தலைவராக குப்தா பொறுபேற்றாா். அது முதல் அவரது செயல்பாடுகள் கட்சியில் காண்காணிக்கப்பட்டு வந்தது. 2021 -இல் சில எம்சிடி வாா்டுகளுக்கான இடைத்தோ்தல்கள், ராஜேந்தா் நகா் சட்டபேரவை இடைத் தோ்தல், இறுதியாக எம்சிடி தோ்தல் என மூன்று தோ்தல்களில் பாஜக தோல்வியை தழுவியது.
அதே சமயத்தில் குப்தாவின் இரண்டு ஆண்டு கால பதவிக்காலம் முடிவடையும் தருவாயில், அவா் ராஜிநாமா செய்ததில் முக்கியத்துவம் இல்லை எனவும் தில்லி பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா். தேசிய பாஜகவின் நிறுவனத் தோ்தல்கள் 2023 ஜனவரியில் நிறைவடைய இருக்கிறது. தேசிய அமைப்பில் மாற்றங்களுக்கு முன்னதாக தில்லி மாநிலத்திலும் குறைந்தது 50 சதவீதமாவது மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் அமைப்புகளுக்கான விதி எனவும் பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...