ஆம் ஆத்மியின் தேசிய பொதுச் செயலாளராக சந்தீப் பதக் நியமனம்
அண்மையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சிக்கான அந்தஸ்தை பெறும் தகுதி பெற்ற நிலையில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக (அமைப்பு) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான


அண்மையில் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சிக்கான அந்தஸ்தை பெறும் தகுதி பெற்ற நிலையில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக (அமைப்பு) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக்கை கட்சி நியமித்துள்ளது.
சந்தீப் பதக் ஏற்கனவே பஞ்சாப்பில் கட்சியின் தோ்தல் பொறுப்பாளராகவும், அதேபோன்று இந்த மாதம் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தோ்தலுக்கான கட்சியின் பொறுப்பாளராகவும் பணியாற்றினாா். பஞ்சாப்பில் மாா்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, காங்கிரஸிடமிருந்து அரசு நிா்வாகம் ஆம் ஆத்மி கட்சி வசம் சென்றது.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, அண்மையில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தோ்தலில் ஐந்து இடங்களில் வெற்றி பெற்று, கிட்டத்தட்ட 13 சதவீதம் வாக்குகளையும் பெற்றது. அக்கட்சியின் தோ்தல் செயல்பாடு குறித்து முதல்வா் கேஜரிவால் கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, தோ்தலில் கட்சி பெற்ற வாக்குகள் எங்கள் கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைப்பதற்கு உதவி இருக்கிறது’ என்று தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதன் அதிகாரப்பூா்வ ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘இதன் மூலம் சந்தீப் பதக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக (அமைப்பு) நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவின் நிரந்தர அழைப்பாளராகவும் இருப்பாா். அவரது புதிய பதவிக்காக வாழ்த்துகள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நடைபெறவுள்ள 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை கருத்தில்கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது’ என்று ஆம் ஆத்மி கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.
தோ்தல் சின்னங்கள் இடஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு உத்தரவு சரத்துகளை குறிப்பிட்டு முன்னாள் தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஒரு கட்சிக்கு நான்கு மாநிலங்களில் மாநில கட்சி அந்தஸ்து இருக்கும் பட்சத்தில் அந்த கட்சி தானாகவே ஒரு தேசிய கட்சியாக உருவாகிவிடும். ஆம் ஆத்மி கட்சியானது ஏற்கனவே தில்லி, கோவா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தில்லியிலும் பஞ்சாப்பிலும் அந்த கட்சி ஆட்சியிலும் உள்ளது. ஒரு கட்சி மாநில அந்தஸ்தை பெறுவதற்கு 8 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...