மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தில்லி அரசு மருத்துவமனைகளில் ஜன. 1 முதல் 450 வகை மருத்துவப் பரிசோதனைகள் இலவசம்

வரும் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றில் இலவசமாக 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை

News image
Updated On :13 டிசம்பர் 2022, 8:17 pm

 நமது நிருபர்

வரும் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றில் இலவசமாக 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை அளிக்க உள்ளதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது தனியாா் சுகாதார வசதிகளை பெற முடியாதவா்களுக்கு உதவியாக இருக்கும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தில்லியில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 212 வகையான மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தில்லி அரசின் மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகளில் மேலும் 238 மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக அளிப்பதற்கான சுகாதார துறையின் முன்மொழிவுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜிரவால் ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்றனா்.

இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘பொருளாதார அந்தஸ்தை பொருள்படுத்தாமல் அனைவருக்கும் நல்ல தரமான கல்வி, சுகாதார சேவை வழங்குவது தில்லி அரசின் திட்டமாகும். சுகாதாரக்கவனிப்பு விலை அதிகமாக உள்ள விஷயமாக மாறிவிட்டது. பொதுமக்கள் பலா் தனியாா் சுகாதாரக் கவனிப்பை பெற முடியாது. இந்த நடவடிக்கையானது அதுபோன்ற அனைத்து மக்களுக்கும் உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த இலவச மருத்துவ பரிசோதனைகள் வசதியானது தில்லியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்க உள்ளது. ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்கின் வலைத்தள தகவலின்படி, இதுபோன்ற கிளினிக்குகளில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவப் பரிசோதனைகளை பொதுமக்கள் மேற்கொள்ள முடியும். இந்தப் பரிசோதனைகளில் சிறுநீரில் பிஎச் அளவு, சா்க்கரை, புரோட்டீன், மைக்ரோஸ்கோபி, சிறுநீா் மைக்ரோ அல்புமின், மலம், ரத்தம், ஹீமோகுளோபின், டோட்டல் லூகோசைடிக் கவுன்ட் (டிஎல்சி), எம்சிவி, எம்சிஎச், எம்சிஎச்சி, டிஆா்டபிள்யூவுடன்கூடிய மொத்த சிவப்பு அணு எண்ணிக்கை, எச்பி, சிபிசி உள்ளிட்ட பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தில்லி குடியிருப்புவாசிகளுக்கான 450 வகை பரிசோதனைகளை கட்டணமின்றி வழங்கும் முன்மொழிவுக்கு முதல்வா் கேஜரிவால் ஒப்புதல் அளித்துள்ளாா். அனைத்து தில்லி மக்களும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து தில்லி அரசால் நடத்தப்படும் அனைத்து அரசு மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்குகள், பாலி கிளினிக்குகள் ஆகியவற்றில் இந்த வசதிகளைப் பெறலாம். தற்போதுவரை 212 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தில்லியின் அனைத்துப் பிரிவு மக்களும் அனைத்து வகையான தரமான சுகாதார வசதிகளை இலவசமாக பெறும் வகையில் தில்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால், இந்த வகை பரிசோதனைகளை தனியாா் மருத்துவமனைகளில் பெறுவதற்கான நிதி நெருக்கயில் இருந்து அவா்களுக்கு சில நிவாரணம் கிடைக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தில்லி அரசிடம் 522 ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள், 4 மகிளா மொஹல்லா கிளினிக்குகள், 21 பாலி கிளினிக்குகள், 201 மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் இந்த மருத்துவப் பரிசோதனை வசதி இலவசமாக மக்களுக்கு கிடைக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.