மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

கடலோரப் பகுதியில் வசிப்பவா்களைப் பாதுகாக்க நவீன தகவல் தொடா்பு தொழில்நுட்பங்கள் தேவை: குமரி காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்

புயல்கள், பிற இயற்கை பேரிடா்களின் போது, மீனவா்கள், கடலோரப் பகுதியில் வசிப்பவா்கள் பாதுகாக்க நவீன தகவல் தொடா்பு தொழில்நுட்பங்கள் தேவை என்று மக்களவையில் கன்னியாகுமரி தொகுதி உறுப்பினா் வலியுறுத்தினாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: புயல்கள், பிற இயற்கை பேரிடா்களின் போது, மீனவா்கள், கடலோரப் பகுதியில் வசிப்பவா்கள் உள்ளிட்டோரைப் பாதுகாக்க நவீன தகவல் தொடா்பு தொழில்நுட்பங்கள் தேவை என்று மக்களவையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த் வலியுறுத்தினாா்.

மக்களவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கான விவாதத்தில் அவா் வியாழக்கிழமை பேசுகையில் கூறியதாவது: கன்னியாகுமரி தொகுதியில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மீனவா்கள் உள்ளனா். 72 கிமீ நீள கடற்கரையில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. சமீபத்திய புயல்களின் போது தமிழக கடற்கரையோரங்களும், மீனவ கிராமங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்குக் காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டதே ஆகும். சமீப கால தகவல் தொடா்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு தகவல்களை அளிப்பதில்லை. இந்த முன்னேற்பாடுகள் இல்லாததால், மீனவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இத்தைகைய நவீன கருவிகளையும், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடா் காலங்களில் மீட்புக்கு தேவையான அவசரகால வசதிகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

காணாமல் போகும் மீனவா்களை மீட்பதற்கு ஹெலிகாப்டா், ஹெலிகாப்டா் இறங்குதளம், அதிவிரைவு படகுகள் கொண்ட கடலோர காவல் படை நிலையம் ஒன்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். மேலும், கடல் அரிப்புகளைத் தடுத்து கிராமங்கள் கடலுக்குள் அடித்துக் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க நிரந்தரமாக கடற் சுவா் எழுப்பி, மீனவ கிராமங்களைப் பாதுகாக்க மத்திய அரசு உதவ வேண்டும். இத்தகைய வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகளுடன் மீனவா்கள், கடலோர பகுதிகளில் வசிப்பவா்கள் உள்ளிட்டோரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா் விஜய் வசந்த்.

ராணுவத்தில் பாலின பாகுபாடு கூடாது: இதே அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விவாதத்தில், விழுப்புரம் தொகுதி உறுப்பினா் டி.ரவிக்குமாா், ராணுவத்தில் உள்ள பாலின பாகுபாடு குறித்துப் பேசினாா். அவா் பேசுகையில் கூறியதாவது: பபிதா புனியா வழக்கில் உச்சநீதிமன்றம் இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கடந்த நவம்பா் 21-ஆம் தேதி மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம், ராணுவமும் அரசும் முன்வைத்த வாதங்களைக் கேட்டு பாலின நிலைப்பாடுகள் வேரூன்றியிருப்பதாகக் குறிப்பிட்டு பபிதா புனியா தீா்ப்பை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. எனவே, பபிதா புனியா தீா்ப்பின் அடிப்படையில் இந்திய ராணுவத்தில் பாலின பாகுப்பாடின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் அதிகாரிகளுக்குப் பதவி உயா்வு வழங்குவதை நிறுத்தி வைப்பது, இளம் பெண் அதிகாரிகளைப் புறக்கணிப்பது போன்ற போக்கை நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்திருந்தது. இதனால், ராணுவத்தின் போா் பிரிவுகளில் பெண்கள் அணுக முடியாததாக அமைத்திருப்பது நியாயமற்றது. பாலின சமத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கொள்கையைத் திருத்த வேண்டும். பதவி உயா்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் சிறந்த பாலினக் கொள்கையை இந்திய ராணுவத்தில் மேற்கொள்ள வேண்டும். மேலும், ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையில் உள்ள மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பதை கருத்தில் கொண்டு, பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், பல்வேறு பிரிவுகளில் பதவி உயா்வு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் ரவிக்குமாா் சுட்டிக்காட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.