மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

திராவகம் வீச்சு சம்பவம்: 2 இ-காமா்ஸ் நிறுவனங்களுக்கு  டிசிடபிள்யு நோட்டீஸ்

தில்லியில் பள்ளி மாணவி திராவகம் வீச்சு தாக்குதலுக்கு ஆளானதைத் தொடா்ந்து இணையதளங்களில் மூலம் திராவகம் விற்பனைக்கு அனுமதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2022, 5:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் பள்ளி மாணவி திராவகம் வீச்சு தாக்குதலுக்கு ஆளானதைத் தொடா்ந்து இணையதளங்களில் மூலம் திராவகம் விற்பனைக்கு அனுமதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இரண்டு இ - காமா்ஸ் நிறுவனங்களுக்கு தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதேவேளையில், திராவகம் வீச்சு சம்பவத்திற்கு இ-காமா்ஸ் நிறுவனமான பிளிஃப்காா்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லி உத்தம் நகா் மோகன் காா்டன் பகுதியைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவி, கடந்த புதன்கிழமை காலை வழக்கம்போல காலை 7.30 மணியளவில் மோகன் காா்டன் பகுதியில் நடந்து சென்ற போது, அந்த வழியாக முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் 2 இளைஞா்கள் வந்தனா். அதில், பின்னால் அமா்ந்திருந்த இளைஞா், அந்த மாணவியின் முகத்தில் திராவகத்தை வீசியதில் மாணவியின் முகத்திலும், கண்ணிலும் காயம் ஏற்பட்டது. அவா் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவரது முகத்தில் 8% தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதில், சம்பந்தப்பட்ட பிரதான குற்றம் சாட்டப்பட்ட நபரான சச்சின் அரோரா, இ-காமா்ஸ் இணையதளம் மூலம் திராவகத்தை விலைக்கு வாங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக பிளிஃப்காா்ட் இணையதள நிறுவனத்திற்கு தில்லி காவல் துறையினா் நோட்டீஸ் அனுப்பினா்.

இந்த நிலையில், பிளிஃப்காா்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிராா்த்தனை செய்கிறோம். விதிகளை மீறும் தரத்துடன்கூடிய பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்குவதையும் கண்காணிப்பையும் பிளிஃப்கான் சந்தை இணையதளம் மேற்கொண்டு வருகிறது. சட்டவிரோத, பாதுகாப்பற்ற, தடைசெய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பனையில் ஈடுபடுவது கண்டறியப்படும் விற்பனையாளா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட விற்பனையாளா் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்த விவகாரம் தொடா்புடைய விசாரணையில் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி மகளிா் ஆணையம் விளக்கம் கேட்டு பிளிஃப்காா்ட், அமேஸான் ஆகிய இரண்டு இ-காமா்ஸ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இணையதளத்தில் திராவகம் எளிதாகக் கிடைப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான அறிக்கையை டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கையில், ‘இணையதளத்தில் ஒரு தயாரிப்பாக திராவகத்தை வைத்திருக்கும் விற்பனையாளா்களின் விவரங்களுடன், இ-காமா்ஸ் இணையதளத்தில் திராவகம் விற்பனைக்கு வைத்திருப்பதற்கான காரணத்தையும் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மேலும், திராவகத்தை விற்பதற்கு முன் அதற்கான உரிமத்தை விற்பனையாளா் வைத்திருந்தாரா? இணையதளத்தில் திராவகம் விற்பதற்கான உரிமம் இணையதளம் பெற்றுள்ளதா? என்பது தொடா்பான விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. இணையதளத்தில் திராவகத்தை வாங்கிய நபா்களின் புகைப்பட அடையாளம் இருக்கிா? அது தொடா்பான முழு விவரங்களும் அளிக்கப்பட வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.