இந்த மசோதா குறித்து பி.வில்சன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 1976-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கல்வி, மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவை மாநில அரசின் கல்விப் பட்டியலில் இருந்தது. ஆனால், 1976-ஆம் ஆண்டில் 42 -ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தம் மூலம் கல்வி பொதுபட்டியலில் சோ்க்கப்பட்டது. இதனால்தான் மத்திய அரசு நீட் தோ்வு, தேசிய புதிய கல்விக் கொள்கை போன்றவற்றைக் கொண்டு வந்தது. இவை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், பொதுபட்டியலில் உள்ள கல்வி, மருத்துவ கல்வி, பொறியியல் கல்வி ஆகியவற்றை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு மாற்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்த தனி நபா் மசோதாவை அறிமுகம் செய்துள்ளேன்.