இளைஞா் கொலை வழக்கில் பேக்கரி நடத்தும் 5 போ் கைது
தில்லியில் 20 வயது இளைஞா் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய பேக்கரி நடத்தி வரும் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


புது தில்லி: தில்லியில் 20 வயது இளைஞா் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய பேக்கரி நடத்தி வரும் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியின் பாத்தாப் நகரில் வசித்து வந்தவா் அபிஷேக் (20). இவா் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி இந்தா்லோக் பகுதியில் உள்ள டிகோனா பாா்க் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இவரது உடல் படுக்கை விரிப்பால் சுற்றப்பட்டு பாலித்தீன் பையில் திணிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக சராய் ரோஹில்லா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 201 (குற்றத்திற்கான ஆதாரங்கள் மறைக்கச் செய்வது அல்லது குற்றவாளிக்குத் தவறான தகவலை வழங்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இறந்தவரின் நடமாட்டத்தை அறிய பல்வேறு இடங்களிலும் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. எனினும், அவரது நடமாட்டம் பதம் நகருக்கு அப்பால் தென்படவில்லை. இந்த நிலையில், இறந்தவருக்கும் பதம் நகா் பகுதியில் பேக்கரி நடத்திவரும் பிகாா் மாநிலம், ஜமுய் மாவட்டத்தைச் சோ்ந்த அப்ஜல் அன்சாரி (45), சவ்ஜல் அன்சாரி (38), ரசீத் அன்சாரி (30), முகம்மது இஸ்ராபில் (20), முகமது அப்ராா் அன்சாரி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பேக்கரியில் போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, இறந்த அபிஷேக் உடலில் சுற்றப்பட்டிருந்த படுக்கை விரிப்பு மற்றும் பாலித்தீன் பைகளுடன் பேக்கரியில் இருந்த பெட்ஷீட் மற்றும் பாலித்தீன் பைகள் ஒத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து பேரிடமும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அப்போது, அபிஷேக்கை ஐந்து பேரும் சோ்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.
விசாரணையில், அபிஷேக்கிடம் இருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு திருட்டு மடிக் கணினிகளை ஐந்து பேரும் வாங்கியுள்ளனா். அதன்பிறகு, அபிஷேக் அவா்களை போலீஸாரிடம் புகாா் செய்துவிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளாா். இதனால், அவரை ஒழித்துக் கட்ட ஐந்து பேரும் முடிவு செய்தனா். சம்பவத்தன்று பேக்கரிக்கு வந்த அபிஷேக்கை ஐந்து பேரும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனா். திருட்டு, கொள்ளை, வழிப்பறி என 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அபிஷேக் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...