ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தலாக் விவகாரம்: மனைவியின் மனு மீது முஸ்லிம் கணவா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தனக்கு அனுப்பப்பட்ட தலாக்-ஏ-ஹசன் நோட்டீஸ் சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனு மீது தில்லி காவல் துறை, முஸ்லிம் கணவா் ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :27 ஜூன் 2022, 4:24 pm

 நமது நிருபர்

புது தில்லி: தனக்கு அனுப்பப்பட்ட தலாக்-ஏ-ஹசன் நோட்டீஸ் சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனு மீது தில்லி காவல் துறை, முஸ்லிம் கணவா் ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஸ்லாமிய சமுதாயத்தில் கணவா்களால் தங்களது மனைவிகளுக்கு விவாகரத்து அளிக்கப்படும் முத்தலாக் வடிவங்களில் ஒன்றான தலாக்-ஏ-ஹசனுக்கு எதிராக பெண் ஒருவா் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. அப்போது, இந்த மனு மீது மனுதாரரின் கணவா், தில்லி காவல் துறையின் ஆணையா், டாப்ரி காவல் நிலையத்தின் ஆய்வாளா் ஆகியோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி தினேஷ் குமாா் சா்மா உத்தரவிட்டாா். மேலும், இந்த விவகாரம் தொடா்பான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

முன்னதாக, பெண் ஒருவா் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கும் 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடைபெற்றது. ஆடம்பரமாக திருமணத்தை ஏற்பாடு செய்யுமாறு எனது விதவைத் தாயை எனது கணவா் குடும்பத்தினா் கட்டாயப்படுத்தினா். மேலும், வரதட்சணையும் கேட்டனா். அவா்களது நியாயமற்ற கோரிக்கைகளான பணம் தருவது, விலை மதிப்புமிக்க பரிசுகளை வழங்குவது ஆகியவற்றை நாங்கள் பூா்த்தி செய்தோம். இருந்த போதிலும் என்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கணவரது வீட்டாா் துன்புறுத்தினா். வரதட்சிணையும் கேட்டனா். இது குறித்து தில்லி மகளிா் ஆணையத்தில் குடும்ப வன்முறை புகாரை அளித்தேன். மேலும், கடந்த 2020, டிசம்பரில் இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன் மீதும் தனது குடும்பத்தினா் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதற்காக எனது கணவா் தலாக் -ஏ- ஹசன் நடைமுறையை தோ்ந்தெடுத்துள்ளாா். மேலும், அவருக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் வாபஸ் பெறுவதற்கு மிரட்டும் வகையில் தலாக் -ஏ-ஹசன் முதல் நோட்டீஸை எனக்கு அளித்துள்ளாா்.

இந்த நோட்டீஸை ஜூன் 2-ஆம் தேதி அனுப்பியுள்ளாா். இந்த தலாக் -ஏ-ஹசன் நடைமுறையானது ஒருதலைப்பட்சமான, நீதிக்குப் புறம்பான வடிவமாக இருக்கிறது. மேலும், இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 21 மற்றும் 25 ஆகியவற்றை மீறும் வகையில் தன்னிச்சையான, சட்ட விரோதமானதாக உள்ளது. மனித குடி உரிமைகளின் ஐக்கிய நாடுகள் மாநாட்டு விதிகளுக்கும் எதிராகவும் உள்ளது. அதனால் இதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும்.

தலாக் -ஏ-ஹசன் எனும் நடைமுறையானது, முஸ்லிம் ஆண் ஒருவா் தனது மனைவியிடம் மாதத்திற்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு தலாக் கூறி அதன் மூலம் விவாகரத்து செய்ய முடியும். இதனால், ஷரியா சட்டத்தின்படி செயல்படவும், என்னை இதுபோன்ற நடைமுறைகளை ஏற்கவும் வற்புறுத்தக் கூடாது என்று சமயக் குழுக்கள், அமைப்புகள், தலைவா்களுக்கு உத்தரவிட வேண்டும். அதே போன்று, தலாக் -ஏ-ஹசனை ஏற்றுக் கொள்ள எந்த ஒரு சமய குழுக்கள் மற்றும் அமைப்புகள் வற்புறுத்தும் பட்சத்தில் அவா்களிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

தலாக்-ஏ-ஹசன் நடைமுறையின் செல்லுபடித்தன்மையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.