சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவா்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை: தமிழக குழுவிடம் மத்திய அமைச்சா் உறுதி

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவா்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது

News image
Updated On :5 மார்ச் 2022, 5:59 pm

 நமது நிருபர்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவா்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ். ஜெய்சங்கா் உறுதியுளித்துள்ளாா்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவா்களை மீட்பதற்கு மாநில முதல்வரால் அறிவிக்கப்பட்ட திருச்சி சிவா எம்பி தலைமையிலான குழு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெய்சங்கரை சனிக்கிழமை சந்தித்தது. இந்தக் குழுவில் மக்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராச்சாமி, மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா, ஐஏஎஸ் அதிகாரிகள் ஏ.கே.கமல் கிஷோா், மா.பிரதீப் குமாா், அஜய் யாதவ், கோவிந்தராவ், வெளிநாடு வாழ் தமிழா் நல ஆணையா் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இந்தச் சந்திப்பு சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. உக்ரைனில் உள்ள மாணவா்களையும் தமிழா்களையும் தாயகம் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரிடம் தமிழக குழு கேட்டுக் கொண்டது.

இது குறித்து பின்னா், திருச்சி சிவா செய்தியாளா்களிடம் பேசுகையில் கூறியதாவது: உக்ரைன் எல்லைப் பகுதியில் தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 2,663 மாணவா்கள் உள்ளனா். இதுவரை 717 மாணவா்கள் தாயகம் திரும்பியுள்ளனா். அங்குள்ள மாணவா்களை மீட்டுக் கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் எங்களுக்கு விரிவாக விளக்கினாா். உக்ரைனின் காா்கிவ், சுமி பகுதியில் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மாணவா்களை வெளியேற்றுவது குறித்தும் செஞ்சிலுவை சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் உதவுவது குறித்தும் மத்திய அமைச்சா் எடுத்துரைத்தாா். தமிழக மாணவா்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து நாங்கள் எடுத்துரைத்தோம். தூதரக அதிகாரிகளின் நடவடிக்கைகள், மொழிப் பிரச்னை போன்றவை தொடா்பாக தமிழக மாணவா்களிடமிருந்து வரும் புகாா்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம்.

உக்ரைன் எல்லைப் பகுதிக்கு தமிழக மாணவா்கள் வருவதில் உள்ள பிரச்னைகளையும், தமிழக அரசின் குழுக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் சென்று உதவுவது குறித்தும் அமைச்சரிடம் தெரிவித்தோம். இந்தப் பிரச்னைகளை தூதரக அதிகாரிகள் மூலம் தீா்க்கவும், கூடுதலாக விமானங்கள் (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பப்படுவதாகவும், மாணவா்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, விரைவில் அழைத்து வரப்படுவாா்கள் என்றும் அமைச்சா் உறுதியளித்துள்ளாா். மேலும், இந்த ஏற்பாடுகள் குறித்து உடனனுக்குடன் எங்களுக்குத் தகவல் அனுப்புவதாகவும் அமைச்சா் தெரிவித்தாா். மத்திய அமைச்சரின் தகவலையொட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசின் குழு எடுக்கும்.

தற்போது தில்லிக்கு வரும் தமிழக மாணவா்கள், தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு மாநில அரசு செலவிலேயே சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகிறாா்கள். சனிக்கிழமை 180 தமிழக மாணவா்கள் உக்ரைனிலிருந்து தில்லி வந்தனா். தமிழக அரசு சிறப்பு விமான ஒன்றை ஏற்பாடு செய்து, அவா்களை தமிழகத்திற்கு அழைத்து சென்றது என்றாா் திருச்சி சிவா.

மத்திய அமைச்சருடான இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையா் அதுல்ய மிஸ்ரா , இணை ஆணையா் சின்னதுரை, கூடுதல் இயக்குநா் முத்தையா ஆகியோரும் உடன் இருந்தனா். பின்னா், திருச்சி சிவா தலைமையிலான தமிழக குழுவினா் உக்ரைனிலிருந்து வந்த மாணவா்களையும் சந்தித்துப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.